Tuesday, 10 July 2018

SPI PR Lok Ayuktha | ”அட்டக் கத்தி” லோக் ஆயுக்தா !!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி, 10-07-2018

87545-80274, 8754580270

 

"அட்டக் கத்தி" லோக் ஆயுக்தா !! 
  
இலஞ்ச - ஊழல்                            
      அறுவை சிகிச்சை செய்யுமா ??

 

இலஞ்ச-ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உட்பட அனைத்து ஊழல் ஒழிப்பு அமைப்புகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன. ஆனால், நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டமானது ஆட்சியாளர்களைப் பாதுகாக்க, அவர்களின் ஊழல்களை மூடிமறைக்கக் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகவே உள்ளது. 

 

தமிழகத்தில் புரையோடிப்போன புண்ணாக உள்ள இலஞ்ச-ஊழலை அறுவை சிகிச்சையால் சரிசெய்ய "லோக் ஆயுக்தா" சட்டம் என்ற கூர்மையான கத்தி தாருங்கள் என்று கேட்டால், அரசு "அட்டக் கத்தியை" வழங்கியுள்ளது.

 

ஏன் லோக் ஆயுக்தா சட்டம் ஒரு "அட்டக் கத்தி" ??  காரணங்கள் 10:

1.    வழக்குத் தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது: பரிந்துரை பணி மட்டுமே  செய்யும்:


முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள் லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித் தரும்வரையான பணிகளை லோக் ஆயுக்தா செய்யாது. அதாவது, தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப்பிரிவு(Inquiry Wing) மட்டுமே உள்ளது வழக்குத்தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது.  இப்போதுள்ள சட்டப்படி ( CHAPTER 6, பிரிவு 7(a)) , லோக் ஆயுக்தாவின் விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெரியவந்தாலும், அதுகுறித்தான விசாரணை அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் "பரிந்துரைப்" பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும். முதலமைச்சர் மீதான விசாரணை அறிக்கையை(அவர் ஊழல் செய்திருக்கிறார் என்ற ஆதாரங்களோடு) கவர்னருக்கு அனுப்பி வைக்கும். உயரதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது அரசுக்கு(??) அனுப்பி வைக்கப்படும். இந்தப் பரிந்துரை அறிக்கை மீது கவர்னரோ, முதலமைச்சரோ, அரசோ என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது நடவடிக்கை எடுக்கும்.? எடுக்காவிட்டால் லோக் ஆயுக்தா என்ன செய்யும் என்ற எந்தக் கேள்விக்கும் நம் சட்டத்தில் பதில் இல்லை. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா(Chapter 14), கேரளா(Chapter 15) மற்றும் சமீபத்தில்(2015) லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்த இமாசலப் பிரதேஷ்(4) போன்ற பல மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழக்குத் தொடரும் பிரிவு உள்ளது. விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அம்மாநிலச் சட்டங்களில் வழிவகை உள்ளது. தமிழக "அட்டக்கத்தி" லோக் ஆயுக்தா சட்டத்தில் இது இல்லை. ஊழல் புகார் மீது விரிவாக விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைக்காக "பரிந்துரை" அனுப்பும்  "பெரும்"பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும்.

 

 

2.     இலஞ்ச ஒழிப்புத்துறை ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது மறுகட்டமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்:  மாநில அரசின் குறுக்கீடு அதிகமுள்ள "இலஞ்ச ஒழிப்புத்துறையை" லோக் ஆயுக்தாவின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலஞ்ச ஒழிப்புத்துறையை ஒழித்துவிட்டு, அதன் பணிகளை முழுமையாக "லோக் ஆயுக்தாவே"  செய்யும் என்று கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இலஞ்ச ஒழிப்புத்துறையை லோக் ஆயுக்தாவிற்கு ஒரு இணையான துறையாக தொடர வழி செய்கிறது தமிழக லோக் ஆயுக்தா சட்டம். இது சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும்  போக்கில் உள்ளது.

 

 

3.     பெரிய ஊழல்களையெல்லாம் விசாரிக்காது ?   உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்தங்கள், பணி நியமனங்கள், பணி மாற்றம் போன்ற இலஞ்ச-ஊழல் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களை லோக் ஆயுக்தா விசாரிக்காது என்பது ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் அப்பட்டமான முயற்சி. பலநூறு கோடிகள் ஊழல் நடைபெறும் பணிகளுக்கு விலக்களித்துவிட்டு சிலநூறு ரூபாய் இலஞ்சம் வாங்கப்படும் சில்லறை பிரச்னைகளை மட்டும்தான் லோக் ஆயுக்தா விசாரிக்குமா ?

4.     ஊழல் புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்களை பதவி விலகச் சொல்லிப் பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் லோக் ஆயுக்தா சட்டத்தில் விலக்கு : (  தமிழக லோக் ஆயுக்தா சட்டம் 2018, பிரிவு 26 ) -   முதலமைச்சர், அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரானாது விசாரிக்கப்பட்டிருக்கொண்டிருக்கும் நிலையில், அப்புகாரில் முகாந்திரம் உள்ளது என்று லோக் ஆயுக்தா கருதுமானால் அம்முதல்வரையோ, அமைச்சரையோ, பதவியிலிருந்து விலகச் சொல்லி பரிந்துரை அளிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவிற்கு அளிக்கப்படாதது ஏன்..?  யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா பரிந்துரைக்கலாம் என்ற  பட்டியலிலிருந்து  முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் விலக்கு கொடுக்கப்பட்டது ஏன் ?  ( அரசு ஊழியர்களின் மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் அவர்களை தற்காலிக பணிநீக்கம், இடமாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரம் உள்ளது). கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வர், அமைச்சர்களை பதவி விலகச் சொல்லப் பரிந்துரைக்கும் சட்டப்பிரிவு(பிரிவு 13) உள்ளது.

 

5.     பொய்ப்புகார் மீது 1 இலட்சம் அபராதம் ஓராண்டு சிறை:  ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டால், இலஞ்ச-ஊழல் புகார் கொடுக்கும் தனிநபர்கள், பொதுநல அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது தமிழக லோக் ஆயுக்தா சட்டம்.

 

6.      லோக் ஆயுக்தா செயலாளர் நியமனம் : அரசாங்கம் தரும் பட்டியலிலிருந்துதான் லோக் ஆயுக்தாவின் செயலாளர் நியமனம் செய்யப்படவேண்டும் என்பது லோக் ஆயுக்தாவின் தன்னாட்சியை தட்டிப்பறிக்கும் செயல்

 

7.     லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்கள்:   எப்போது நியமிக்கப்படுவார்கள் என்பதற்கு சட்டத்தில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படாததால் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை ஆண்டுகணக்கில் இழுத்தடிக்க அரசுக்கு வாய்ப்பாக அமையும். இந்நியமனங்களுக்கு காலவரையறை செய்யப்படவேண்டும்.

 

8.     Suo Motu அதிகாரம்: தானே முன்வந்து இலஞ்ச-ஊழல் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது( suo Motu),  அமைச்சர்கள், உயரதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை செய்வது(ரெய்டு) போன்ற அவசியமான அதிகாரங்கள் குறித்த விவரங்கள் சட்டத்தில் இல்லை.  

 

9.     சொத்துவிவரம் தாக்கல்:  முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துவிவரங்களை குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்கு ஒரு முறை( எ.கா: ஆண்டுக்கு ஒருமுறை) தாக்கல் செய்யவேண்டும் என்ற பிரிவு, பல மாநிலங்களில் உள்ளது. தமிழகச் சட்டத்தில் இது இல்லை.

 

10.   சேவை குறைபாடு  குறித்து:   பல மாநிலங்களில்(ஆந்திரா, கர்நாடகா) லோக் ஆயுக்தாவானது அரசு தரும் சேவைகளில்( குடிநீர், மின்சார இணைப்பு..பிற) ஏற்படும் குறைபாடுகள் குறித்து விசாரிக்கும் ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் இப்பிரிவே இல்லை.

 
                                                                                                செந்தில் ஆறுமுகம்,
                                மாநிலப் பொதுச்செயலாளர்,

சட்ட பஞ்சாயத்து இயக்கம், (87545 80274, 87545 80270)


​ 


Sunday, 8 July 2018

SPI PR Lok Ayukta | முதல்வரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா வருமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (09-07-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

 

முதல்வரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா வருமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி


Satta Panjayathu Iyakkam has been urging the government to pass and constitute a strong Lok Ayuktha to tackle the corruption in the state. Edapadi pazhanisamy led Tamilnadu government is about to pass a Lok Ayuktha bill in Tamilnadu assembly without any public consultation and Assembly discussions. SPI strongly condemns the government for being undemocratic and lists the important features of Lok Ayuktha which are necessary to make it a strong indepndent anti corruption body for the state.


இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில் தமிழகம் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மட்டுமே லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் கூட செய்யாத மாநிலங்கள்! பாஜக தலைவர் அஸ்வனி குமார் உபாத்யாய் (மத்திய பாஜக அரசு லோக்பால் தலைவரை 4 ஆண்டுகளாக நியமிக்கவில்லை!) தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் (மே 23 2018), லோக் ஆயுக்தா அமைக்காத/நியமிக்காத  மாநிலங்களை கடுமையாக சாடியது. ஜூலை 10ஆம் தேதி மீண்டும் வழக்கை விசாரிக்க இருக்கும் நிலையில் , தமிழக அரசு அவசரகதியில் இன்று லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஊழல் செய்து தண்டிக்கப்படவேண்டிய அரசியல்வாதிகளே, இன்று லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் இயற்ற இருக்கிறார்கள் என்பது தான் தமிழக ஜனநாயகத்தின் நிலை. உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு பிறகு எந்தவித கருத்துகேட்பு கூட்டம் நடத்தாமல், சட்டமன்றத்தில் விசாரிக்க போதிய அவகாசம் கொடுக்காமல் சட்டம் நிறைவேற்றப்படுவது நல்ல ஜனநாயகத்திற்கு அழகல்ல. லோக் ஆயுக்தா சிறப்பாக செயல்பட தேவையான விஷயங்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

 

முதல்வர் முதல் கவுன்சிலர் வரை: தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியன் வரை அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை விசாரிக்கும் முழு அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா வேண்டும்.

 

பதவி விலக சொல்லும் அதிகாரம் வேண்டும் : முதல்வர்/அமைச்சர்கள் மீது வரும் குற்றசாட்டுகளை விசாரிக்கும் லோக் அயுக்தா, Prima facie இருக்கும் பட்சத்தில் முதல்வரை பதவியில் இருந்து விலகி இருக்க உத்தரவிடும் அதிகாரம் லோக் அயுக்தாவிற்கு தேவை.

 

6 மாதத்திற்குள் விசாரணை முடியவேண்டும் : லோக் அயுக்தாவிற்கு வரும் வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவேண்டும்.

 

புதிய புலனாய்வு பிரிவு : தமிழக அரசுடன் சம்மந்தப்படாத புதிய புலனாய்வு பிரிவை ஏற்படுத்தவேண்டும். மாநில அரசுக்கு அஞ்சாமல் இருக்கும் லோக் ஆயுக்தா போலீஸ்/புலனாய்வு பிரிவு இருந்தால் மட்டுமே, லோக் அயுக்தாவால் சிறப்பாக செயல்பட முடியும்.

 

நிதி, நியமன (லோக் ஆயுக்தா) சுதந்திரம் : லோக் ஆயுக்தா சிறப்பாக செயல்பட அதன் தலைவரை நேர்மை & சுதந்திரமான முறையில் தேர்ந்தேடுக்கும் வகையில் சட்டம் அமையவேண்டும். மாநில அரசின் கைபாகையாக வைத்துக்கொள்ளும் வகையில் சட்டம் இருக்க கூடாது.

 

ஊழல் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பிப்ரவரி 2,2016 அன்று ஒரு விநோதமான அரசாணையை வெளியிட்டு இருந்தது. அந்த அரசாணைப்படி, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேல் வந்த ஊழல் - முறைகேடு குற்றசாட்டுகளை விசாரிக்க வேண்டுமானால், தமிழக அரசிடம் அனுமதி பெற்றுருக்கவேண்டும். இது போன்ற சர்வாதிகார விதிகள் இல்லாத சுதந்திரமான லோக் ஆயுக்தா சட்டம் தேவை.

 

இது போன்ற முக்கியமான விஷயங்கள் இல்லாத லோக் ஆயுக்தா பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மட்டுமே இருக்கும். இது தவிர ஊழலை ஒழிக்கவும், லோக் அயுக்தாவை அடிகாரப்படுத்த தற்போது செயல்பட்டுவரும் லஞ்சத்துறை ஆணையத்தை (DVAC) இழுத்துமூடவேண்டும். 

 

DVAC கலைக்கப்படவேண்டும்

தமிழக அரசியல்வாதிகளின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் லஞ்ச ஒழிப்பு மற்றும் விஜிலென்ஸ் அமைப்பை உடனடியாக கலைக்கவேண்டும் அல்லது லோக் அயுக்தாவுடன் இணைக்கவேண்டும் . சுமார் 3 ஆண்டுகளுக்கு எந்த (2017 ஜூலை வரை) ரெய்டுகளை நடத்தாமல் இந்த அமைப்பு தூங்கி வருகிறது. இந்த அமைப்பை யாரும்  கேள்விகேட்க கூடாது என்பதற்காக 2008ஆம் ஆண்டு (GO NO 158) மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கமுடியாது. லோக் ஆயுக்தா செய்யும் அதே வேலையே செய்வதால் DVAC தேவையற்றது, கலைக்கப்பட/இணைக்கப்பட(லோக் அயுக்தாவுடன்) வேண்டும்.

 

கர்நாடகா லோக் அயுக்தாவின் அவலநிலை:

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பதவியை காவு வாங்கிய கர்நாடக மாநில லோக் ஆயுக்தா இன்று நீர்த்து போயுள்ளது. பாஜகவின் முதல்வரை பதவியிலுருந்து விரட்டிய லோக் அயுக்தாவை நீர்த்துபோகவைத்தது பின்னால் வந்த  காங்கிரஸ் அரசு என்பது கொடுமையிலும் கொடுமை. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2016ஆம் ஆண்டு Anti corruption bureau என்ற அமைப்பை ஏற்படுத்தி லோக் அயுக்தாவை பல் இல்லாத ஆணையமாக மாற்றிவிட்டனர். கர்நாடக நிலைமை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க லோக் அயுக்தாவிற்கு சமமாக அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு அமைப்பையும் ஏற்படுத்தமுடியாத அளவிற்கு சட்டத்தில் வழிவகை செய்யவேண்டும்.

 

அவசரகதியில் சட்டம்:

தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்படும் முறையை சீரமைக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது சம்மந்தமாக (05.01.2018 & 28.05.2018 அன்று இயக்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுருந்தது) மக்கள், துறைசார்ந்த வல்லுநர்கள், அறிவுஜீவிகளிடம் கருத்துகேட்ட பின், வரைவு மசோதாவை தயாரிக்கவேண்டும் என்றும், அணைத்து மசோதாக்களையும் சட்டமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்திய பிறகே நிறைவேற்றவேண்டும் என்று இயக்கம்  வலியுறுத்தி வருகிறது.

 

எவ்வித அறிவிப்பு மற்றும் கருத்துகேட்பு இல்லாமல் லோக் ஆயுக்தா சட்டத்தை அரசு கடமைக்கு நிறைவேற்ற முற்படுகிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து சர்வாதிகார போக்குடன் நடந்துவரும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை இயக்கம் கண்டிக்கிறது. முழு அதிகாரம் உள்ள  லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றுவதுடன் நில்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் அரசிதழில் வெளியிட்டு, அமைப்பை உருவாக்கி, தலைவரை நியமிக்கவேண்டும். ஊழலுக்கு லோக் ஆயுக்தா சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்று நம்பியிருக்கும் மக்களின் நம்பிக்கை பொய்த்துப்போககூடாது என்பதே இயக்கத்தின் விருப்பம். முறையான லோக் ஆயுக்தா அமைந்து ஊழலை ஒழிக்கும்வரை இயக்கத்தின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்!

 

 

 

                                                                                                                              சிவ.இளங்கோ

                                                                                               தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                                                                                                    Contact Number: 87545-80270