செய்வீர்களா... செய்வீர்களா ?
சிறுவர்கள் மது குடிக்கும் வீடியோ காட்சிகள், கடந்த வாரம் எல்லா அலைபேசிகளிலும் நிரம்பி வழிந்தன. கோவையில் பள்ளி மாணவிகள் சிலர் மது அருந்தியதும், அதில் ஒரு மாணவி மது மயக்கத்தில் நடுச்சாலையில் சண்டையிட்டதும் பரபரப்புச் செய்தியானது. மது என்னும் கொடிய கலாசாரம் நம் குழந்தைகள் வரைக்கும் நீண்டுவிட்டது என்ற யதார்த்தம், கடுமையான மன நடுக்கத்தை உண்டாக்குகிறது.
6,823 டாஸ்மாக் கடைகள் மூலம், ஆண்டு ஒன்றுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது தமிழ்நாடு அரசாங்கம். இதுதான் தமிழ்நாடு அரசின் முக்கிய நிதி வருவாய். மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, திருடர்கள் பொருட்களைத் திருடிச் செல்வதைப்போல, குடிமக்களை மதுவின் மயக்கத்தில் தள்ளி அவர்களின் பணத்தை வழிப்பறி செய்கிறது அரசு. 'சாலை வசதி வேண்டும்’, 'குடிநீர் வசதி வேண்டும்’ என மக்கள் கேட்டால் அவற்றைச் செய்துதர வக்கற்றவர்கள், 'எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம்’ என மக்கள் போராடினாலும் கண்டுகொள்ளாமல் கடைகளை அமைக்கிறார்கள்; அமைத்த கடைகளை அகற்ற மறுக்கிறார்கள். 'யார் குடித்துச் சீரழிந்தாலும், யார் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை; குடியினால் கிடைக்கும் வருமானம் மட்டுமே எங்கள் குறிக்கோள்’ என்றால், இதற்குப் பெயர் அரசாங்கமா? எனில், ஒரு கள்ளச்சாராய வியாபாரிக்கும் அரசாங்கத்துக்கும் என்னதான் வேறுபாடு?
10 ரூபாய்க்கு விற்கும் தண்ணீர் பாட்டிலில்கூட 'அம்மா’ படம் போட்டுக்கொள்ளும்போது, டாஸ்மாக் கடைகள் எங்கும் 'அம்மா’ படம் வைத்து, பெருமை தேடிக்கொள்ளும் நல்வாய்ப்பைத் தவறவிடுவது ஏன்? 'மெட்ரோ ரயிலை நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ எனப் போட்டிபோடும் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் 'டாஸ்மாக்கை நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ என்பதை மட்டும் சொல்லத் தயங்குவது ஏன்? ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், இது பெருமிதமாக ஒருபோதும் உரிமை கோர முடியாத அசிங்கம்; மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடூரம். தன் சொந்த குடிமக்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து, அந்தப் பணத்தைக்கொண்டு அரசாங்கம் நடத்துவது வெட்கக்கேடு.
குடிபோதையும் அதன் விளைவும் தனிநபர் பிரச்னை அல்ல. குடிப்பவர் உயிரோடு இருக்கும்போது, குடும்பங்களின் நிம்மதி கெடுகிறது; போதையினால் தொடரும் உடல் - மன நலச் சிக்கல்களால் வீட்டுக்கு வீடு ரணகளம். அவர் நோயில் வீழ்ந்து மாண்டுபோனால், குடும்பத்தின் பாதுகாப்பே சிதைந்து வறுமை சூழ்கிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விதவைப் பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு தத்தளிக்கின்றனர். குழந்தைகள், குடும்பத்தைக் காப்பாற்ற தினக்கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். இன்னொரு பக்கம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துகள், உயிரிழப்புகள். ஒவ்வொரு நாளும் கோடிப் பேர் குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடப்பதால் முடக்கப்படும் மனிதவளம், அதனால் முடமாக்கப்படும் மாநிலத்தின் வளர்ச்சி என, குடி ஒரு மாபெரும் சமூகத் தீங்காக உருவெடுத்துள்ளது.
இது, இதற்கு மேலும் ஒத்திப்போட முடியாத சிக்கல் என்பதைப் புரிந்துகொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு விரைந்து வினையாற்ற வேண்டும். 'ஹெல்மெட் கட்டாயம்’ என்ற நீதிமன்ற உத்தரவை ஒரே மாதத்தில் இத்தனை தீவிரமாகச் செயல்படுத்தும் வலிமைகொண்ட அரசால், டாஸ்மாக் கடைகளை மூட முடியாதா? நிச்சயம் முடியும். வேண்டியது எல்லாம், அதைச் செயல்படுத்தும் உறுதி மட்டுமே. அன்றாட வாழ்வை, குடும்பத்தை, உயிரை, பொருளாதாரத்தை, பண்பாட்டை, நாகரிகத்தைச் சிதைக்கும் குடி என்னும் பெருங்கேட்டை, அடியோடு அழித்தொழிப்பதே அரசின் மிக முக்கியமான செயல்திட்டமாக இருக்க வேண்டும்.
'இது முடியுமா?’ என்பது அல்ல கேள்வி. நிச்சயம் முடியும். 'உங்களால் முடியுமா?’ என்பதே கேள்வி!
No comments:
Post a Comment