Friday, 31 July 2015

காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி விருப்பம் “மதுவிலக்கு” கோரி சிறை செல்லும் போராட்டம்.. Gandhian Sasiperumal's Last wish "Goto Jail" Demanding LIQUOR PROHIBITION...

To the Editor:

As per the last wish of Gandhian Sasiperumal social activists all over Tamilnadu getting ready for "Goto Jail" protest.
Those who want to join the protest and goto jail can join by means of giving a MISSED CALL to 81441-78687. This is what the real tribute that we, activists can pay to him.

We are inviting all political parties, public particularly youths and women to join the "Goto Jail" protest. Let's ensure that Tamilnadu Government announce Liquor Prohibition. It is to be noted that In 2003(When TASMAC started retail vending of liquor) the revenue due to liquor is Rs.3639 Crores. In 2015-2016 the target(Expected income) from Liquor sale is Rs.29672/ crores. 

Note: Sasiperumal's family announced that they won't receive his body until Govt announces its stance on Liquor Prohibition, for which he gave his soul.

- Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam, 87545-80274

காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி விருப்பம் "மதுவிலக்கு" கோரி சிறை செல்லும் போராட்டம்... சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவிப்பு...

                                                      


வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி, மதுவிலக்குப் போராட்டக் களத்திலேயே உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். 

சசிபெருமாள் அவர்களின் இறுதி விருப்பம் என்பது இந்த ஆகஸ்ட் மாதத்தில் மாபெரும் போராட்டங்கள் நடத்தி மதுவிலக்கு கோரி சிறை செல்ல வேண்டும் என்பதே. (1942ல் வெள்ளையனே வெளியேறு திட்டம் போல, மதுவே வெளியேறு என்று வலியுறுத்தி). அவரின் இறுதி விருப்பத்திற்கு உடனடியாக உழைப்பதே சமூக ஆர்வலர்களாகிய எங்களின் கடமையாகக் கருதுகிறோம். 


ஆகவே,  "சிறை செல்லும் போராட்டத்தை" அறிவிக்கிறோம். 


******மதுவிலக்கிற்காகச் சிறைசெல்லத் தயாராக உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் "மட்டும்" 81441-78687 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம். *******

போராட்ட தேதி, போரட்ட வழிமுறைகள் அனைத்தும் சசிபெருமாளின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு விரிவாக அறிவிக்கப்படும். மதுவிலக்கிற்காகக் குரல்கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுகிறோம்.


குறிப்பு: சசிபெருமாள் அவர்களின் குடும்பத்தினர் மதுவிலக்கு தொடர்பான அரசின் கொள்கையை அறிவிக்காத வரையில் அவரின் உடலை வாங்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். அவர்களோடு, ஒத்துழைக்க சட்ட பஞ்சாயத்து இயக்கக் குழுவினர் தற்போது நாகர்கோவிலில் இருக்கிறோம்.


கோரிக்கைகள்:

1. காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும்.


2. அரசாங்கம் பூரண மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்துகிறோம் என்று அறிவிக்கவேண்டும்.


3. அரசாங்கம், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வரை மதுவால் கிடைக்கும் வருமானத்தை  

     - மதுவின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்விற்காகவும்
     - குடிநோயாளிகளின் மறுவாழ்விற்காகவும்
     - மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக "மட்டுமே பயன்படுத்துவோம்" என்று கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும்.

4.  மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து கண்காணிக்க "மதுவிலக்கு கண்காணிப்புக் குழு" ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் சமூக ஆர்வலர்கள், மதுஒழிப்பு ஆர்வலர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.


5. காந்தியவாதி சசிபெருமாளை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதியுதவி அளிக்கவேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

6. காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தைக் கொச்சைபடுத்திப் பேசி, உரிய காலத்தில், உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரின் உயிர் பலியாகக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


7. அனைத்து பார்களையும் உடனடியாக மூட வேண்டும்.

8.  குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளால் தங்களுக்குப் பாதிப்பு என்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படவேண்டும். அதுபோல், பள்ளி கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகில் உள்ள 1500 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.


இணைப்பில் :
- மயிலாப்பூரில் போராட்டத்தின் காரணமாக மதுக்கடை ஒன்று மூடப்பட்டபோது எடுத்தபடம்
- டாஸ்மாக் , எந்தெந்த மது உற்பத்தி ஆலைகளிடமிருந்து எவ்வளவு சாராயம் கொள்முதல் செய்கிறது என்ற புள்ளிவிவரம்( RTI மூலம் பெறப்பட்டது)
- கடந்த 10 ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரம்( Source: NCRB website) 
- சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் அரசுக்கு மாற்று வருவாய் திட்ட ஆவணம்

செந்தில் ஆறுமுகம்,

பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

8754580274, 88704-721 8754580270, 8754588222

gandhian sasiperumal mother interview...

http://youtu.be/K6w3fiFnSbw

Interviewed by senthil arumugam, satta panchayat iyakkam in 2013..

senthil arumugam
8754580274

Wednesday, 29 July 2015

PRESS RELEASE: It's "Holiday" not "DRY DAY"?? - ” பொது விடுமுறை“ மட்டுமே “ மது விடுமுறை” இல்லையா ?? -பத்திரிகை செய்தி...

To the EDITOR: 

தமிழ் அறிக்கை கீழே....

TN govt should ANNOUNCE 30th July as DRY DAY... Satta Panchayat Demands..

For honoring Ex.President Abdul Kalam, Tamilnadu Government announced Holiday.
Official order regarding this was release yesterday(Order copy attached). The order says
"....The Government have decided to declare a Public Holiday on the day of funeral ie, on 30.07.2015 for all educational Institutions and for all Government/Private Establishments..."

Till 1pm today we are hearing that NO Order was given regarding leave for TASMAC Liquor shops. We have cross checked with TASMAC union. They said, no order is released yet.
Thiru.Abdul Kalam is very well known for his speeches and interaction with Youths and Students.
It is shocking to see that Government is reluctant to close Liquor shops, which spoils the life of youths a lot. Does it means that one day revenue via Liquor shop is more important to TN Govt..?

If, Tamilnadu Government really wants to give respect for Thiru.A.P.J.Abdul kalam's funeral, it should close liquor shops. WE, SATTA PANCHAYAT IYAKKAM DEMAND THAT TAMILNADU GOVERNMENT SHOULD ANNOUNCE 30th JULY as a "DRY DAY".

Note: REQUESTING MEDIA to Put pressure on concerned officials to announce Dry day, if it is not declared yet.

- Senthil Arumugam,General Secretary,
  Satta Panchayat Iyakkam, 8754580274

ஜீலை 30 அன்று மதுக்கடைகள் மூடப்படவேண்டும்.. சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..
"பொது விடுமுறை" மட்டும்தானா.. "மதுவிடுமுறை" கிடையாதா..?

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் ஜீலை 30ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறையளித்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது(அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது).

ஆனால், நாங்கள் விசாரித்த வரையில்( இன்று மதியம் 1 மணிவரை) "டாஸ்மாக்" கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்திடம் பேசியபோது, விடுமுறை குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று தெரிவித்தனர். இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது..

வாழ்நாள் முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் நலனுக்காகப் போராடிய தலைவர் ஒருவரின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில்கூட மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு மனமில்லையா..? இளைஞர்களைச் சீரழிப்பதில் முன்னிலை வகிப்பது மதுக்கடைகள் என்று அரசுக்கு தெரியாதா..?  இளைஞர்களின் நலனை விட  மதுக்கடை வருமானம் அவ்வளவு முக்கியமா..?

ஜீலை 30 அன்று, மதுக்கடைகளை மூட உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பு: ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகாதபட்சத்தில், பத்திரிகையாளர்கள் இதுகுறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து, டாஸ்மாக் கடைகளை நாளை மூடச்செய்ய வேண்டுகிறோம்.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

Monday, 27 July 2015

மதுவிலக்கு எனும் அரசியல் ஆயுதம்!.. தி இந்து தலையங்கம், 27-7-2015

மதுவிலக்கு எனும் அரசியல் ஆயுதம்!

மது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு, ‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்ற ஒரு திருக்குறள் போதும். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் வழிகாட்டுநெறிகள்கூட பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை அரசின் கடமையாகக் குறிப்பிடுகின்றன.
ஒருகாலத்தில் மது ஒழிப்பில் நாட்டிலேயே முன்னோடியாக இருந்த மாநிலம் தமிழகம். இன்றைக்கு அரசே மது விற்கும் மாநிலம். குடிநோயால் கொடூரத் தாக்குதலுக்குத் தமிழகம் ஆளாகிவரும் சூழலில், பிரதான அரசியல் கட்சிகள் மது விலக்கைக் கையில் எடுத்திருப்பது ஆரோக்கியமான மாற்றம். இந்த மாற்றத்தின் பின்னணி எதிர்காலத் தலைமுறை மீதான அக்கறை என்பதைக் காட்டிலும், தேர்தல் ஓட்டுக் கணக்குகள் என்பவை சங்கடப் பட வைக்கின்றன என்றாலும் வரவேற்க வேண்டிய மாற்றம் இது.
தமிழகத்தில் சில கட்சிகள் தொடர்ந்து மதுப் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துவந்தாலும், பிரதான கட்சிகள் மவுனத்திலேயே ஆழ்ந்திருந்தன. ஆனால், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் காட்சிகள் இப்போது மாறுகின்றன. “சுற்றி எரியும் நெருப்பு வளையத்துக்குள்ளே பற்றக்கூடிய கற்பூரமாக தமிழகம் இருக்கிறது” என்று மதுவிலக்கைத் தளர்த்த முதலில் நடவடிக்கை எடுத்தவர் எவரோ, அதே திமுக தலைவர் கருணாநிதி, “திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக் கடைகள் மூடப்படும்” என்று இன்று அறிவித்திருக்கிறார்.
“இது வெற்று அறிவிப்பல்ல, நாங்கள் சொன்னதைச் செய்பவர்கள்” என்று அறிவிப்பை உறுதிமொழியாக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி இருவரும் தொடர்ந்து மதுவிலக்குக்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மதுவிலக்கு ஓர் அரசியல் ஆயுதமாக உருவெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நிச்சயம் ஆளும் அதிமுகவுக்கு இது ஒரு அரசியல் சவால். 1991 தேர்தலில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரத்துக்கும், முதல் முறை ஜெயலலிதா முதல்வராக ஆட்சியில் அமர்ந்தபோது, கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வரவேற்பு அதிமுகவினருக்கு நினைவிருக்கும். ஆகையால், அதிமுகவும் மதுவிலக்கு ஆயுதத்தை விட்டுவைக்காது. அதிலும் தேர்தலுக்கு முன்பே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்க் கட்சிகளின் வியூகங்களை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
எப்படியோ, இந்த மகத்தான முடிவை எடுக்கப்போகும் ஆட்சியாளர் முன் நிற்கும் வாய்ப்புள்ள ஒரே பெரும் சவால், மது வியாபாரம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம். தமிழக அரசின் வருவாயில் சராசரியாக 25% (2013-14-ல் ரூ.21,641.14 கோடி) மதுபான விற்பனை மூலம்தான் கிடைக்கிறது. இனி, மதுவிலக்கினால் ஏற்படும் இழப்பை எப்படிச் சமாளிப்பது? அரசு இதுபற்றி அலட்டிக்கொள்ளக் கூடாது.
ஆண்டுக்கு 45 கோடி லிட்டர் மது ஆறாக ஓடும் ஒரு மாநிலத்தில், அது ஏற்படுத்தும் பின்விளைவுகளும் சேதங்களும் இழப்புகளும் இப்படி வருவாய்க் கணக்குபோல யாராலும் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், 28,000+ பணியாளர்களைக் கொண்ட ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலம் வேறு என்னென்ன புதிய காரியங்களை மேற்கொள்ளலாம் எனும் வியூகங்களையும் இன்னும் நாம் யோசிக்கவில்லை. ஆகையால், வருமான இழப்புபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. துணிந்தவர்களுக்கு சமுத்திரமும் கால் மட்டம்தானே!

Tuesday, 21 July 2015

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு...வரவேற்பும்...வேண்டுகோள்களும்

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு
        வரவேற்பும்… வேண்டுகோள்களும்
       சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பத்திரிகை செய்தி ( 21/7/2015 )
                          8754580274, 8754580270

”சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் உளப்பூர்வமாக வரவேற்கிறது. சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தி.மு.க. வைத்துள்ள முதற்புள்ளி இது.  அடுத்த தலைமுறையைக் காப்பாற்றும் இந்த அறிவிப்பை தி.மு.க வெளியிட்டிருப்பது அரசியல்ரீதியாக அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இனி மதுவிலக்கு நிலைப்பாடு குறித்துப் பேசாமல், எந்த அரசியல் கட்சியும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கமுடியாது என்ற நிலையை தி.மு.க.வின் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கையோடும், அறிவிப்போடும் நின்றுவிடாமல் இறுதிவரை உறுதியாக நின்று மதுவிலக்கை தி.மு.க. அமல்படுத்தவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது, சில வேண்டுகோள்களோடு…

      
மதுவிலக்கிற்காக சிறை செல்லத் தயார் … அண்ணா 
1.   தேர்தல் வரை காத்திருக்காமல் களப் போராட்டங்கள் மூலம் உடனடியாக மதுவிலக்கை நோக்கிய முயற்சிகளை எடுத்து ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தரவேண்டும். இந்த சமயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் 12.4.1968 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டில் பேசியதை நினைவு கூறுகிறோம்.

மாநாட்டில் பேசிய அண்ணா:
       “….மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்கு அந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அறைகூவல் விடுத்தார்.

மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களுக்குச் சென்று, அங்கு மதுவிலக்குகோரி போராடி சிறைசெல்லத்தயார் என்றார் அண்ணா. அண்ணாவால் துவங்கப்பட்ட தி.மு.கவினரும் அவரின் வழிநடந்து தமிழகந்தழுவிய “டாஸ்மாக் மறியல்” நடத்தி “சிறை நிரப்பும் போராட்டத்தில்” இறங்கவேண்டும். தி.மு.க.தலைமையின் அறிவிப்பை, தங்கள் போராட்டங்களுக்குப் பச்சைக்கொடி எனக்கருதி தி.மு.க. இளைஞரணியினர், மானவரணியினர், மகளிரணியினர் மதுவிலக்குப் போராட்டத்தை துவக்கவேண்டும். குறிப்பாக, டாஸ்மாக் நிர்வாகம் 55 விதிமுறைகள் வகுத்திருந்தும், அவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பார்களை மூட முதலில் களமிறங்கவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு
30.08.1971 ல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.( 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது) தி.மு.க. தீவிரப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்த ஆண்டு, 30.08.2015 க்குள் தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிப்பே வெளியாகும் வாய்ப்புள்ளது. களமிறங்குமா, தி.மு.க..? இல்லை அறிக்கையோடு நிறுத்திவிட்டு சட்டமன்றத் தேர்தல் வரும்போதுதான் மதுவிலக்கு குறித்துப்பேசுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தி.மு.க. மட்டுமல்லாமல், மதுவிலக்கை ஆதரிக்கும் பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்ட், வி.சி.க, நாம் தமிழர், த.மா.க., புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மதுவிலக்கு கோரி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தால், முடிந்தால் ஒருங்கிணைந்து போராடினால் விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வரும். ஓட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் நாங்கள் போராடுவோம் என்று அரசியல் கட்சிகள் களமிறங்கவேண்டிய தருணமிது.

2.   தி.மு.க.வினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படுமா.. ?

தி.மு.க.வின் முன்னாள் மந்திரிகள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு போன்றவர்களாலும் கட்சிக்கு நெருக்கமானவர்களாலும் நடத்தப்படும் எலைட் டிஸ்லரி, கோல்டன் வாட்ஸ் டிஸ்டிலரி , எஸ்.என்.ஜே. டிஸ்லரி, , கால்ஸ் டிஸ்லரி போன்ற மதுபான உற்பத்தி ஆலைகளை மக்கள் நலன் கருதியும், கட்சியின் நிலைப்பாடு கருதியும் விரைவில் மூடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்த வேண்டும். சமுதாய மாற்றத்திற்காக மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சியானது தனது கட்சியினர் மதுபான ஆலைகள் நடத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் எங்கள் இயக்கம் பெற்றுள்ள புள்ளிவிவரத்தின் படி
2013-2014ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.11876 கோடிக்கு மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், மேற்குறிப்பிட்ட மதுபான ஆலைகளிலிருந்து மட்டும் ரூ.3684 கோடிக்கு கொள்முதல் நடந்துள்ளது என்பதை தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு(31%). ( எலைட்-ரூ.659 கோடி, எஸ்.என்.ஜே. ரூ.1125 கோடி, கால்ஸ்: ரூ.1317 கோடி, கோல்டன் வாட்ஸ்: ரூ.583 கோடி )

3.   அ.தி.மு.க.வின் மதுவிலக்கு நிலைப்பாடு என்ன… ?
அ.தி.மு.கவைத் தவிர மிகப்பெரும்பாலான கட்சிகள் மதுவிலக்கிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அரசியல் கணக்குகளை தள்ளிவைத்துவிட்டு சமூக நலன் கருதி-குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி ஆளுங்கட்சியே மதுவிலக்கு அறிவிப்பை வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். முதற்கட்டமாக, “பார்களை மூடுவது”, கடைகளின் எண்ணிக்கை, மதுவிற்பனை நேரம், நாட்களைக் குறைப்பது, மறுவாழ்வு மையங்கள் திறப்பது போன்ற நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ”
தற்போது தமிழக அரசின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி 
(31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. சொந்தவரிவருவாயில், முக்கிய அம்சமான வணிகவரி மூலம் ரூ.72068 கோடியிலும் ரூ.22375 கோடி ( இதுவும் 31%) டாஸ்மாக் மூலம் வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வது எப்படி என்று ஆராய பொருளாதார நிபுணர்கள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், தொழிற்துறையினர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை பெறவேண்டும். குஜராத்தில் மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்போது தமிழகத்தில் ஏன் அது முடியாது..?
வருமான இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்தது போல், கள்ளச்சாராயப் பிரச்னைகளை முறையாகக் கையாள்வதற்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து ஆய்வறிக்கை பெற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் 843 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கை நாங்கள் அமல்படுத்தினால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்ப்பை ஈடுசெய்ய மத்திய அரசு தற்காலிக நிதியாவது தரவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கவேண்டும்.
மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த நாங்கள் தயார் என்ற நிலைப்பாட்டிற்கு ஆளுங்கட்சி வந்தால்தான் இதுவெல்லாம் சாத்தியமாகும். அந்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம், சமுதாயத்தின் அவசியம் என்பதை ஆளுங்கட்சி உணரவேண்டும். இல்லையெனில், தேர்தல் சமயத்தில் மக்கள் உணர்த்துவார்கள்.
மதுவிலக்கு நோக்கி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பணிகள்:

16.03.2014 அன்று  “2016 மதுவிலக்கு ஆண்டு” என்ற பிரச்சாரத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் நோக்கம் மதுவிலக்கு என்ற கோஷத்தை தமிழக சட்டமன்ற தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாக கொண்டுவர வேண்டும் என்பதே. அந்த சமயத்தில் மதுவிலக்கு என்பது ஒரு பெரிய விவாத பொருளாக இருக்கவில்லை.

32
நாட்கள் மதுவிலக்கு வேண்டி காந்தியவாதி சசி பெருமாள் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதும் எந்த அரசியல் கட்சிகளும் இதில் பெரிய போராட்ட நிலையை எடுக்கவில்லை. மதுவிலக்கு என்பதை விவாத பொருளாக மாற்ற இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும் மற்றும் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி வைத்துள்ள திமுக அல்லது அதிமுக மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுக்க வேண்டும். 


இதை
மனதில் கொண்டு களம் இறங்கிய சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதலில் அனைத்து மது ஒழிப்பு ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியது. அவர்கள் செய்யும் போராட்டங்களுக்கு இயக்கத்தின் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மற்ற இயக்கங்கள் இணைந்து நடத்தும் போராட்டங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மது விலக்கு மிஸ்டு கால் எண் மூலம் இதில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ( இதுவரை 17952 மிஸ்டுகால்கள் வந்துள்ளன )

மதுவிலக்கை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் தயார் செய்யும் பணியும் நடந்து வந்தது. பல்வேறு மது ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் மற்றும் ஸ்டிக்கர்கள் இயக்கத்தின் சார்பாக வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு நண்பர்கள் தங்கள் கடின உழைப்பும் நன்கொடைகளையும் கொடுத்துள்ளார்கள்.

மேலும் எங்கெல்லாம் மக்கள் மதுக்கடைகளுக்கு எதிராக திரளுகிறார்களோ அங்கெல்லாம் இயக்க நிர்வாகிகள் உடனடியாக சென்று போராட்டங்களில் கலந்து கொண்டும் அவர்களுக்கு தக்க சட்ட ஆலோசனை கூறியும் உதவி செய்தார்கள். பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

மதுவிலக்கு குறித்து மக்கள் கருத்தை அறிந்துகொள்ள பல மாவட்டங்களில் “மக்கள் வாக்கெடுப்பு” (Public Referendum) நடத்தப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுகேட்டு வீட்டுக்கு வரும் வேட்பாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் மதுக்கடைகளை மூடுவதற்கு  உத்தரவாதம் கொடுக்கும் வகையில் கையெழுத்து பெற ”உறுதிமொழி” சீட்டு வினியோகம் செய்யப்பட்டது.

 
டாஸ்மாக்கில் விற்கப்படும் சாராயத்தில் ஆல்கஹால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும், குப்பைகள் மிதப்பதாகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சோதனை அறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பல பத்திரிகைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. டாஸ்மாக் நிர்வாகம் மறு சோதனை செய்து முடிவுகளை நமக்கு அனுப்பும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.

இதனிடையே துரதிர்ஷ்டவசமான சில நிகழ்வுகளால் (சிறுவர்களுக்கு சாராயம் கொடுக்கும் வீடியோ) டாஸ்மாக் மீது மக்களின் கோபம் மிகவும் அதிகமானது. கடை முற்றுகை மற்றும் கடை உடைப்பு போராட்டங்கள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

இவை
அனைத்தும் சேர்ந்து தான் நேற்று திமுக தலைவரை மதுவிலக்கு நோக்கிய திசையில் அறிக்கை அளிக்க உதவியுள்ளது. தற்பொழுது அதிமுக, தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இனி மதுவிலக்கு பற்றி பேசாமல் 2016 தேர்தலை எந்த கட்சியும் சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒரு சிறிய கருவியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். மேலும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.. சாராயம் இல்லாத தமிழகம் உருவாக்குவோம். நமது இளைய தலைமுறையை இந்த போதை நோயில் இருந்து காப்பாற்றுவோம்.