சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்தி (29-05-2019)
தொடர்பு எண்கள் : 87545 80274 / 99441 88941
கர்நாடக அணைகள் நிறைந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
தமிழகத்திற்கு கடந்தாண்டு 400 டிஎம்சி தண்ணீர் தந்த கர்நாடகா - மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பபெறவேண்டும் - தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மீண்டும் முதலில் இருந்து தொடங்குமா?
நேற்று (28-05-2019) நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்கப்படவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகனும் கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, "காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும்" என்ற பழைய துதியை மீண்டும் பாடியுள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் மிக அதிகப்படியான மழை பொழிந்ததால், தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடகாவிற்கு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.
400 டிஎம்சி திறந்துவிட்ட கர்நாடகா:
காவேரி ஆற்றில் கடந்தாண்டு கர்நாடக அரசால் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் பெற்றுள்ளது.
| மாதம் | திறந்துவிடவேண்டிய தண்ணீரின் அளவு (டிஎம்சி) | திறந்துவிட்டுள்ள தண்ணீரின் அளவு (டிஎம்சி) |
| June 2018 | 9.19 | 13.2942 |
| July 2018 | 31.24 | 124.6820 |
| August 2018 | 45.95 | 176.5020 |
| September 2018 | 36.76 | 31.5104 |
| October 2018 | 20.22 | 27.0188 |
| November 2018 | 13.78 | 14.5799 |
| December 2018 | 7.35 | 7.12 |
| January 2019 | 2.76 | 2.92 |
| February 2019 | 2.5 | 1.85 |
| March 2019 | 2.5 | 1.57 |
| April 2019 | 2.5 | 1.83 |
177 டிஎம்சி மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டிய கர்நாடகம், 400 டிஎம்சிக்கு அதிகமாக கடந்தாண்டு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. இது போக மாதவாரியாக திறந்துவிடவேண்டிய தண்ணீரையும், கிட்டத்தட்ட அனைத்து மாதங்களிலும் சரியாக திறந்துவிட்டுள்ளது. சம்பா,குறுவை சாகுபடியை இடர்பாடுகள் இன்றி மேற்கொள்ள, மாதவாரியாக சரியான தண்ணீர் அளவை திறந்துவிடவேண்டியது முக்கியம். கடந்த காலங்களில், வெள்ள சமயத்தில் மட்டும் தண்ணீரை திறந்துவிட்டு, சாதாரண மற்றும் வறட்சி காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிடாமல் கர்நாடகா முரண்டு பிடித்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைந்தது முதல் தற்பொழுது வரை சீராக கர்நாடகவிடமிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்துருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடிக்கவேண்டும் என்பது தான் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரார்த்தனையாக இருக்கிறது.
ஜூன் 12 மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை:
60 டிஎம்சி தண்ணீர் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணை திறப்பது மரபாக இருக்கிறது. தற்பொழுது மேட்டூர் அணையில் 18 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. கர்நாடகா ஜூன் மாதம் திறக்கவேண்டிய 9 டிஎம்சியை திறந்தால் கூட, மேட்டூர் அணையில் 30 டிஎம்சிக்கும் குறைவாக மட்டுமே தண்ணீர் இருக்கும். தற்பொழுது கர்நாடக அணைகளில் 15 டிஎம்சிக்கும் குறைவாக மட்டுமே தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
(கர்நாடக அணைகளின் உள்ள நீர் நிலவரங்களை கர்நாடக அரசு தெளிவாக 2-3 நாட்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறது (https://www.ksndmc.org/Uploads/RL.pdf). இதே போல் தமிழகத்தின் அணை நிலவரங்களையும் தெளிவாக சீரான இடைவெளியில் வெளியிடவேண்டும் என்று தமிழக அரசிற்கு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு மேற்கொள்ள தமிழக்தின் அனுமதியை பெறவேண்டும்:
காவேரி அணை மேல் எந்தவொரு அணை கட்ட வேண்டுமானால் தமிழகத்தின் அனுமதியை பெறவேண்டியது அவசியம். காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணை கட்ட முன்தயாரிப்பு பணிகள் மற்றும் ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகப்பெரிய சட்டமீறல். ஆய்வு மேற்கொள்ள கொடுக்கப்பட்டுருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும். இது போல் தமிழகத்திற்கு விரோதமாகவும் கர்நாடகாவிற்கு சாதகமாக நடக்காமல், மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு கேட்டு நடந்துருக்கவேண்டும்
கட்கரியின் முதல் கடமை:
17வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக, 28இல் 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில், பாஜக கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியுற்றதுடன், பாஜக அங்கம் வகித்த அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தமிழகத்தை பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் முன்னரே, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, 60000 கோடி செலவில் கோதாவரி-கிருஷ்ணா-காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜகவின் முக்கிய தலைவரும் முந்தைய ஆட்சியின் மத்திய நீர்வளத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி கூறியிருக்கிறார். 2018ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைக்காமல் இழுத்தடித்த பாஜக, தற்பொழுது தமிழகத்தின் மேல் திடீர் பாசம் காட்டுவது ஆச்சரியமளிக்கிறது. மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்தின் உரிமையை கர்நாடகா மறுத்தால், மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தின் உரிமையை பாகுபாடு பார்க்காமல் பெற்றுத்தரவேண்டும். கோதாவரி -காவேரி நதிகளை இணைக்கும் முன்னர் கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டிய நியாயமான தண்ணீரை பெற்றுத்தருவதே கட்கரியின் முதல் கடமையாக இருக்கவேண்டும்.
கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுமா அல்லது மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மதித்து மாதவாரியாக தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடகா அரசு தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கிறது. மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா அவமதிக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக இருக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
செந்தில் ஆறுமுகம்
பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு எண் : 87545 80274 / 99441 88941