Thursday, 20 July 2023

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

தமிழ்நாடு அரசுக்குத் தன்னாட்சியின் கோரிக்கை!

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஜூலை 14, 2023 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் நிர்ணயித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி மேயர் துவங்கி, துணை மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அதே போன்று நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பிரதிநிதிகளுக்கும் மதிப்பூதியம் வழங்கும் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை அரசு நிறைவேற்றியுள்ளதைத் தன்னாட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.

தமிழ்நாடு அரசின் உள்ளாட்சிக்கான முன்னெடுப்பு

தமிழ்நாட்டில் 2021-இல் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து உள்ளாட்சிகளுக்கான சில முக்கிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து நாம் 2021-இல் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கோரிக்கைகளான ஊராட்சிப் பணிகளுக்காக ஊராட்சித் தலைவரே நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தியது (நாம் 10 லட்சம் வரை உயர்த்தக் கேட்டிருந்தோம்), நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி சபை மற்றும் வார்டு குழு உருவாக்கம் மற்றும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உள்ளது போல் நகராட்சிகளிலும் 'தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்' அறிவிப்பு (G.O Ms. No. 69 Dt: September 13, 2021) போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தன்னாட்சி கோரிக்கை வைக்கின்றது.

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும்

கேரளா போன்ற பிற மாநிலங்களில் உள்ளது போல் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 1996 ஆம் ஆண்டு முதலே இங்கு தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கையாகும். தற்போது ஊராட்சித் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக வழங்கப்படும் ₹2000 என்பது மிகவும் குறைவான ஒன்று. இது எந்த விதத்திலும் அவர்கள் பணியை அங்கீகரிக்கும் விதமாகவோ ஊக்கப்படுத்தும் விதமாகவோ இல்லை. கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். மேலும் பல கிராமங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எளிய மக்களும், இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளாகத் (ஊராட்சித் தலைவராகவோ அல்லது வார்டு உறுப்பினராகவோ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் ஊராட்சித் தலைவர்கள் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி செயல் அலுவலராகவும் உள்ளதால் அவர்கள் ஊராட்சித் தலைவர் பணியோடு சேர்த்து செயல் அலுவலர் பணியையும் செய்து வருகின்றனர். எனவே, கிராமப்புறத்தில் எளிய பின்புலத்திலிருந்து வரும் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூடுதலான மதிப்பூதியம் வழங்குவதன் மூலம் ஊராட்சிக்காக மக்கள் பணி செய்ய எண்ணும் ஆர்வமுள்ள இளைஞர்களும் விளிம்பு நிலை மக்களும் நம்பிக்கையோடு ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பினை வழங்க முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மூன்றடுக்கு ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும் குறிப்பாகத் தன்னாட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புகள் (மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance (IGG), தோழன் மற்றும் அறப்போர்) இணைந்து வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021-யில் கேட்டிருந்தது போல் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ₹15,000, துணைத் தலைவர்களுக்கு ₹7,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ₹5,000 என ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் தன்னாட்சி கேட்டுக்கொள்கிறது.

மிக்க நம்பிக்கையுடன்
#தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான #அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021 - https://thannatchi.in/manifesto-2021/

No comments:

Post a Comment