'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதா?
தன்னாட்சி கண்டன அறிக்கை
100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005, (MGNREGA-2005) பகுதி 16(1) இன் படி இத்திட்டத்தின் கீழ் என்ன வேலைகளைச் செய்ய வேண்டும்; எங்கு, எப்பொழுது செய்ய வேண்டும்; அதற்கான பட்ஜெட், ஆண்டு வேலைத் திட்டம் போன்ற அனைத்தையும் முடிவு செய்து, ஒப்புதலளிக்கும் அதிகாரம், தொடர்புடைய கிராம ஊராட்சியின் கிராமசபைக்கே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் இதில் பல குளறுபடிகள் நடந்து வருவதாகவும், முடிவுகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக அளவில் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சார்ந்த போராட்டங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிப்ரவரி 2, 2024 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் (RC No 30450/ 2023/ MGNREGS I-2 Dt.: 2/2/2024), 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் தமிழ்நாடு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டதை, 2023-24 நிதியாண்டின் MGNREGA வேலைகளில் விளையாட்டு திடல் அமைப்பதையும் சேர்க்கச் சொல்லியும் கிராமசபையில் ஒப்புதல் வாங்கி மார்ச் 31, 2024 க்குள் பணிகளை முடிக்கும்படியும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதிகளோடு, நமக்கு நாமே திட்ட நிதி, மாவட்ட சுரங்க நிதி மற்றும் தனியார் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.
MGNREGS இன் 2023-2024 க்கான திட்ட வழிகாட்டுதல்களின் படி, அடுத்த நிதியாண்டில் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்டறியும் பொறுப்பு கிராம ஊராட்சியைச் சார்ந்ததாகும். கிராம ஊராட்சி வேலைகளைக் கண்டறிந்து அதைப் பணிகளின் தொகுப்பாக (Shelf of Projects) மாற்றி கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். பின்பு அதற்கான தொழிலாளர் வரவுசெலவு அறிக்கையை (Labour Budget) ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்களின் உதவியுடன் தயாரித்து அதையும் அடுத்த ஆண்டிற்கான பணித்திட்டமாகத் தயாரித்து (Annual Action Plan) கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். ஒருவேளை கணக்கிட்ட மக்களை விட அதிக மக்கள் வேலை கேட்டால் அதற்கான மறுபரிசீலனை செய்யப்பட்ட லேபர் பட்ஜெட்டையும் (Revised Labour Budget) தயாரித்து கிராமசபையில் வைத்து ஒப்புதல் வாங்க வேண்டும். அதனடிப்படையிலேயே இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நிதிகளை வழங்க வேண்டும் என்பதையே சட்டமும் அதன் வழிகாட்டுதல்களும் கூறுகின்றன. ஆனால் இவை எதையும் கடைபிடிக்காமல் குறிப்பாகக் கிராம ஊராட்சிகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், இந்த விளையாட்டுத் திடல் அமைக்கக் கூறி மாநில அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதையும் இந்த நிதியாண்டின் இறுதியிலேயே அவசர கதியில் முடிக்கக் கூறுகிறது இக்கடிதம். கிராம ஊராட்சிகளில் நிறைவேற்றக்கூடிய மக்கள் திட்டங்கள் கீழிருந்து மேலே செல்ல வேண்டும் (Bottom Up Planning Approach) என்ற MGNREGA சட்டத்தின் அடிப்படைக் கருத்தாக்கத்திற்கு முற்றும் எதிராக உள்ளது அரசின் இந்தச் செயல்பாடு. அரசின் உள்ளாட்சி அதிகாரங்களுக்கு எதிரான போக்கிற்கு தன்னாட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது.
மேலும் தமிழ்நாடு அரசு, மாநில அளவில் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கான நிதியை ஊராட்சிகளின் சொந்த நிதியில் இருந்து எடுத்துச் செய்ய ஊராட்சிகளை நிர்பந்திப்பது என்பதைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டுத் திடல் திட்டத்திற்கான நிதியையும் மாநில அரசு அதன் சொந்த நிதியிலிருந்து ஒதுக்காமல், ஊராட்சிகளின் நிதியான MGNREGA திட்ட நிதியைப் பயன்படுத்தக் கூறியிருக்கிறது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வரவேண்டிய நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுப் பொருட்களை வாங்குமாறும் இக்கடிதம் கூறுகிறது. தமிழ்நாடு அரசின் நிதியைக் கையாள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு எந்த அளவுக்குச் சுதந்தரம் உள்ளதோ அதேபோல் ஊராட்சிகளின் நிதியைக் கையாளுவதற்கு ஊராட்சிகளுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. மக்களுக்கு சரியான வழியில் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டுவதை விட, மக்களுக்கான திட்டங்களை மக்களே முடிவெடுத்து செய்யும் படி அவர்களை அதிகாரப்படுத்துவதே முக்கியமானது என்ற அடிப்படையில், ஊராட்சிகளுக்கு அவர்கள் நிதியைக் கையாளுவதற்கான சுதந்தரமும் பயிற்சியும் வழங்காமல், ஊராட்சிகளை கிராமசபைகளை அதிகாரப்படுத்தாமல், அலுவலர்களை வைத்து ஆட்சி நடத்திய ஆங்கிலேய காலனி ஆட்சி முறையை, உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, அதன் மன்றங்களை, குறிப்பாகக் கிராமசபையைத் துளி கூட மதிக்காமல் மாவட்ட ஆட்சியர், நகர உள்ளாட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் போன்றோரை வைத்தே ஆட்சி நடத்தலாம் என்ற எண்ணத்தை, செயலை மாநில சுயாட்சி கேட்கும் நமது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
எனவே,
1. அரசு தற்போது வெளியிட்டிருக்கும் 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' திட்டத்தை, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. ஒருவேளை அது முடியாவிட்டால், திட்டத்தை அவசர கதியில் நடைமுறைப்படுத்தாமல், உரிய சட்ட வழிமுறைகளின் படி, கிராமசபையின் முறையான ஒப்புதலோடு விருப்பப்படும் ஊராட்சிகள் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. இத்திட்டம் மூலம் விளையாட்டுப் பொருள்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதியான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றை ஊராட்சிகளின் முறையான அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனக் கோருகிறது தன்னாட்சி.
3. மாநில சுயாட்சி எவ்வளவு முக்கியமோ, அதே போல் உள்ளாட்சியிலும் தன்னாட்சி அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, உள்ளாட்சிகளை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.