வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இணையத்தளம் வெளியீட்டு விழா
வலைத்தமிழ் ஏற்பாட்டில் கணினித் தமிழ் ஆர்வலர் நீச்சல்காரன் உருவாக்கிய வாணி பிழை திருத்தியின் புதிய இணையத்தளம் (www.VaaniEditor.com), சித்திரை 1ந்தேதி (14-04-2022) அன்று வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் பிழைதிருத்தத்திற்கென்று பிரத்தியேகமாக உருவான முதல் இணையத்தளம் இதுவாகும். கனடா தமிழ் இலக்கியத் தோட்டக் கணிமை விருது மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்ற மென்பொருள் வாணி என்பது குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பாமர மக்கள் வரை பிழையின்றி அழகு தமிழில் எழுத இந்த வாணி தளம் உதவும்.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் என்று அனைவருக்கும் பயன்படும் தொழில்நுட்பத் தளமாக வாணி வெளியிடப்பட்டது.
இந்தியாவில் எந்த மொழிக்கும் இந்த அளவிற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படவில்லை. அறம் சார்ந்த சிந்தனைகள் தமிழில் உள்ளது போலத் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் தமிழில் பெருக வேண்டும். அதற்கு இளைஞர்கள் பலர் வருவது நம்பிக்கையளிக்கிறது என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் குறிப்பிட்டார். மேலும், அடுத்து நடக்கவிருக்கும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் வாணி மென்பொருளை பதிப்பாளர்களுக்கு கொண்டுசெல்ல முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.
ஒரு நூல் பிழையில்லாமல் வெளியாகப் பதிப்பாளர்கள் அடையும் சிரமத்தை இந்த மென்பொருள் தீர்க்கும் என்ற நம்பிக்கையை அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தேசியத் தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் அவர்கள் வெளிப்படுத்தினார். ஒரு எழுத்தாளனின் எழுத்து என்பது அவருக்கு மட்டும் சொந்தமில்லை அது பலருக்கும் போய்ச் சேரும் என்பதால் பிழையில்லாமல் எழுத வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இத்தகைய கருவிகள் மிகுந்த பயனளிக்கும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் அவர்கள் பாராட்டினார்.
ஆங்கிலத்தைப் பிழையுடன் எழுதினால் அதை வாசகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை ஆனால் தமிழில் நாம் எழுதினால் பொறுத்துக் கொள்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் போகாமல் நம் மொழியின் ஆளுமை நம்மிடம் இருக்க வேண்டும் என்று கணினித்தமிழ் அறிஞர் மணி மணிவண்ணன் வலியுறுத்தினார். மேலும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் முனைவர் வேணுகோபால் அவர்கள் உட்பட பலரும் வாழ்த்துரை வழங்கினர். வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி அவர்கள் வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இரா. இராஜ்குமார் அவர்கள் நெறியாள்கை செய்தார்.
பிழைதிருத்தி என்பது மொழியில் உள்ள பிழைகளைத் திருத்த உதவும் மென்பொருளாகும். ஆங்கிலத்திற்கும் கிராமர்லி, ரைட்டர் போன்ற பல மென்பொருட்கள் உள்ள நிலையில் இந்திய மொழிகளுள் அவ்வாறு இணையத்தில் திருத்தும் நவீன பிழைதிருத்திகள் மிகக் குறைவு. ஆனால் தமிழில் முதன்முதலில் 2014 இல் வாணி திருத்தி அறிமுகமானது. கடந்த பல ஆண்டுகளாக மேம்பட்டு அதன் நவீன பதிப்பு இன்று வெளியானது. இன்றுவரை இணையத்தில் தமிழில் செயல்பாட்டில் உள்ள ஒரே பிழைதிருத்தி இதுவாகும். இந்தப் பிழை திருத்தி மூலம் தட்டுப்பிழை, சந்திப்பிழை, புணர்ச்சிப்பிழை, திணைப்பிழை, மரபுப்பிழை போன்ற பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும்.
இந்தத் தளத்தில் நுழைந்து உள்ளடக்கத்தை இட்டு, திருத்துவதற்கு வசதியாக மூன்று இடைமுகங்கள் உள்ளன. முதல் வகையில் முழு நூலையோ பெரிய கட்டுரையையே இட்டு, ஒவ்வொன்றாகத் திருத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. இரண்டாவது இடைமுகத்தில் ஒரு சொல்லாளருக்கு இணையான வசதிகளுடன் உள்ளடக்கத்தை அழகூட்டவும் மேம்படுத்தவும் வசதியுடன் உள்ளது. மூன்றாவது இடைமுகத்தின் மூலம் தட்டச்சும் போதே பக்கவாட்டில் பரிந்துரைகளைக் கண்டு திருத்திக் கொள்ள முடியும். கூகிள் குரோம்(Google Chrome), கூகிள் டாக்ஸ்(Google Talk) போன்ற இடங்களில் நேரடியாக வாணியைப் பயன்படுத்த முடியும்.
வாணி திருத்தியில் 65 ஆயிரம் அடிச்சொற்களுடன் சுமார் 13 கோடிக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழில் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டது. இந்த மேம்பட்ட பதிப்பில் தனி இணையத்தளம், தனிப்பயனாக்கம் (Customization), நிகழ்நேரப் பிழைதிருத்தம் (Real time validation), மூன்று வித இடைமுகங்கள், பொதுப்பயன்பாட்டு ஏ.பி.ஐ. இடைமுகம்(API) மற்றும் பைத்தான் பொதி (Python Package) ஆகியவை சிறப்பம்சங்களாக உள்ளன.
நிகழ்வில் பங்கேற்றவர்கள்
வரவேற்புரை:
திரு. ச.பார்த்தசாரதி,
நிறுவனர், வலைத்தமிழ். புரவலர்.
https://www.youtube.com/watch?v=LuHivPnU0-k
நோக்கவுரை:
திரு. நீச்சல்காரன் ராஜாராமன்,
வாணியை உருவாக்கியவர்.
https://www.youtube.com/watch?v=BwLusFiN6C4
வாழ்த்துரை:
- திரு. ஸ்டாலின் குணசேகரன்,
தலைவர், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை,
ஒருங்கிணைப்பாளர், ஈரோடு புத்தக திருவிழா.
https://www.youtube.com/watch?v=NZ9Av9c6l3E
- நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன்
தேசியத் தலைவர், அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
https://www.youtube.com/watch?v=zGJC0Z0aWbA
- திரு. பெ.இராஜேந்திரன்,
தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
https://www.youtube.com/watch?v=33HFAJb5KJs
- திரு. மணி மணிவண்ணன்,
கணினித் தமிழ் ஆர்வலர், கலிபோர்னியா,அமெரிக்கா.
https://www.youtube.com/watch?v=djsbGrFlCZM
- முனைவர். வேணுகோபால்,
கல்வி அமைச்சகம், சிங்கப்பூர்.
https://www.youtube.com/watch?v=9KzDJ0eBXqg
தொடர்புக்கு : அ. சுரேஷ், +91 9884411637
No comments:
Post a Comment