பெறுநர்
முனைவர் இரா. பழனிசாமி, இ.ஆ.ப (ஓய்வு)
மாநில தேர்தல் ஆணையர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
எண். 208/2, ஜவகர்லால் நேரு சாலை,
(கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்),
அரும்பாக்கம், சென்னை 600 106.
ஐயா,
பொருள்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நடைபெறவேண்டிய விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோருதல் தொடர்பாக.
வணக்கம்! தமிழகத்தில் உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு களப்பணிகள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் அமைப்பு, தன்னாட்சி.
கடந்த 06.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் [IA No. 182868/2019 in CIVIL APPEAL NOS. 5467-5469/ 2017] தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனுமதித்ததோடு, மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் உரிய வார்டு மறு வரையறைகளை மேற்கொண்டு, 4 மாத காலத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க உத்தரவிட்டது தாங்கள் அறிந்ததே!
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கொரோனா ஊரடங்கு காரணத்தால் நடைபெறவில்லை என ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டிருகிறது.
மேலும், கடந்த மாதங்களில், பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கேரள மாநில தேர்தல் ஆணையம், தள்ளி வைத்த உள்ளாட்சித் தேர்தல்களை இந்த மாதத்தில் நடத்த இருக்கிறது. கர்நாடகத்திலும் இதே சூழல் உள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர உள்ளாட்சித் தேர்தலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களும் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. இவை அனைத்தும் தமிழகத்திலும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 2019 இல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோரின் முக்கியத்துவம் தற்போது பெருமளவில் உணரப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று மற்றும் பருவகாலத்தினால் ஏற்படும் கடும் புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளை இவர்கள் முறையாக மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நடைபெறாத காலத்தில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தடைபட்டப் பல பணிகள் தற்போது நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.
அதே போன்று 15வது மத்திய நிதிக்குழு நிதியினை முறையாகத் திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும், ஜல் ஜீவன் மிஷன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற பல ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் அவசியமாகிறது.
அதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சுகாதார மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளை மாநில அரசோடு இணைந்து மேற்கொள்ளவும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட மக்கள் நலப்பணிகளைக் கருத்தில் கொண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
க.சரவணன்
தலைவர்
எஸ்.நந்தகுமார்
பொதுச் செயலாளர்
07.12.2020
தன்னாட்சி
(உள்ளாட்சிஉங்களாட்சி)
பதிவு எண்: 272/2018
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.
மின்னஞ்சல் :thannatchi@gmail.com