ஊடக அன்பர்களுக்கு வணக்கம்,
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று வி.ஐ.டி வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள "சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
46000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட இந்த நூலை வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , தமிழியக்கத்தின் பொருளாளர் புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ள இந்த நூலை "தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை" அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன், ஹார்வார்ட் தமிழ் இருக்கை மருத்துவர் சு. சம்பந்தம் , செய்தி வாசிப்பாளர் திருமதி. நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர் கோ.விசுவநாதன் அவர்கள், இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதைவிடப் பிறமொழிப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும். ஒருவரது பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தைப் போக்க இந்நூல் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டார்.
விழாவைத் தொகுப்பாசிரியர் ச.பார்த்தசாரதி நெறிப்படுத்தினார். விழா ஆயத்துப்பணிகளைத் தமிழியக்கத்தின் மாநிலச் செயலாளர் மு. சுகுமார் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment