கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!
தன்னாட்சியின் கண்டன அறிக்கை!
கடந்த அக்டோபர் 2, 2023 கிராமசபையில் ஆளும் மாநில அரசின் சில திட்டங்கள் பற்றிய முதல்வர் உரையைக் காணொளிகளாகத் திரையில் வெளியிட வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை வந்தது. அதன்படி அக்டோபர் 2, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் இந்தக் காணொளிகள் கிராமசபை தொடங்குவதற்கு முன் திரையிடப்பட்டன. நவம்பர் 1, 2023 உள்ளாட்சி தின கிராமசபையிலும் இனி வருடந்தோறும் உள்ளாட்சி தினத்தன்று கிராமசபை நடைபெறும் என்று அறிவித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு விவாதப்பொருளும் சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 1, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் முதல் தீர்மானமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கிராமசபைகளை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபைகளாக மாற்றும் முயற்சிகளே என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் வருடந்தோறும் 6 முறை கிராமசபைகள் நடந்து வருகின்றன. முன்பு 4 முறை நடந்து வந்த கிராமசபைகள் தற்போது 6 முறையாக ஆளும் அரசால் அரசாணை மூலம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமசபைகளில் தங்கள் ஊராட்சிக்கான வளர்ச்சியைத் திட்டமிடுதல், அந்த ஊராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகள்/ தீர்வுகள் பற்றி விவாதித்தல் மற்றும் ஒன்றிய/ மாநில அரசு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து பொருட்களும் விவாதிக்கப்பட்டு அதன் முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே சட்டம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பான கிராமசபையை, மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்ற முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. ஆபத்தானது.
சட்டப்படி கிராமசபையின் விவாதப் பொருட்களை (அஜெண்டாவை) முடிவெடுக்க வேண்டியது அந்தந்த ஊராட்சி மன்றமே. ஆனால் மாநில அரசே, அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையே கிராமசபையின் விவாதப் பொருட்களை தற்போது வரை சென்னை பனகல் மாளிகை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வருகிறது. இதனால் பல கிராமசபைகளில் இந்த விவாதப் பொருட்களை மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறுவது தொடர்கதையாக உள்ளது. சட்டசபை தொடங்கும் முன் ஒன்றிய அரசின் திட்டங்களை விளக்கும் பிரதமர் உரையைக் காணொளிகளாகக் காண்பித்து விட்டு பின்பு சட்டசபையைத் தொடங்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துத் தொடங்க வேண்டும் போன்றவற்றை சட்டசபையின் விவாதப் பொருட்களாகச் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு டெல்லியில் இருந்து கூறினால் அதை எப்படி மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாக, அதிகாரப்பரவலுக்கு எதிரான செயல்களாக நாம் தீவிரமாக எதிர்ப்போமோ அதேபோல் ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாகவே இதை எடுத்துக்கொண்டு நாம் எதிர்க்க வேண்டியுள்ளது.
ஒன்றிய அரசு ஆளுநர் வாயிலாக மாநில அரசு விவாகரத்தில் தொடர்ந்து தலையிடுவதை எதிர்க்கின்ற, அதிகாரப்பரவல் பற்றிய விரிவான வரலாறு கொண்ட நம் தமிழ்நாடு அரசே இதுபோன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்திற்குரியது. தன்னாட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பின்வரும் கோரிக்கைகளை அரசிற்கு வைக்கிறது.
1. கிராமசபையைத் தமிழ்நாடு அரசின் பிரச்சார சபையாக மாற்றும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
2. மாநில அரசின் தலையீடின்றி, கிராமசபையின் விவாதப் பொருட்கள் சட்டப்படி அந்தந்த ஊராட்சி மன்றங்களால் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இப்படிக்கு
தன்னாட்சி
9445700758
No comments:
Post a Comment