ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் "Thirukkural Translations in World Languages" என்ற முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.
ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் -பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் நேற்று சிகாகோவில் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர்.மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு. தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் திரு. இளங்கோ தங்கவேல், மிசௌரி, திரு. செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் ஆகியோர் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் உலக அளவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதற்குச் சரியான தரவுகள் இல்லை, ஆவணப்படுத்தப்படவில்லை , இதுகுறித்து இதுவரை ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதை அறிந்து வட அமெரிக்காவில் ஒரு குழு அமைத்து "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வாசிங்டன் வட்டாரத்தைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழ் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். மேலும் டெக்சாஸிலிருந்து திரு.செந்தில் துரைசாமி, இந்தியாவிலிருந்து மொழி பெயர்ப்பு சேகரிப்பு பணியில் 25 ஆண்டுகள் கள அனுபவம் வாய்ந்த கானுயிர் மருத்துவர் NVK அஷ்ரஃப் ,வள்ளுவர் குரல் குடும்பத்தின் நிறுவுநர்-ஒருங்கிணைப்பாளர் சி இராஜேந்திரன் IRS ( Retd) ,அஜெய் செல்வன் என்ற குறளார்வம் கொண்ட இளைஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இக்குழு உலக நாடுகளைத் தொடர்புகொண்டு அனைத்து நாடுகளிலும் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து , அச்சுப்பிரதிகளை சென்னைக்குக் கொண்டுவந்து தொகுத்தல் , எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்துள்ளது, எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற முழுத் தகவலுடன் ஒரு ஆய்வறிக்கையை ஒரு முழு நூலாக அனைவரும் இனி நம்பிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.
கடும் தொடர் முயற்சிகளின் விளைவாக 220 பக்கங்கள் கொண்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற பல வண்ண ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ளது.
உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. முதல் மொழிபெயர்ப்பு 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்தது என அறியப்படுகிறது . அதன் பிறகு 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். அது முதல், காலந்தோறும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது . ஜி யு போப் திருக்குறள் முழு நூலையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்தார் என்பதுபோன்ற பல்வேறு அரிய தகவல்களை ஆண்டு வாரியாக, மொழி வாரியாக பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை ஆங்கிலத்தில் 130 முறையும் , மலையாளத்தில் 30 முறையும், இந்தியில் 20 முறையும்,
தெலுங்கில் 19 முறையும் , பிரென்ச் மொழியில் 16 முறையும், கன்னடத்தில் 12 முறையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற அரிய ஆய்வுத் தகவல்கள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. .
இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் ,பெரும்பகுதி தனி மனிதர்களின் ஆர்வத்தினால் தான் நடைபெற்று வந்தது. ஆனால் மத்தியச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கிய பிறகு சற்றே இந்தப் பணிகள் வேகமெடுத்தது.
திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டும் ,திருக்குறளுக்கு யுனெஸ்கோவின் "மனித இனத்தின் பாரம்பரிய நூல்" என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.
இந்த முயற்சிகள் முழுதாக வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவரை திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் உறுதுணையாக இருக்கும். வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பல இன்று அச்சில் இல்லை. அனைத்தையும் அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்து , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளும், வெளிநாடுகளில் அவரவர் தாய்மொழியிலும் கிடைக்கச் செய்வதே உலகப்பொதுமறை என்பதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவும், திருக்குறள் பரவலாக்கல் முழுமையாக நடைபெறவும் உதவும்.
இத்திட்டக் குழுவின் ஆய்வில் இதுவரை திருக்குறள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவின் பத்து அலுவல் மொழிகளில் போர்ச்சுக்கீஸ் தவிர மற்ற ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் செய்தி.
உலக நாடுகள் அனைத்திலும் திருக்குறள் சென்று சேர வேண்டுமானால் உலக நாடுகளில் அலுவல் மொழியாக உள்ள 158 மொழிகளில் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்தால் எல்லா நாடுகளின் ஒரு அலுவல் மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்திருக்கும் என்ற நிலையை எட்டி விடலாம் .
இதற்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆங்காங்கே மொழிபெயர்ப்பாளர்களை இனம் கண்டு தனியாகவோ அல்லது செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் வழியாகவோ இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் "திருக்குறள் 2030" என்ற திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான சிறப்பு இலச்சினை (Logo ) சிகாகோ விழாவில் வெளியிடப்பட்டது.
1. இதுவரை வெளிவந்துள்ள 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் அச்சில் இல்லாத மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்வதும், (ஆ)வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு பெரிய அளவு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொழிபெயர்ப்புகளை உரியப் புரிந்துணர்வுடன் அச்சிடுவதும், (இ) இதற்கென சென்னையில் திருக்குறளுக்கான ஒரு தனித்த பதிப்பகத்தை உருவாக்கிக் கிடைக்கச் செய்வதும் இத் திட்டத்தில் அடங்கும் .
2. இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள உறுப்பு நாடுகளின் 158 அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர உலகத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுசென்று அனைத்து மொழிபெயர்ப்புகளையும் சாதகமான வழிகளில், வாய்ப்புள்ள அமைப்புகளின் வழியே செய்துமுடித்தல்.
3. தமிழ்நாட்டில் தொடங்கி வெவ்வேறு மாநில தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாநில முதல்வர்களைச் சந்தித்து அவர்கள் மொழியில் உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மாநில பரிசுப்பொருளாகப் பயன்படுத்த வேண்டுகோள் வைத்தல்.
4. உரிய வழிகளில் அனைத்து நாட்டுத் தூதர்களையும் சந்தித்து அவர்கள் நாட்டு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிசுப் பொதியாகக் கொடுத்து அதை அவர்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளில் பரிசாகப் பயன்படுத்தக் கோரிக்கை வைப்பது.
5. Thirukkural Translations in World Languages நூலைப் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் அடுத்த 7 ஆண்டுகளில் அறிமுக விழா நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் “திருக்குறள் 2030” தன்னார்வலர்களை ஊக்குவிப்பது.
6. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல். 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்தச் சரியான காலமாக உணர்ந்து செய்துமுடிக்க உரிய வழிகளை ஏற்படுத்துதல்.
7. நீண்டநாள் கோரிக்கையாக உள்ள யுனெஸ்கோ அமைப்பு திருக்குறளை "Heritage Book of Mankind” என்று அறிவிப்பதை உறுதிசெய்யச் சரியான நடைமுறை சாத்தியங்களை ஏற்படுத்துதல். ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு துறைசார் அனுபவம் கொண்ட ஆளுமைகளின் குழுக்கள் அமைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள், முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க: https://estore.valaitamil.com (அமெரிக்கா, இந்தியா)
நூல் மதிப்புரை செய்ய, நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறியத் தொடர்புகொள்ளவும்.
ஊடகத் தொடர்புக்கு: அ.சுரேஷ் ,
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637