Saturday, 26 November 2022

கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்தில் தலையிடும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்தில் தலையிடும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

தன்னாட்சி கண்டன அறிக்கை

26.11.2022

கிராம ஊராட்சிகள் பராமரித்து வரும் வங்கிக் கணக்குகளை முழுமையாக தன்வசம் எடுத்துக் கொள்ளும் வகையில் அரசாணையொன்றை கடந்த மாதம் வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு [பார்க்க: அரசாணை நிலை எண் 117, ஊ.வ மற்றும் ஊ.துறை, நாள் 28.10.2022].

ஊராட்சி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும், அதற்கென ஒதுக்கப்படும் நிதி இன்றியமையாததாக இருக்கிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதியினை உள்ளூர் வளர்ச்சிக்காகச் சட்டத்திற்குட்பட்டு, ஊராட்சிகள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டுமென்பதே இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கம். ஆனால், மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இந்த நோக்கத்தைச் சிதைப்பதற்காகப் பயன்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. சுருக்கமாக, நிர்வாகக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, நிதிச் சுதந்தரத்தைப் பறித்து, மூன்றடுக்கு ஊராட்சிகளைத் தன் கைப்பாவைகளாக வைத்திருக்க நினைக்கிறது அரசு.

கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் 11 வங்கிக் கணக்குகளில் ஊராட்சிகளின் வரி வருவாய், பிற கட்டணங்கள் என அவற்றின் சொந்த வருவாய்களைப் பராமரிப்பதற்கான வங்கிக் கணக்குகளும், மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கான வங்கிக் கணக்குகளும், மாநில நிதிக் குழு நிதி மற்றும் மத்திய நிதிக் குழு நிதி ஆகிய நிதிகளுக்கான கணக்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது கூட பல கட்டுப்பாடுகளுடனே தான் இந்த வங்கிக் கணக்குகளில் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி (அரசாணை நிலை எண்: 203 ஊ.வ மற்றும் ஊ.துறை, நாள்: 20.12.2007) ஒரு ஊராட்சி ₹ 2 லட்சத்திற்கும் மேல் உள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு, மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாக அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த அரசாணை, தற்போதும் நடைமுறையிலிருந்து, ஊராட்சியின் செயல்பாட்டிற்குப் பெரும் தடையாக உள்ளது. இந்தத் தொகையினை அதிகரித்துத் தர வேண்டும் என ஊராட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்தான், ஊராட்சியில் உள்ள 11 வங்கிக் கணக்குகளை மூன்று கணக்குக்களாக குறைத்து உத்தரவை பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

ஒரே திரையில்

12,525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வேண்டி உள்ளதாகவும், மாநில அளவிலான வங்கிக் கணக்குகளின் மூலம் இது சாத்தியமாகி அனைத்தும் ஒரே திரையில் (dashboard) தெரியவரும் என்றும் விளக்கம் அளிக்கும் மாநில அரசு, இதுவரை, ஒவ்வொரு நிதியாண்டும் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் முறையாகத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளதா?

தொழில்நுட்பத்தை நம்பும் அரசு, ஏன் மக்களை, மக்கள் பிரதிநிதிகளை நம்புவதில்லை? ஊராட்சியில் இருக்கும் பிரதிநிதிகள், அலுவலர்கள், நிலைக்குழு பிரதிநிதிகள், தணிக்கையாளர்கள்,கிராமசபையில் பங்கெடுக்கும் மக்கள் என யார் மீதும் நம்பிக்கை வைக்காமல் அனைவருமே தவறு செய்பவர்கள் போலச் சித்தரிப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் தனது திரையில் தெரியும் நிர்வாகமாக இருக்க வேண்டும் என நினைப்பது தொழிநுட்ப எதேச்சதிகாரமன்றி வேறல்ல.

பொது நிதிக் கணக்கும்

குறிப்பாக கிராம ஊராட்சியில் உள்ள பொது நிதி கணக்கு எனக் குறிப்பிடப்படும் முதல் வங்கிக் கணக்கில்தான் ஊராட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நிதிகளைக் கொண்டு பராமரிப்பு பணிகளைச் செய்கிறார்கள். வீட்டு வரி, குடிநீர்க் கட்டணம் என ஊராட்சிகள் வசூலிக்கும் சிறிய தொகைகளைக் கொண்ட தனது சொந்த வருவாய்களைச் சேமிக்கும் இந்த வங்கிக் கணக்கைக் கூட விட்டு வைக்கவில்லை தமிழ்நாடு அரசு. இந்த முக்கிய கணக்கில் எப்பொழுது வேண்டுமானாலும் மாநில அரசு நிதியைக் கையாள முடியும் என்ற நிலை ஏற்பட்டால் என்னவாகும்? ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்திற்கு விடுக்கப்படும் சவால் அல்லவா இது?

தற்போதைய தொழில்நுட்பச் சவால்கள்

ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்ட முறையில்தான் தற்போது நிதி நிர்வாகம் இயங்கி வருகிறது. புதிய ஊராட்சிகள் துவங்கப்பட்ட 1996 காலகட்டத்திலிருந்தது போன்ற காசோலை முறை தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சிக்னேச்சர் (Digital Signature) முறையில் இணையவழி லாகின் (Login) முறைகள் எல்லாம் தற்போது படிப்படியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள சவால்களே ஏராளம். ஒன்றிய அளவில் டிஜிட்டல் சிக்னேச்சரைப் பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவர்களுக்கே தெரியாமல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இன்னும் சரியான தீர்வுகள் கிடைக்காத சூழலில், எல்லா வங்கிக்கணக்கையும் மாநில அளவில் கொண்டு செல்வது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

மத்திய நிதிக்குழு நிதி

மத்திய நிதிக் குழு நிதியினைக் கையாள ஒவ்வொரு ஊராட்சியும் கட்டாயமாகத் தனியாக வங்கிக் கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது மத்திய நிதிக்குழு. எனவே, அந்த நிதிக் கணக்கு மட்டும் தற்போது உள்ளது போன்றே ஊராட்சி அளவில் தனி வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும் எனச் சொல்கிறது அரசு. ஒன்றிய அரசு சொல்வதற்கு மட்டும் தலையாட்டிவிட்டு, உள்ளூர் மூன்றாம் அரசாங்கங்களைக் கிள்ளுக் கீரைகளாக நினைத்தால் எப்படி?

நிதித் தேக்கம்

சில வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை இல்லாமல் செயலற்று (idle) இருப்பதாகக் குறிப்பிடுகிறது மாநில அரசு. தேவையானபோது ஊராட்சி தனக்கான நிதியைச் செலவு செய்ய முடியாமல் நிர்வாக அழுத்தங்கள் இருப்பதையும் பல கட்ட ஒப்புதல்களை ஒரு ஊராட்சி பெற வேண்டி இருப்பதையும் அறியாமலா இருக்கிறது அரசு? வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் எனப் பலரின் ஒப்புதலைப் பெற்று ஊராட்சிகள் செலவு செய்து வரும் சூழலில், வங்கிக் கணக்குகளில் நிதித் தேக்கம் இருப்பதாகச் சொல்வது உண்மையில் நகை முரணன்றி வேறல்ல.

நிதியை மாநில அளவில் குவித்துவிட்டால் ஊழல் குறையும் என்ற வாதம் கூட பொருத்தமானது அல்ல. ஏனெனில், அது மையப்படுத்தப்பட்ட ஊழலுக்கும் வழிவகுக்கலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, 12,525 கிராம ஊராட்சிகளையும் 388 ஒன்றியங்களையும் 36 மாவட்ட ஊராட்சிகளையும் பாதிக்கும் இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கூட கருத்து கேட்கப்படவில்லை என்பது இங்கு கவனத்திற்குரியது. அரசின் இந்த அணுகுமுறை முற்றிலும் ஜனநாயக விரோதமானது. கடும் கண்டனத்திற்குரியது

எனவே,

1. ஜனநாயக விரோதமான, அதிகாரப் பரவலுக்கு எதிரான இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும்

2. ஏற்கனவே உள்ள நிதிப் பரிவர்த்தனை முறைகளில் உள்ள சவால்களைச் சீர் செய்வதோடு, ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடாமல் அவற்றை வலுப்படுத்தும் விதமாக, ஊராட்சி அளவில் நிதிச் சுதந்தரத்திற்கான உரிய அதிகாரப் பகிர்வை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும்

3. வெளியிடும் எல்லா அரசாணைகளையும் தமிழில் வெளியிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும்

தன்னாட்சி கோருகிறது. அரசு அலுவலர்களை அதிகாரப்படுத்தாமல், மூன்றடுக்கு ஊராட்சிகளை அதிகாரப்படுத்துவதே மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு அரசுக்கு அழகு!


க. சரவணன்

தலைவர்     

9751237734   


நந்தகுமார் சிவா

பொதுச் செயலாளர்

90032-32058


தன்னாட்சி

(உள்ளாட்சி உங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் : thannatchi@gmail.com

Tuesday, 15 November 2022

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிக்கை செய்தி - அரசு புறநகர் மருத்துவமனைகளின் அவல நிலை

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (16-11-2022)

தொடர்புக்கு : 86681-96093

அரசு புறநகர் மருத்துவமனைகளின் அவல நிலை 


கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

முறையான சிகிச்சை அளிக்காமல் தங்களுடைய அலட்சியத்தால் பிரியாவின் மரணத்திற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்வது மட்டும் தண்டனையா?என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தமிழக அரசாங்கம் மேற்படி மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்கள் மீது குற்ற வழக்கு பதியவும் உத்தரவிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் கவனக்குறைவாக இருந்ததாக சொல்லப்படும்  மருத்துவர்கள் அரசு பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து தனியார் மருத்துவர்கள் ஆக தொழில் செய்ய முடியும். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில், தவறு செய்த  மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர்களுடைய மருத்துவர் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது. மேலும், விசாரணை முடியும் வரை அவர்களுடைய மருத்துவப் பதிவை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.



                                                                                                 

                                                                                          அருள் முருகானந்தம்,
                                                                                  மாநில செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                  86681-96093


ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 





நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269