Tuesday, 22 January 2019

SPI Press Release | தமிழ்நாடு முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு பெரிய அளவில் நன்மை இல்லை

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (23-01-2019)

தொடர்பு எண்கள் :  88704 72179 / 87545 80270

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு பெரிய அளவில் நன்மை இல்லை

 

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதன்முறையாக 2015இல் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்று அறிவிக்கபட்டு இருந்தாலும், பல அரசியல் காரணங்களால் 4 வருடத்திற்கு பிறகு 2019இல் நடத்தப்படுகிறது. 78 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட 2015 முதலீட்டாளர்கள் மாநாட்டால்  அடைந்த பயன்களை வெளியிட தயங்கும் தமிழ்நாடு அரசு, 73 கோடி ரூபாய் செலவில் அடுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று மற்றும் நாளை (23&24 ஜனவரி 2019) சென்னையில் நடத்த இருக்கிறது.

 

2015 முதலீட்டாளர்கள் மாநாடு:

2015இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாக தமிழக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. 2015இல் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசுடன் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டன. அதில் 22 நிறுவனங்கள் மட்டுமே சோதனை அல்லது உற்பத்தியை 2018 டிசம்பர் வரை தொடங்கியிருக்கிறது (இயக்கத்தின் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு தமிழக அரசு இப்புள்ளி விவரங்களை அளித்துள்ளது). 4 வருட காலத்தில், 5இல் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை தொடங்கியிருக்கிறது என்பது தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய சாதனை அல்ல.

 

அதே போல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட 98 நிறுவனங்களில், 64 நிறுவனங்களின் 62378 கோடி அளவிலான முதலீடுகள் மட்டுமே செயலாக்கத்தின் ஏதாவது ஒரு நிலையிலாவது இருக்கிறது என்று தமிழக அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில், மிக குறைவான (20000 கோடி) முதலீடுகள் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன என்று பல பொருளாதார வல்லுனர்களின் கருத்துகளை அரசின் ஆர்.டி.ஐ பதில் உறுதிப்படுத்தியுள்ளது. 2015 முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பயன்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கேட்டும், அரசு செவிசாய்க்கவில்லை.

 

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளாமல், 2015 ஜூலை முதல் 2018 மார்ச் வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் அளவு 14,153 கோடி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் மாநாட்டால் மிகப்பெரிய முதலீடுகள் தமிழகத்திற்கு எதுவும் வந்துவிடவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

 

தவறான நேரத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு:

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பல முறை தள்ளிவைக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 2019இல் நடத்த திட்டமிடப்பட்டது. வைப்ரன்ட் குஜராத் எனப்படும் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு 2003 முதல் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.9வது வைப்ரன்ட் குஜராத் மாநாடு கடந்த வாரம் வழக்கம் போல் நடைபெற்றது. ஒரு வாரத்திற்கு முன்னர் வைப்ரன்ட் குஜராத் மாநாட்டில் பெரும்பாலான வெளிநாட்டு  முதலீட்டாளர்கள் கலந்துகொண்டதால், மீண்டும் இந்தியா  (தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு) வர தயங்குவார்கள். ஏற்கனவே ஆட்சியில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலையில், பாராளுமன்றம் தேர்தல் நடக்கும் நேரத்தில் முதலீடுகளை பெரிய அளவில் செய்ய நிறுவனங்கள் தயங்கும் என்பதை கணக்கில் கொள்ளாமல் தமிழக அரசு முடிவெடுத்துவிட்டது.

 

2019 முதலீட்டாளர்கள் மாநாடு:

சமீபத்தில் நடந்த ஒடிஷா முதலீட்டாளர்கள் மாநாட்டில்  (ஒடிஷா காண்கிளைவ்) 4.19 லட்சம் கோடி முதலீடுகளை அம்மாநிலம் ஈர்த்துள்ளது. ஆனால் ஒடிஷாவை விட பல மடங்கு முன்னேறிய மாநிலமான தமிழகம், 2.52 கோடி அளவிலே 2ஆம் முதலீட்டார்கள் மாநாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் பல நிறுவனங்களுடன் ஏற்கனவே முடிவுசெய்த ஒப்பந்தங்களை மீண்டும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்து இட இருக்கிறார்கள் (உதாரணம்: ஹ்யுண்டாய் நிறுவனம் நவம்பர் 2018இல் தமிழகத்தில் 7000 கோடி அளவிலான முதலீடுகளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது). இதனால் உண்மையாக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்திற்கு கிடைக்கவிருக்கும் பலன்கள் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 

பெயரளவிற்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடப்பதால் தமிழ்நாட்டிற்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர எதுவும் கிட்ட போவதில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்னர், சில மாநிலங்கள் மட்டுமே நடத்தி வந்த முதலீட்டார்கள் மாநாட்டை, இன்று இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் நடத்த ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் முதலீட்டளார்கள்களின் கவனத்தை ஈர்க்க பல விஷேச நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலுங்கானா முதலீடுகளை ஈர்க்க கடந்த சில ஆண்டுகளாக பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவம்பர் மாதம் (2018) ஒடிஷா மாநிலம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியிருந்தாலும், குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரும் தொழில் நிறுவனங்கள் வரும் என்பதால், குஜராத்தில் மீண்டும் ஒரு முறை ஒடிஷா அரசு மினி முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறதுஇது போல் தொடர்ந்து முயற்சி செய்யாமல், சம்பிரதாயத்திற்கு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் எந்த பலனும் கிடைக்காது.

 

தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது பாராட்டப்படவேண்டும். ஆனால் சீரிய முயற்சிகள் இல்லையெனில், நல்ல நோக்கங்கள் நிறைவேற வாய்ப்பில்லை. அரசின் நல்ல நோக்கத்தை நிறைவேற்ற, இயக்கம் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டு அரசு சிறப்பாக செய்லபடவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

செந்தில் ஆறுமுகம்

பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண் : 88704 72179