Tuesday, 7 November 2023

PR : Japan Tamil Professionals --> Meetup with Tamil Govt School Students Nov 7 Event

Dear Sir/Madam, 

We are from Japan Tamil Professionals & Expats Network, inaugurated the Tamil Govt School students who came as part of Education Tourism organized by the Tamil School Education department.

The event is held on 7th November in Tokyo. Honourable TN School Education Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi has joined the event. 

Attached are the Press Release and photos. Requesting to publish in your media. 

***************************************************************************************************************
பத்திரிகை செய்தி
07/11/2023
தோக்கியோ, சப்பான்

தமிழக பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக சப்பான் வந்தடைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்தார். நிகழ்விற்கு முன்னதாக சப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டார். 

நவம்பர் 7 அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் சப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.பிரசன்னா பார்த்தசாரதி அவர்கள் அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார்.

"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் சப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி  உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் சப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படை விசயங்களை பகிர்ந்து கொண்டனர். சப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி திரு.பிரசன்னா பார்த்தசாரதி, திரு. கணேஷ் பாண்டியன் நமசிவாயம், திரு. குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை திருமதி.கண்மணி கோவிந்தசாமி, திரு.ராஜேஷ்குமார், திரு.கலைச்செல்வம், திரு.பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், சப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், சப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர். 

 

மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் அவர்கள் இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்துடன் இணைந்து பணிபுரிய மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்வை திரு.கலைச்செல்வன் பழனி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட சப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.  இறுதியாக நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



Thank you,
Sathiya seelan 
JTPEN - Japan Tamil Professionals & Expats Network 
Contact: +91 8754552970 (WhatsApp)

Sunday, 5 November 2023

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

கடந்த அக்டோபர் 2, 2023 கிராமசபையில் ஆளும் மாநில அரசின் சில திட்டங்கள் பற்றிய முதல்வர் உரையைக் காணொளிகளாகத் திரையில் வெளியிட வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை வந்தது. அதன்படி அக்டோபர் 2, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் இந்தக் காணொளிகள் கிராமசபை தொடங்குவதற்கு முன் திரையிடப்பட்டன. நவம்பர் 1, 2023 உள்ளாட்சி தின கிராமசபையிலும் இனி வருடந்தோறும் உள்ளாட்சி தினத்தன்று கிராமசபை நடைபெறும் என்று அறிவித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு விவாதப்பொருளும் சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 1, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் முதல் தீர்மானமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கிராமசபைகளை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபைகளாக மாற்றும் முயற்சிகளே என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் வருடந்தோறும் 6 முறை கிராமசபைகள் நடந்து வருகின்றன. முன்பு 4 முறை நடந்து வந்த கிராமசபைகள் தற்போது 6 முறையாக ஆளும் அரசால் அரசாணை மூலம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமசபைகளில் தங்கள் ஊராட்சிக்கான வளர்ச்சியைத் திட்டமிடுதல், அந்த ஊராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகள்/ தீர்வுகள் பற்றி விவாதித்தல் மற்றும் ஒன்றிய/ மாநில அரசு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து பொருட்களும் விவாதிக்கப்பட்டு அதன் முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே சட்டம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பான கிராமசபையை, மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்ற முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. ஆபத்தானது.

சட்டப்படி கிராமசபையின் விவாதப் பொருட்களை (அஜெண்டாவை) முடிவெடுக்க வேண்டியது அந்தந்த ஊராட்சி மன்றமே. ஆனால் மாநில அரசே, அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையே கிராமசபையின் விவாதப் பொருட்களை தற்போது வரை சென்னை பனகல் மாளிகை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வருகிறது. இதனால் பல கிராமசபைகளில் இந்த விவாதப் பொருட்களை மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறுவது தொடர்கதையாக உள்ளது. சட்டசபை தொடங்கும் முன் ஒன்றிய அரசின் திட்டங்களை விளக்கும் பிரதமர் உரையைக் காணொளிகளாகக் காண்பித்து விட்டு பின்பு சட்டசபையைத் தொடங்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துத் தொடங்க வேண்டும் போன்றவற்றை சட்டசபையின் விவாதப் பொருட்களாகச் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு டெல்லியில் இருந்து கூறினால் அதை எப்படி மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாக, அதிகாரப்பரவலுக்கு எதிரான செயல்களாக நாம் தீவிரமாக எதிர்ப்போமோ அதேபோல் ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாகவே இதை எடுத்துக்கொண்டு நாம் எதிர்க்க வேண்டியுள்ளது.

ஒன்றிய அரசு ஆளுநர் வாயிலாக மாநில அரசு விவாகரத்தில் தொடர்ந்து தலையிடுவதை எதிர்க்கின்ற, அதிகாரப்பரவல் பற்றிய விரிவான வரலாறு கொண்ட நம் தமிழ்நாடு அரசே இதுபோன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்திற்குரியது. தன்னாட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பின்வரும் கோரிக்கைகளை அரசிற்கு வைக்கிறது.

1. கிராமசபையைத் தமிழ்நாடு அரசின் பிரச்சார சபையாக மாற்றும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

2. மாநில அரசின் தலையீடின்றி, கிராமசபையின் விவாதப் பொருட்கள் சட்டப்படி அந்தந்த ஊராட்சி மன்றங்களால் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இப்படிக்கு
தன்னாட்சி
9445700758