சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்த (20-06-2021)
தொடர்புக்கு : 88704-72174
சேவை உரிமைச் சட்டம், சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு போன்ற திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
வணக்கம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக-விற்கான முதல் சவாலாக கொரோனா பெருந்தொற்று அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளபோதிலும், தொற்று எண்ணிக்கையை பெருமளவில் குறைத்ததற்கு பாராட்டுக்கள். திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை (21.06.2021) முதல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொரோனா குறித்த விவாதம் பெருமளவில் இருக்கும். அதே நேரத்தில் சில முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை முதல்வரும் துறை சார்ந்த அமைச்சர்களும் வெளியிடுவார்களா, அதற்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெற்று வருகிறதா என்பதில் தெளிவில்லை. பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகள் பலவற்றை திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது. அதில் மிக முக்கியமாக பின்வரும் பிரச்சனைகளின் மீது தமிழ்நாடு அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது. பின்வரும் பிரச்சனைகள் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதால், கொள்கை அளவில் இவை அனைத்திற்கும் திமுக அரசு தயார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் வேறெந்த தடைகளும் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை.
சேவை பெறும் உரிமை சட்டம் – ஏன் தேவை என்றது அதிமுக அரசு, தேவை தீர்க்குமா திமுக அரசு ?
பொதுமக்கள் அரசிடம் இருந்து பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் போன்ற பல சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்க வேண்டிய சேவைகளாகும். இது போன்ற சேவைகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது பல நேரங்களில் கால தாமதமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாமதத்தை தடுப்பதற்கான ஓர் கருவியே "சேவை பெறும் உரிமை சட்டம்". தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. கடந்த அதிமுக அரசிடம் இது குறித்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அவ்வழக்கின் விசாரணையில் அப்போதைய தமிழக அரசு ஆஜராகி "சேவை பெறும் உரிமை சட்டத்தின் தேவை என்ன என்றும் ஏற்கனவே மக்கள் சாசனம் இயற்றி மக்களுக்கு தேவையான சேவைகளை நிறைவாக வழங்கி வருகிறோம்" எனக் கூறியது. இதை கேட்ட நீதிமன்றமும், சேவை பெறும் உரிமை சட்டம் தேவையான ஒரு சட்டம் என்றாலும் மாநில அரசின் கொள்கை முடிவு அந்தச் சட்டம் வேண்டாமென்பதாக உள்ளதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
மக்கள் சாசனத்தையும் சேவை பெறும் உரிமை சட்டத்தையும் ஒன்றாக பார்ப்பதே அபத்தம். ஏனென்றால், மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சேவைகளை அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க எந்த விதிகளும் மக்கள் சாசனத்தில் இல்லை. ஆனால், சேவை பெறும் உரிமை சட்டத்தில், தாமதித்த அரசு ஊழியர் மீது புகார் அளித்து, தாமதத்திற்கான கட்டணத்தை அவரின் ஊதியத்திலிருந்தே பிடித்தம் செய்ய வழிவகை உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் அறியாதது போல கொள்கை முடிவு என்ற குடையின் கீழ் நின்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து பின்வருமாறு கூறுகிறது.
"பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டப் பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்தபின் குறிப்பிட்ட நாட்களுக்குள் இவற்றைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச் சட்டம் (Right to Services Act) நிறைவேற்றப்படும்."
மேற்கண்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் பட்சத்தில், மக்களுக்கான ஒரு பெருங்கருவியாக அச்சட்டம் இருக்குமென்பதில் எந்த ஐயமும் இல்லை.
சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு.
தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து கோரி வருகிறது.ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம். இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. பாராளுமன்றத்திலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஊடகங்களின் வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது. இது தொடர்பாக, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு(WP14824/2012) தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நிகழ்வுகளும் இதேபோல ரகசியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் நீதிமன்றங்களில் நடைபெறுவதை மக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்றுள்ளனர் என உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் விளைவாக நிறைய உயர்நீதிமன்றங்கள் தனது நிகழ்வுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு வருகின்றனர். குஜராத் உயர்நீதிமன்றம் தன்னுடைய நிகழ்வுகளை அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கில் Youtube தளத்தில் நேரலை செய்து வருகின்றது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வரைவு விதிமுறைகள் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டு சார்ந்தோரின் கருத்துகளுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு குறித்து பின்வருமாறு கூறுகிறது.
"நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்றக் கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளும் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்."
மேலும், சட்டமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் உரை நிகழ்த்தும் ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அழைப்பு விடுத்து பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், "சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்" என்று கூறியுள்ளார். அவ்வாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு தருவதோ; தனியார் தொலைக்காட்சிகள் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாகப் படம்பிடிக்க அனுமதிப்பதோ, எதுவாக இருந்தாலும் அதுபோன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்டதொரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை திமுக அரசு, மேலும் தாமதிக்காமல், முதல் சட்டமன்ற தொடரில் எடுக்கவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் உதவி மைய எண்ணான 7667-100-100 செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாவட்ட மக்களும் அரசு சேவைகள் குறித்தான சந்தேகங்களை கேட்டு தெளிவுப் பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான அழைப்புகள் அரசு துறைகளால் தாமதமாக வழங்கப்படும் சேவைகள் குறித்தே உள்ளன. சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்பட்டால், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளதை இச்செய்தியின் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது.
மணிவாசகம்
துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு எண்: 88704-72174