ஊராட்சி செயலர்களை அலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!
தன்னாட்சி அறிக்கை!
12.05.2022
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 இன் படி கிராம ஊராட்சி செயலரை நியமித்தல், பணியிடமாற்றம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஊராட்சியின் செயல் அதிகாரியாக இருக்கும் கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்பாக இருந்தது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவரின் இந்த அதிகாரங்களைப் பறித்து, படிப்படியாக அதனை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியினை மாறி மாறி பொறுப்பில் இருக்கும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
1996 ஆம் ஆண்டு முதல், ஊராட்சிகள் நேரடியாக மேற்கொண்டு வந்த ஊராட்சி செயலர்களின் நியமனங்கள், 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை 72 [G.O. Ms. No. 72, Rural Development & Panchayat Raj (E5), 9th July 2013.] யின் படி மாவட்ட அளவிலான நியமனக்குழு மூலம் நடைபெறத் துவங்கின. இருப்பினும், நிர்வாக ரீதியாக ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவரிடமே இருந்தது.
இந்நிலையில், ஊராட்சி செயலரை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் 10.05.2022 அன்று சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 104 (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், இனி ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும் போது கிராம ஊராட்சி தலைவரையோ அல்லது ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரே கிராம ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்வார். அதற்கு முன் ஊராட்சி தலைவரைக் கலந்தாலோசிக்கக் கூடத் தேவையில்லை என்கிறது இச்சட்டத்திருத்தம். மேலும் பிரிவு 106 ன் படி செயலரைத் தண்டிக்கும் அதிகாரம், செயல் அதிகாரியான ஊராட்சி தலைவரிடமிருந்து அரசால் நியமிக்கப்படவிருக்கும் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் பெறும் ஒரு பணியாளரை, கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய ஒருவரை அவ்வூராட்சியின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக எடுத்து அலுவலர்களின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசென்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தத்தினால், கிராம ஊராட்சி செயலரின் நிர்வாக விஷயத்தில் கிராம ஊராட்சிக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் போகும். இதனால், ஊராட்சித் தலைவருக்கு இணையான அதிகாரமிக்க நபராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சி செயலர் உருவெடுக்கும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
இது இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 243G ன் படி கிராம ஊராட்சியின் சுயாட்சி தன்மையினை கேள்விக்குள்ளாக்குவதாகும்.
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், தனி அலுவலர்கள் காலத்தில் எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் ஊராட்சிகளில் ஊழல் அதிகரித்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும், அவர்களுக்குக் கட்டுப்படாமல், உயரதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி செயலர்கள் ஊழலில் திளைக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது. இது மக்கள் விரோத முயற்சி என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, ஊராட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத்திருத்தினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தன்னாட்சி வலியுறுத்துகிறது.
க.சரவணன்
தலைவர்
9751237734
நந்தகுமார் சிவா
பொதுச் செயலாளர்
9003232058
தன்னாட்சி
(உள்ளாட்சி உங்களாட்சி)
பதிவு எண்: 272/2018
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.
மின்னஞ்சல் : thannatchi@gmail.com