Monday, 7 December 2020

உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோருதல் - தொடர்பாக.

பெறுநர்

 

முனைவர் இரா. பழனிசாமி, இ.ஆ.ப (ஓய்வு)

மாநில தேர்தல் ஆணையர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,

எண். 208/2, ஜவகர்லால் நேரு சாலை,

(கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்),

அரும்பாக்கம், சென்னை 600 106.

 

ஐயா,

 

பொருள்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நடைபெறவேண்டிய விடுபட்ட 9  மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோருதல் தொடர்பாக.

 

வணக்கம்! தமிழகத்தில் உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு களப்பணிகள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் அமைப்பு, தன்னாட்சி.

 

கடந்த 06.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் [IA No. 182868/2019 in CIVIL APPEAL NOS. 5467-5469/ 2017] தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனுமதித்ததோடு, மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் உரிய வார்டு மறு வரையறைகளை மேற்கொண்டு, 4 மாத காலத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க உத்தரவிட்டது தாங்கள் அறிந்ததே!

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கொரோனா ஊரடங்கு காரணத்தால் நடைபெறவில்லை என ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டிருகிறது.

 

மேலும், கடந்த மாதங்களில், பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கேரள மாநில தேர்தல் ஆணையம், தள்ளி வைத்த உள்ளாட்சித் தேர்தல்களை இந்த மாதத்தில் நடத்த இருக்கிறது. கர்நாடகத்திலும் இதே சூழல் உள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர உள்ளாட்சித் தேர்தலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களும் அண்மையில் நடந்து முடிந்துள்ள. இவை அனைத்தும் தமிழகத்திலும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.

 

இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த டிசம்பர் 2019 இல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோரின் முக்கியத்துவம் தற்போது பெருமளவில் உணரப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று மற்றும் பருவகாலத்தினால் ஏற்படும் கடும் புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளை இவர்கள் முறையாக மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நடைபெறாத காலத்தில்  பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தடைபட்டப் பல பணிகள் தற்போது நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.  

 

அதே போன்று 15வது மத்திய நிதிக்குழு நிதியினை முறையாகத் திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும், ஜல் ஜீவன் மிஷன், மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டம் போன்ற பல ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் அவசியமாகிறது.

 

அதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சுகாதார மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளை மாநில அரசோடு இணைந்து மேற்கொள்ளவும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.

 

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட மக்கள் நலப்பணிகளைக் கருத்தில் கொண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

 

தங்கள் உண்மையுள்ள,

 

க.சரவணன்   

தலைவர்   

 

எஸ்.நந்தகுமார் 

பொதுச் செயலாளர்   

 

07.12.2020

 

தன்னாட்சி

(உள்ளாட்சிஉங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் :thannatchi@gmail.com    

www.thannatchi.in

 

Tuesday, 6 October 2020

பத்திரிகையாளர் சந்திப்பு - 07 October 2020 - கிராமசபை

பத்திரிகையாளர் சந்திப்பு

காந்தி ஜெயந்தியான அக்.2 அன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சிக்கு முக்கியமான இக்கூட்டங்களை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் இதுகுறித்தான முக்கிய செயல்திட்டங்களை அறிவிக்கவும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், 07-10-2020(புதன்கிழமையன்று) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து பத்திரிகையாளர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாள்: 07-10-2020(புதன்கிழமை)
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: மதியம் 3 மணி
தொடர்புக்கு: 9003232058, 8754580274


கலந்துகொள்ள உள்ள அமைப்புகள்: தன்னாட்சி இயக்கம், அறப்போர் இயக்கம், மக்களின் குரல், தோழன் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்.

நன்றி,  




நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday, 14 September 2020

Press Statement_கிராம ஊராட்சிகளுக்கான மத்திய-மாநில நிதிக்குழு நிதிகளைதமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்


பத்திரிக்கைச் செய்தி

கிராம ஊராட்சிகளுக்கான மத்திய-மாநில நிதிக்குழு நிதிகளை

தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்


அதிகாரங்களைப் பரவலாக்கி, உள்ளூர் மக்களின் தேவைகளை உள்ளூர் அளவிலேயே திட்டமிட்டு, முறைப்படுத்தித் தீர்வுகள் காணக் கொண்டுவரப்பட்டவையே உள்ளாட்சி அரசாங்கங்கள். குறிப்பாக, கிராம ஊராட்சிகள் மக்களுக்கு மிக அருகிலிருந்து அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவேதான், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் 11 வது அட்டவணையில், ஒவ்வொரு கிராம ஊராட்சியும் குறிப்பிட்ட 29 பொருள்களில் பணியாற்றிட அதிகாரம் வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கும், மக்களின் பிற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மத்திய மற்றும் மாநில நிதிக்குழு நிதிகள், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கின்து.

ஆனால், தற்போது 15வது மத்திய நிதிக்குழு நிதி மற்றும் 5வது மாநில நிதிக்குழு நிதி ஆகியவற்றை கிராம ஊராட்சிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது. சொந்த வருவாய் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், கிராம ஊராட்சிகள் இந்த இக்கட்டான ஊரடங்கு மற்றும் பெருந்தொற்று காலங்களில் மக்கள் பணியாற்றிட, மத்திய மாநில நிதிக்குழு நிதிகள் மிகவும் இன்றியமையாதவை. மேலும் பெரும்பாலான கிராம ஊராட்சிகள் இந்நிதிகளைக் கொண்டுதான் தங்களுக்கான வளர்ச்சிப் பணிகளையும் ஊழியர்களுக்கான ஊதியங்களையும் வழங்கி நிர்வாகத்தை நடத்தி ருகின்றன.

இந்நிலையில், 15வது நிதிக்குழு நிதியின் முதல் தவணையான ரூ 901.75 கோடி கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதின்று மத்தி நிதியமைச்சகத்திலிருந்து தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. [அரசாணை நிலை எண் 116 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.06.2020]. மத்திய நிதிக்குழு நிதியினை தனக்குக் கிடைத்த 10 நாட்களுக்குள் மாநில அரசு கிராம ஊராட்சிகளுக்கு விடுவித்துவிட வேண்டும் என்றும் அவ்வாறு விடுவிக்காவிட்டால் உரிய வட்டித்தொகையினை வழங்க வேண்டும் எனவும் விதி உள்ளது குறிப்பிடத்தக்கது [15 வது நிதிக்குழு பரிந்துரைகள்15th Finance Commission Recommendations Chapter 5, XX].

ஆனால், பல ஊராட்சிகளுக்கு இந்த நிதியானது இன்னும் வந்து சேரவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது. தன்னாட்சி நேரடியாகப் பல ஊராட்சி பிரதிநிதிகளுடன் பேசியது மூலமாகவும் அவர்களிடம் இணையவழியில் கருத்துக்களைப் பெற்றதன் மூலமாகவும், தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த நிதியானது இக்கட்டான இச்சூழலிலும் நிராகரிக்கப்பட்டு வருது தெரியவருகிறது.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிடைக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் வந்திருந்தால், அது, நிச்சயமாக அந்த கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் பாதுகாப்புக்காகவும், சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் பயன்பட்டிருக்கும். மேலும் மாநில நிதிக்குழு நிதியானது, கடந்த ஏப்ரல் 2020 முதல் தமிழக கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது. இந்த நிதியைக் கொண்டே ஊராட்சியின் பணியாளர்களான கிராம ஊராட்சி செயலர், மின்மோட்டார் இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. மேலும் அடிப்படை பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகளைச் செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் பல சிரமங்களைக் கிராம ஊராட்சிகள் சந்தித்து வந்ததை, கடந்த சில மாதங்களாகக் காண முடிந்தது. பெருந்தொற்றுத் தடுப்பு பணிகளுக்கான நிதிகள் மாநகராட்சிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில் கிராம ஊராட்சிகள் முற்றிலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டியுள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய நிதிக்குழு நிதியும் கிடைக்காமல், மாநில நிதிக்குழு நிதியும் கிடைக்காமல் ஊராட்சிகள் மக்கள் பணி செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

எனவே, 15வது மத்திய நிதிக்குழு நிதி மற்றும் 5வது மாநில நிதிக்குழு நிதி ஆகியவற்றை, இனியும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக கிராம ஊராட்சிகளுக்கு விடுவித்து மக்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களின் சார்பாகவும், பல்வேறு மாவட்டங்களின் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் சார்பாகவும் தன்னாட்சி கோருகிறது


க.சரவணன்                                                                                                                                                         

தலைவர்                                                                                                                                                         

97512 37734                                                                                                        


எஸ்.நந்தகுமார்  

பொதுச் செயலாளர்  

90032 32058  


தன்னாட்சி

உள்ளாட்சி உங்களாட்சி

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001

மின்னஞ்சல் : thannatchi@gmail.com    

www.thannatchi.in