Sunday, 4 December 2022

Press Release - பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா - 05.12.2022

பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், 
இணைந்து நடத்தும்
பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா

இடம்: ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17.
நாள் : 05.12.2022, நேரம்: காலை 9.30 மணி

உலகப் பொதுமறையாம் திருக்குறளை முற்றிலும் மனப்பாடம் செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில் அறம் வளர்க்க திருக்குறளைப் போன்ற ஓர் ஒப்புயர்வற்ற நூல் இல்லை.

இதை மனதில் கொண்டு தமிழக அரசு, பள்ளி மாணவர்கள் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும் 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி, பரிசுத் தொகையையும் உயர்த்துவதாக அறிவித்தது.

அந்த அறிவிப்பின் நீட்சியாக திருக்குறளை மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அறம் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம் , சர்வீஸ் சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் சேர்ந்து உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தைத் தொடங்கியது.

"உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" என்ற தன்னார்வ அமைப்பு மூலம் திருக்குறளை உலகெங்கும் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக கொண்டுசெல்லவும்,  1330 திருக்குறளையும் முற்றோதல் செய்து ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் ரூபாய் 10,000 மற்றும் அரசின் சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாகவும், ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  இலவசமாக பயிற்சியளிக்க திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் கவனகம் சார்ந்த பயிற்சியில் அனுபவம் உள்ள, திருக்குறள் முற்றோதல் முடித்த  பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. 

இம்முயற்சியில் அமெரிக்காவின் மேரிலாந்தில் தமிழ்ச்சேவை புரிந்துவரும் ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர் மருத்துவர். ஜானகிராமன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்பு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2000 திருக்குறள்  நூல்கள் வீதம் சென்னையையும் சேர்த்து ஆண்டுக்கு 80000 (எண்பதாயிரம்) திருக்குறள் நூல்கள்  வீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விலையில்லாமல்  வழங்க முன்வந்துள்ளது.  திருக்குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய இந்நூலை உலகத் தமிழ் வளர்ச்சி மன்ற வழிகாட்டுதலுடன் வானதி பதிப்பகம் அச்சிட்டு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்திடம் வழங்குகிறது. 

முற்றோதல் முடித்த மாணவர்கள் திருக்குறள் பொருள் உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வழிவகை செய்தலும்  இத்திட்டத்தில் அடங்கும். 

"நிற்க அதற்குத் தக" என்ற குறிக்கோளைத் தாங்கி உருவாகியுள்ள "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" , ஒரு தன்னார்வ அமைப்பாக, இதுவரை திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை இணையத்தில் பட்டியலிட்டு அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதலை, உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துவருகிறது. 

இந்த பின்புலத்தில் திருக்குறள் நூல்களை இவ்வாண்டு முதல் மாவட்டமாக சென்னைக்கு வழங்கி மாண்புமிகு கல்வியமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள் 05-12-2022 (திங்கள்கிழமை) அன்று தொடங்கிவைக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், முதன்மைக் கல்வி அலுவலர், தலைமையையாசிரியர்கள், மாணவர்கள், திருக்குறள் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். 

அரசுப்பள்ளி, கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் மிக முக்கியத் தொடக்கமாக அமையவிருக்கும் இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடங்கங்களின் வழியே மக்களுக்கு கொண்டுசேர்க்க அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி..

ஒருங்கிணைப்பாளர்கள் - உலகத்  திருக்குறள் முற்றோதல் இயக்கம் 

ச.பார்த்தசாரதி, 
வலைத்தமிழ் 

சி.இராஜேந்திரன், IRS (ஓய்வு), 
ஒருங்கினைப்பாளர் வள்ளுவர் குரல் குடும்பம், 

திரு.ரவி சொக்கலிங்கம், 
ஒருங்கிணைப்பாளர், சர்வீஸ் 2 சொசைட்டி.

E-Mail : Kural.mutrothal@gmail.com | Website:  https://thirukkural.valaitamil.com
தொடர்புக்கு: 7305571897

Event Location Map: https://maps.app.goo.gl/9q5jQZnp4TsiyNqS9
ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17

 

 

 

 

Saturday, 26 November 2022

கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்தில் தலையிடும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

கிராம ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்தில் தலையிடும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

தன்னாட்சி கண்டன அறிக்கை

26.11.2022

கிராம ஊராட்சிகள் பராமரித்து வரும் வங்கிக் கணக்குகளை முழுமையாக தன்வசம் எடுத்துக் கொள்ளும் வகையில் அரசாணையொன்றை கடந்த மாதம் வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு [பார்க்க: அரசாணை நிலை எண் 117, ஊ.வ மற்றும் ஊ.துறை, நாள் 28.10.2022].

ஊராட்சி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும், அதற்கென ஒதுக்கப்படும் நிதி இன்றியமையாததாக இருக்கிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதியினை உள்ளூர் வளர்ச்சிக்காகச் சட்டத்திற்குட்பட்டு, ஊராட்சிகள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டுமென்பதே இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கம். ஆனால், மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இந்த நோக்கத்தைச் சிதைப்பதற்காகப் பயன்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. சுருக்கமாக, நிர்வாகக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, நிதிச் சுதந்தரத்தைப் பறித்து, மூன்றடுக்கு ஊராட்சிகளைத் தன் கைப்பாவைகளாக வைத்திருக்க நினைக்கிறது அரசு.

கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் 11 வங்கிக் கணக்குகளில் ஊராட்சிகளின் வரி வருவாய், பிற கட்டணங்கள் என அவற்றின் சொந்த வருவாய்களைப் பராமரிப்பதற்கான வங்கிக் கணக்குகளும், மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கான வங்கிக் கணக்குகளும், மாநில நிதிக் குழு நிதி மற்றும் மத்திய நிதிக் குழு நிதி ஆகிய நிதிகளுக்கான கணக்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது கூட பல கட்டுப்பாடுகளுடனே தான் இந்த வங்கிக் கணக்குகளில் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி (அரசாணை நிலை எண்: 203 ஊ.வ மற்றும் ஊ.துறை, நாள்: 20.12.2007) ஒரு ஊராட்சி ₹ 2 லட்சத்திற்கும் மேல் உள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு, மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாக அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த அரசாணை, தற்போதும் நடைமுறையிலிருந்து, ஊராட்சியின் செயல்பாட்டிற்குப் பெரும் தடையாக உள்ளது. இந்தத் தொகையினை அதிகரித்துத் தர வேண்டும் என ஊராட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்தான், ஊராட்சியில் உள்ள 11 வங்கிக் கணக்குகளை மூன்று கணக்குக்களாக குறைத்து உத்தரவை பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

ஒரே திரையில்

12,525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வேண்டி உள்ளதாகவும், மாநில அளவிலான வங்கிக் கணக்குகளின் மூலம் இது சாத்தியமாகி அனைத்தும் ஒரே திரையில் (dashboard) தெரியவரும் என்றும் விளக்கம் அளிக்கும் மாநில அரசு, இதுவரை, ஒவ்வொரு நிதியாண்டும் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் முறையாகத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளதா?

தொழில்நுட்பத்தை நம்பும் அரசு, ஏன் மக்களை, மக்கள் பிரதிநிதிகளை நம்புவதில்லை? ஊராட்சியில் இருக்கும் பிரதிநிதிகள், அலுவலர்கள், நிலைக்குழு பிரதிநிதிகள், தணிக்கையாளர்கள்,கிராமசபையில் பங்கெடுக்கும் மக்கள் என யார் மீதும் நம்பிக்கை வைக்காமல் அனைவருமே தவறு செய்பவர்கள் போலச் சித்தரிப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் தனது திரையில் தெரியும் நிர்வாகமாக இருக்க வேண்டும் என நினைப்பது தொழிநுட்ப எதேச்சதிகாரமன்றி வேறல்ல.

பொது நிதிக் கணக்கும்

குறிப்பாக கிராம ஊராட்சியில் உள்ள பொது நிதி கணக்கு எனக் குறிப்பிடப்படும் முதல் வங்கிக் கணக்கில்தான் ஊராட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நிதிகளைக் கொண்டு பராமரிப்பு பணிகளைச் செய்கிறார்கள். வீட்டு வரி, குடிநீர்க் கட்டணம் என ஊராட்சிகள் வசூலிக்கும் சிறிய தொகைகளைக் கொண்ட தனது சொந்த வருவாய்களைச் சேமிக்கும் இந்த வங்கிக் கணக்கைக் கூட விட்டு வைக்கவில்லை தமிழ்நாடு அரசு. இந்த முக்கிய கணக்கில் எப்பொழுது வேண்டுமானாலும் மாநில அரசு நிதியைக் கையாள முடியும் என்ற நிலை ஏற்பட்டால் என்னவாகும்? ஊராட்சிகளின் நிதிச் சுதந்தரத்திற்கு விடுக்கப்படும் சவால் அல்லவா இது?

தற்போதைய தொழில்நுட்பச் சவால்கள்

ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்ட முறையில்தான் தற்போது நிதி நிர்வாகம் இயங்கி வருகிறது. புதிய ஊராட்சிகள் துவங்கப்பட்ட 1996 காலகட்டத்திலிருந்தது போன்ற காசோலை முறை தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சிக்னேச்சர் (Digital Signature) முறையில் இணையவழி லாகின் (Login) முறைகள் எல்லாம் தற்போது படிப்படியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் உள்ள சவால்களே ஏராளம். ஒன்றிய அளவில் டிஜிட்டல் சிக்னேச்சரைப் பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவர்களுக்கே தெரியாமல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இன்னும் சரியான தீர்வுகள் கிடைக்காத சூழலில், எல்லா வங்கிக்கணக்கையும் மாநில அளவில் கொண்டு செல்வது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

மத்திய நிதிக்குழு நிதி

மத்திய நிதிக் குழு நிதியினைக் கையாள ஒவ்வொரு ஊராட்சியும் கட்டாயமாகத் தனியாக வங்கிக் கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது மத்திய நிதிக்குழு. எனவே, அந்த நிதிக் கணக்கு மட்டும் தற்போது உள்ளது போன்றே ஊராட்சி அளவில் தனி வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும் எனச் சொல்கிறது அரசு. ஒன்றிய அரசு சொல்வதற்கு மட்டும் தலையாட்டிவிட்டு, உள்ளூர் மூன்றாம் அரசாங்கங்களைக் கிள்ளுக் கீரைகளாக நினைத்தால் எப்படி?

நிதித் தேக்கம்

சில வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை இல்லாமல் செயலற்று (idle) இருப்பதாகக் குறிப்பிடுகிறது மாநில அரசு. தேவையானபோது ஊராட்சி தனக்கான நிதியைச் செலவு செய்ய முடியாமல் நிர்வாக அழுத்தங்கள் இருப்பதையும் பல கட்ட ஒப்புதல்களை ஒரு ஊராட்சி பெற வேண்டி இருப்பதையும் அறியாமலா இருக்கிறது அரசு? வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் எனப் பலரின் ஒப்புதலைப் பெற்று ஊராட்சிகள் செலவு செய்து வரும் சூழலில், வங்கிக் கணக்குகளில் நிதித் தேக்கம் இருப்பதாகச் சொல்வது உண்மையில் நகை முரணன்றி வேறல்ல.

நிதியை மாநில அளவில் குவித்துவிட்டால் ஊழல் குறையும் என்ற வாதம் கூட பொருத்தமானது அல்ல. ஏனெனில், அது மையப்படுத்தப்பட்ட ஊழலுக்கும் வழிவகுக்கலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, 12,525 கிராம ஊராட்சிகளையும் 388 ஒன்றியங்களையும் 36 மாவட்ட ஊராட்சிகளையும் பாதிக்கும் இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கூட கருத்து கேட்கப்படவில்லை என்பது இங்கு கவனத்திற்குரியது. அரசின் இந்த அணுகுமுறை முற்றிலும் ஜனநாயக விரோதமானது. கடும் கண்டனத்திற்குரியது

எனவே,

1. ஜனநாயக விரோதமான, அதிகாரப் பரவலுக்கு எதிரான இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும்

2. ஏற்கனவே உள்ள நிதிப் பரிவர்த்தனை முறைகளில் உள்ள சவால்களைச் சீர் செய்வதோடு, ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடாமல் அவற்றை வலுப்படுத்தும் விதமாக, ஊராட்சி அளவில் நிதிச் சுதந்தரத்திற்கான உரிய அதிகாரப் பகிர்வை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும்

3. வெளியிடும் எல்லா அரசாணைகளையும் தமிழில் வெளியிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும்

தன்னாட்சி கோருகிறது. அரசு அலுவலர்களை அதிகாரப்படுத்தாமல், மூன்றடுக்கு ஊராட்சிகளை அதிகாரப்படுத்துவதே மாநில சுயாட்சி பேசும் தமிழ்நாடு அரசுக்கு அழகு!


க. சரவணன்

தலைவர்     

9751237734   


நந்தகுமார் சிவா

பொதுச் செயலாளர்

90032-32058


தன்னாட்சி

(உள்ளாட்சி உங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் : thannatchi@gmail.com

Tuesday, 15 November 2022

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிக்கை செய்தி - அரசு புறநகர் மருத்துவமனைகளின் அவல நிலை

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (16-11-2022)

தொடர்புக்கு : 86681-96093

அரசு புறநகர் மருத்துவமனைகளின் அவல நிலை 


கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

முறையான சிகிச்சை அளிக்காமல் தங்களுடைய அலட்சியத்தால் பிரியாவின் மரணத்திற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்வது மட்டும் தண்டனையா?என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தமிழக அரசாங்கம் மேற்படி மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்கள் மீது குற்ற வழக்கு பதியவும் உத்தரவிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் கவனக்குறைவாக இருந்ததாக சொல்லப்படும்  மருத்துவர்கள் அரசு பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து தனியார் மருத்துவர்கள் ஆக தொழில் செய்ய முடியும். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில், தவறு செய்த  மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர்களுடைய மருத்துவர் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது. மேலும், விசாரணை முடியும் வரை அவர்களுடைய மருத்துவப் பதிவை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.



                                                                                                 

                                                                                          அருள் முருகானந்தம்,
                                                                                  மாநில செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                  86681-96093


ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 





நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam, 

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Saturday, 29 October 2022

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிக்கை செய்தி - எப்பொழுது நடக்கும் சரியான ஏரியா சபை ?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (28-10-2022)

தொடர்புக்கு : 96292-33892

எப்பொழுது நடக்கும் சரியான ஏரியா சபை ?


வரும் நவம்பர் -1 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஏரியா சபை நடைபெறும் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்து  இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கூட்டத்தின் தலைவராக அந்தந்த வார்டு கவுன்சிலர் இருப்பார். அதுபோலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வின்  ஒருங்கிணைப்பாளராக இருப்பார். தமிழக முதல்வர் சென்னை முதல்வர் பல்லாவரம் தொகுதியில் பம்மல் வார்டில்  கலந்து கொள்வார். ஆனால், நகராட்சி நிர்வாக துறை  செயலாளர், துறை அமைச்சருக்கு சில அடிப்படை  கேள்விகள்.


1 . நவம்பர் - 1  தேதி அறிவிப்பின் படி, ஏரியா வாரியாக, வார்டு வாரியாக எங்கே சபை நடைபெறும் என அறிவிக்கவில்லை. நகர்புறம் சார்ந்த பொதுமக்கள் எங்கு  சென்று கலந்து கொள்வது?


2 . வார்டு உறுப்பினர்களை கவன்சிலரே தேர்ந்தெடுத்ததால், பொது மக்களுக்கு யார் உறுப்பினர்கள் என்றே  தெரியாது. இவ்வாறு இருக்கையில் பகுதிசார்  பிரச்சனைகளை யார் வழியாக எடுத்து சொல்வது?


3 . நடைபெறும் இடம், நேரம்  சம்மந்தமாக எங்கேயேனும் அறிவிப்பு பலகை அல்லது நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. பொது தொலைபேசி எண் இல்லை. மண்டல வாரியாக பேரூராட்சி,  நகராட்சி,  மாநகராட்சி அதிகாரிகளுக்காவது  தெரியுமா ? 


4 . சபை நடைபெறும் முறை, விவாதிக்க  கூட்ட பொருள், விதிமுறைகள்  ஏதேனும் தெரிவிக்கப்ட்டுள்ளதா? அரசாணை ஏதும் இல்லை.



திமுகவின் ஏரியா சபை நடைபெறுகிறது! தமிழ்நாடு அரசாங்கத்திற்கான, நகர்ப்புற பகுதிகளுக்கான ஏரியா சபை சரியான முறையில் எப்போது நடைபெற போகிறது?





                                                                                                 

                                                                                          கி. மணிவாசகம்,
                                                                                  பொது செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                    88704 72174

ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 




நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam, 

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Tuesday, 20 September 2022

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை 2000 ரூபாயாக குறைப்பது மட்டும் முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (20-09-2022)

தொடர்புக்கு : 96292-33892

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை  2000 ரூபாயாக குறைப்பது  முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா? 






தேர்தல் ஆணையம் நேரடி பண பரிவர்த்தனை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை 20 ,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்க்கு குறைக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. உண்மையில், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன்மூலம், 2000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும் நபர்கள் நேரிடையாக வங்கி வழியாகவும் கொடுக்க வாய்ப்பாக அமைவது மட்டுமல்லாமல், ஒரு கட்சியின் பண பரிவர்த்தனை மொத்த நிதியில் 20 சதவீதம் கீழோ அல்லது 20 கோடிக்கு மிகாமல் இருப்பதை வரையறை செய்கிறது. அதேநேரம், தேர்தல் பத்திரங்கள் பற்றி பேசாமல், கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் பணப்பரிவர்த்தனை  தொகையை குறைப்பது மட்டுமே  முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துகிறதா என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கவில்லை.


நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், கட்சிகளின் நிதி ஆதார தணிக்கை எளிதாக செய்ய உதவியாக இருக்கும் என்ற பட்சத்திலும் மற்றும் கருப்பு பணம் தேர்தலில் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கையில் மத்திய சட்ட அமைச்சரான கிரண் ரிஜ்ஜு வுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக கொடுத்ததை ரகசியம் காக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்தை மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்ததை பற்றி தேர்தல் ஆணையம் ஏதும் கருத்து கூறாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது! வாங்குபவர் தன்னுடைய விவரத்தை வங்கிகளுக்கு தெரிவித்தாலும் தேர்தல் பத்திரங்களில் பெயரை குறிப்பிடாமல் இருக்கும் போது மக்களுக்கு பெரிய அளவில் அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை; மேலும்  இந்த பத்திரங்கள் வழியாக கிடைக்கும் பணத்தின்  அதிக பட்ச அளவு நிர்ணயிக்கப்படவில்லை. ஆதலால், ஒரே நிறுவனம் அதிக பணம் கொடுப்பதற்கும் தடையையும் நீங்கி விட்டது. இவ்வாறாக, நிதி கிடைக்க பெரும்  அரசியல் கட்சிகள் நேர்மையான முறையில் ஆட்சி செய்யுமா ? அனைவருக்கும் ஒரே முறையில் ஆட்சி வழங்குமா அல்லது தனிநபர்களுக்கு ஆதரவாக இயங்குமா என்பது பற்றி பொதுவெளியில் தேர்தலுக்கு முன்பே தெரிய வாய்ப்பில்லை. இது, தேர்தலுக்கு பின் உருவாகும் ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்குமா என்பது கேள்விக்குறி.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லோகேஷ் பத்ரா தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆய்வு செய்ததில் 10,000  கோடிக்கும் மேலாக பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 29 வங்கிகள் வாயிலாக பெறப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. ஆனால் இந்த பத்திரங்கள் கொடுத்தவர் பற்றிய பெயர் குறிப்பிட வேண்டியதில்லை என்னும் போது பண பரிவர்த்தனை மட்டும் குறைப்பது எவ்வாறு தீர்வாகும்? எனவே, தேர்தல் ஆணையம் முழுமையான  வெளிப்படை தன்மை இல்லாத தேர்தல் பத்திரத்தின் ஆபத்தை பற்றிய தன் முடிவை பற்றி சட்ட அமைச்சகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேர்தல் பத்திரங்கள் வழக்கை விரைந்து முடிக்க வழிவகை செய்யும். முடிவில், நியாயமான முறையில் தேர்தல் நிதி ஆதாரங்கள் திரட்டப்படுவதுடன் செலவு செய்வதிலும் ஆடம்பரம் குறைய வாய்ப்பு வாய்ப்புள்ளது.  மேலும் தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்கும் வழிமுறையை தடுக்க மாற்று வழியை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து தேவையான திருத்தங்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்க கோரிக்கை வைக்கிறது. 


                                                                                                 

                                                                                          கி. மணிவாசகம்,
                                                                                  பொது செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                   9629233892

ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,





நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam, 

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Thursday, 12 May 2022

ஊராட்சி செயலர்களைஅலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசுஉடனே திரும்பப் பெற வேண்டும்!

ஊராட்சி செயலர்களை அலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

 

தன்னாட்சி அறிக்கை!

 

12.05.2022

 

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 இன் படி கிராம ஊராட்சி செயலரை நியமித்தல், பணியிடமாற்றம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஊராட்சியின் செயல் அதிகாரியாக இருக்கும் கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்பாக இருந்தது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊராட்சி தலைவரின் இந்த அதிகாரங்களைப் பறித்து, படிப்படியாக அதனை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியினை மாறி மாறி பொறுப்பில் இருக்கும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

 

1996 ஆம் ஆண்டு முதல், ஊராட்சிகள் நேரடியாக மேற்கொண்டு வந்த ஊராட்சி செயலர்களின் நியமனங்கள், 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை 72 [G.O. Ms. No. 72, Rural Development & Panchayat Raj (E5), 9th July 2013.] யின் படி மாவட்ட அளவிலான நியமனக்குழு மூலம் நடைபெறத் துவங்கின. இருப்பினும், நிர்வாக ரீதியாக ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவரிடமே இருந்தது. 

 

இந்நிலையில், ஊராட்சி செயலரை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் 10.05.2022 அன்று சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 104  (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், இனி  ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும் போது கிராம ஊராட்சி தலைவரையோ அல்லது ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரே கிராம ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்வார். அதற்கு முன் ஊராட்சி தலைவரைக் கலந்தாலோசிக்கக்  கூடத் தேவையில்லை என்கிறது இச்சட்டத்திருத்தம்.   மேலும் பிரிவு 106 ன் படி செயலரைத் தண்டிக்கும் அதிகாரம், செயல் அதிகாரியான ஊராட்சி தலைவரிடமிருந்து அரசால் நியமிக்கப்படவிருக்கும் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

கிராம ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் பெறும் ஒரு பணியாளரை, கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய ஒருவரை அவ்வூராட்சியின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து  முழுமையாக எடுத்து அலுவலர்களின் கட்டுப்பாட்டிற்குக்  கொண்டுசென்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. 

 

தமிழ்நாடு  சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தத்தினால், கிராம ஊராட்சி செயலரின் நிர்வாக விஷயத்தில் கிராம ஊராட்சிக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் போகும். இதனால், ஊராட்சித் தலைவருக்கு இணையான அதிகாரமிக்க நபராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சி செயலர் உருவெடுக்கும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

 

 இது இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 243G ன் படி கிராம ஊராட்சியின் சுயாட்சி தன்மையினை கேள்விக்குள்ளாக்குவதாகும். 

 

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், தனி அலுவலர்கள் காலத்தில் எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் ஊராட்சிகளில் ஊழல் அதிகரித்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும், அவர்களுக்குக் கட்டுப்படாமல், உயரதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி செயலர்கள் ஊழலில் திளைக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது. இது மக்கள் விரோத முயற்சி என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ஊராட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத்திருத்தினைத் தமிழ்நாடு  அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தன்னாட்சி வலியுறுத்துகிறது.

 

க.சரவணன்  

தலைவர்

9751237734                                        

                                                        

நந்தகுமார் சிவா                                            

பொதுச் செயலாளர்

9003232058

 

தன்னாட்சி

(உள்ளாட்சி உங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் : thannatchi@gmail.com

www.thannatchi.in

 

Friday, 6 May 2022

Press Invite_May 08,2022_உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும்பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம்

பத்திரிகையாளர் அழைப்பு

 

உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெறுகிறது.

 

கிராமசபை, 100 நாள் வேலைத்திட்டம், உள்ளாட்சிக்கான நிதிப் பகிர்வில் இருக்கும் மாநில அரசின் அணுகுமுறைகள், ஊராட்சி நிர்வாகத்தில் அலுவலர்களின் தலையீடு மற்றும் திட்டமிட்ட ஊழல், நகர்ப்புற உள்ளாட்சிக்கான சீர்திருத்தங்கள் எனக் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கும் கருத்தரங்கம் வரும் 08.05.2022, ஞாயிறு அன்று சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூரில் நடைபெறுகிறது. தன்னாட்சி அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த கருத்தரங்கில் கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புற மாமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்கிறார்கள். 

 

மேலும், சிறப்பு அழைப்பாளர்கள்

 

திரு.சமஸ், பத்திரிக்கையாளர், அருஞ்சொல்

திரு.மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

திரு.சாவித்திரி கண்ணன், பத்திரிக்கையாளர், Aram Online

திரு.R.ஜெயராமன், மாமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி, CPI(M)

 

ஆகியோர் கருத்துக்களை வழங்க உள்ளார்கள். உள்ளாட்சி தொடர்பான இக்கருத்தரங்கிற்கு தங்கள் ஊடகத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி, நிகழ்வினை பதிவு செய்து செய்தியாக்க வேண்டுகிறோம். 

 

நாள்:  08-05-2022(ஞாயிறு)


இடம்: டாக் உள்ளரங்கம், (TAG Auditorium) சென்னை சமூகப்பணி கல்லூரி,

 காசா மேஜர் சாலை, எழுப்பூர்


நேரம்:  காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை


தொடர்புக்கு:  9445700758

 

M. ஜாஹிர் ஹுசைன்

துணைத் தலைவர்


தன்னாட்சி

(உள்ளாட்சிஉங்களாட்சி)

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை

மின்னஞ்சல்: thannatchi@gmail.com

www.thannatchi.in