Sunday, 13 August 2023

ஜனவரி 26, 2023 கிராமசபை பற்றிய ஆய்வறிக்கை

தமிழ்நாட்டில் கிராமசபைகள் பெயரளவிற்குத் தான் நடைபெறுகிறதா?


தன்னாட்சி மற்றும் IGG அமைப்புகள் இணைந்து ஜனவரி 26, 2023 அன்று இணையவழியில்  நடத்தப்பட்ட ஆய்வறிக்கை குறித்த


பத்திரிக்கை செய்தி


அரசமைப்புச் சட்டத்தில் நம் நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்களிப்பை நேரடியாக உறுதி செய்யும் ஒரு முக்கியமான தளம் 'கிராமசபை' ஆகும். தேர்தல் காலத்தில் வாக்கு செலுத்துவது மட்டும் ஜனநாயகக் கடமையின்றி மக்கள் பங்கேற்புத் தளமான கிராமசபையிலும் பங்கேற்பது ஒவ்வொரு குடிமாக்களின் ஜனநாயகக் கடமையாகும். கிராமசபை என்பது தமிழ்நாட்டில் 1996 முதல் சட்டப்படி இருக்கிறது எனினும் கடந்த சில வருடங்களாகப் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டப் பரவலான விழிப்புணர்வு காரணமாக பல இடங்களில் அது முறையாக நடைபெற்று வருகிறது எனலாம். கடந்த ஆட்சியில் ஊரடங்கு முடிவுற்ற பிறகும் கரோனாவை காரணம் காட்டி கிராமசபை நடத்தப்படாமல் இருந்தது. தற்போதைய ஆட்சியில் வருடத்திற்கு 4 முறை நடந்து வந்த கிராமசபை 6 முறையாக மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால் உண்மையில் அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிராமசபை முறையாக நடைபெறுகிறதா? கிராமசபை விவாதப் பொருள்கள் அனைத்தும் முறையாக மக்களால் விவாதிக்கப்படுகிறதா? விவாதப் பொருட்கள் தாண்டி மக்கள் முன்மொழியும் இதர பொருள்கள் விவாதிக்கப்படுகிறதா இல்லையா? கிராமசபையின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? அதில் மக்கள் எவ்வாறு ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்? என்பதெல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதற்கு பதில் காணும் விதமாக கடந்த ஜனவரி 26, 2023 அன்று நடந்த கிராமசபையை Institute of Grassroots Governance மற்றும் தன்னாட்சி கூட்டாக சேர்ந்து இணையவழி மூலமாக ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் மொத்தம் 16 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களிலிருந்து அதாவது 142 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 210 கிராம ஊராட்சிகளிலிருந்து சுமார் 258 கிராமசபை உறுப்பினர்கள் (மக்கள்) கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் சாதாரண மக்கள் முதற்கொண்டு ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம தன்னார்வலர்கள் என அனைவரும் அடக்கம். இந்த இணையவழி ஆய்வின் முடிவுகளிலிருந்து கிராமசபை ஜனவரி 26, 2023 அன்று எவ்வாறு நடைபெற்றது என்பதுடன் பொதுவாக கிராமசபை தமிழ்நாட்டில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முடியும்.

ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் கீழ்வருமாறு.. 

முக்கிய கண்டறிதல்கள்:

  1. இந்தியாவில் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமசபை தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

  2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் படி தமிழ்நாட்டில் எந்த ஊராட்சிகளிலும் கிராமசபை விவாதப் பொருட்கள் (அஜெண்டா) அந்த ஊராட்சி மன்றத்தால் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான் விவாதப் பொருட்களை முடிவு செய்து அனுப்பி வைக்கிறது.

  3. அவ்வாறு அனுப்பப்பட்ட விவாதப் பொருள்கள் அனைத்துமே பெரும்பாலான ஊராட்சிகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படவில்லை.

  4. சுமார் 18 விவாதப் பொருட்கள் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜனவரி 26, 2023 கிராமசபை, பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றுள்ளது.

  5. வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் பற்றாளர்களில் பெரும்பாலானோர் கிராமசபையின் விதிமுறைகளான சுழற்சி முறையில் கிராமசபை நடப்பதை உறுதி செய்வது, வருகைப்பதிவேட்டை சரிபார்த்து குறைவெண்வரம்பை உறுதி செய்வது, தீர்மானங்கள் எழுதப்பட்டு அதில் கையொப்பம் வாங்குவது போன்றவைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதில்லை.

  6. பெரும்பாலான ஊராட்சிகளில் கிராமசபையின் முக்கிய கடமைகளான வரவு செலவு அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கைகள் போன்றவை முறையாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவில்லை. 

  7. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், கிராம வறுமை குறைப்புத் திட்டம் போன்ற சில முக்கிய திட்டங்கள் பற்றி பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

  8. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி கிராம ஊராட்சிகளால் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) பெரும்பாலான ஊராட்சிகளில் தயாரிக்கப்படவில்லை.

  9. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்/நிதி உதவிகள் போன்றவையோடு, மக்கள் நிலை ஆய்வு (PIP) அறிக்கை மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் போன்றவை பெரும்பாலான ஊராட்சிகளில் முறையாக விவாதிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை.

  10. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் பெரும்பாலான ஊராட்சிகளின் கிராமசபையில் விவாதிக்கப்படவில்லை.

  11. மக்கள் முன்மொழியும் அடிப்படை தேவைகள் பிரச்சனைகள் குறித்து பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

பரிந்துரைகள்:

  1. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோடு கிராம ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பற்றாளர்கள் போன்ற அனைத்து அலுவலர்களுக்கும் மற்றும் கிராமசபை உறுப்பினர்களான வாக்காளர்களுக்கும் கிராமசபை பற்றிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  2. பல காலமாக விவாதப் பொருட்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் அனுப்பப்பட்டு வரும் நிலை மாறி சட்டப்படி அந்தந்த கிராம ஊராட்சிகளே தங்கள் விவாதப் பொருட்களை தயாரிக்குமாறு அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தாங்களே விவாதப் பொருட்களை தயாரிக்க முன் வரும் கிராம ஊராட்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

  3. கிராமசபை ஒப்புதல் தேவைப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவாதப் பொருட்களில் சேர்க்குமாறு தொடர்புடைய கிராம ஊராட்சிகளுக்கு அலுவல் ரீதியான கடிதங்கள் அனுப்புவது என்பது நடைமுறையாக்கப்பட வேண்டும். 

  4. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதில் கிராமசபையின் பங்கு ஆகியவை பற்றி பொதுமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  5. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) முறையாக மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  6. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி இந்நிதி (CFC) செலவு செய்யப்படுகின்றதா என்பது மீளாய்வு செய்யப்பட்டு அவை முறையான சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  7. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதிகளும் முறையான சமூகத்தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சமூக தணிக்கை குழு முறையாக செயல்படுகிறதா என்பதும் அக்குழுவின் அறிக்கை கிராமசபையில் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றதா என்பதும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

  8. மக்கள் நிலை ஆய்வறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் கிராமசபையில் வைக்கப்பட்டு முறையான விவாதத்துடன் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும்.

  9. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறை கடிதத்தின் படி அனைத்து கிராமசபைகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் விவாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  10. விவாதப் பொருட்கள் தவிர மக்கள் முன்மொழியும் இதர பொருட்கள் பற்றி கண்டிப்பாக கிராமசபையில் விவாதிக்கபடுவது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.


தோழமையுடன்,
வினோத் குமார்
பொது செயலாளர்
தன்னாட்சி
9445700758

Thursday, 20 July 2023

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

தமிழ்நாடு அரசுக்குத் தன்னாட்சியின் கோரிக்கை!

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஜூலை 14, 2023 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் நிர்ணயித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி மேயர் துவங்கி, துணை மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அதே போன்று நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பிரதிநிதிகளுக்கும் மதிப்பூதியம் வழங்கும் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை அரசு நிறைவேற்றியுள்ளதைத் தன்னாட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.

தமிழ்நாடு அரசின் உள்ளாட்சிக்கான முன்னெடுப்பு

தமிழ்நாட்டில் 2021-இல் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து உள்ளாட்சிகளுக்கான சில முக்கிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து நாம் 2021-இல் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கோரிக்கைகளான ஊராட்சிப் பணிகளுக்காக ஊராட்சித் தலைவரே நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தியது (நாம் 10 லட்சம் வரை உயர்த்தக் கேட்டிருந்தோம்), நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி சபை மற்றும் வார்டு குழு உருவாக்கம் மற்றும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உள்ளது போல் நகராட்சிகளிலும் 'தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்' அறிவிப்பு (G.O Ms. No. 69 Dt: September 13, 2021) போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தன்னாட்சி கோரிக்கை வைக்கின்றது.

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும்

கேரளா போன்ற பிற மாநிலங்களில் உள்ளது போல் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 1996 ஆம் ஆண்டு முதலே இங்கு தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கையாகும். தற்போது ஊராட்சித் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக வழங்கப்படும் ₹2000 என்பது மிகவும் குறைவான ஒன்று. இது எந்த விதத்திலும் அவர்கள் பணியை அங்கீகரிக்கும் விதமாகவோ ஊக்கப்படுத்தும் விதமாகவோ இல்லை. கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். மேலும் பல கிராமங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எளிய மக்களும், இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளாகத் (ஊராட்சித் தலைவராகவோ அல்லது வார்டு உறுப்பினராகவோ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் ஊராட்சித் தலைவர்கள் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி செயல் அலுவலராகவும் உள்ளதால் அவர்கள் ஊராட்சித் தலைவர் பணியோடு சேர்த்து செயல் அலுவலர் பணியையும் செய்து வருகின்றனர். எனவே, கிராமப்புறத்தில் எளிய பின்புலத்திலிருந்து வரும் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூடுதலான மதிப்பூதியம் வழங்குவதன் மூலம் ஊராட்சிக்காக மக்கள் பணி செய்ய எண்ணும் ஆர்வமுள்ள இளைஞர்களும் விளிம்பு நிலை மக்களும் நம்பிக்கையோடு ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பினை வழங்க முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மூன்றடுக்கு ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும் குறிப்பாகத் தன்னாட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புகள் (மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance (IGG), தோழன் மற்றும் அறப்போர்) இணைந்து வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021-யில் கேட்டிருந்தது போல் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ₹15,000, துணைத் தலைவர்களுக்கு ₹7,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ₹5,000 என ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் தன்னாட்சி கேட்டுக்கொள்கிறது.

மிக்க நம்பிக்கையுடன்
#தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான #அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021 - https://thannatchi.in/manifesto-2021/

Thursday, 8 June 2023

தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன

பெறுநர்:
தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம்,

W59G+RWW, TBGP வளாகம்,

இரண்டாம் தளம் வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை,

நன்மங்கலம்,
மேடவாக்கம்,
சென்னை – 600100.


பெறுநர்:
தேசிய உயிர்பல்வகைமை ஆணையம்,

5வது தளம், TICEL பயோ பார்க்,

சிஎஸ்ஐஆர் சாலை,

தரமணி,
சென்னை – 600113.


தேதி: 06 ஜூன் 2023

 

பொருள்: தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன.


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,


தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் (TNBB) 03 மே 2023 அன்றுகல்லூரி மாணவர்களை மக்கள் உயிர்பல்வகைமை பதிவேட்டை (People Biodiversity Register) 20 நாட்களில் புதுப்பிக்க குறுகிய கால பயிற்சியாளர்களாக பணிபுரிய அழைப்பு விடுத்து விளம்பரம் செய்தது. கல்லூரி மாணவர்களின் ஈடுபாட்டை கோருவது வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும், TNBB இன் இந்த விளம்பரம் இன்னும் தயாரிக்கப்படாத இந்த பதிவேடுகளை (PBR) தயாரித்துவிட்டதாகவும் அதை புதுப்பிக்க மட்டுமே செய்ய வேண்டியுள்ளது என்ற வகையிலும் புரிந்து கொள்ளப்படும் விதமாக உள்ளது கவலை அளிக்கிறது.


ஆனால் 07 ஜனவரி 2023 "தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தமிழ்நாட்டில் உயிர்பல்வகைமை மேலாண்மைக் குழுக்களின் நிலை" என்ற தலைப்பில் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (EPW) வெளியான கட்டுரை (இணைக்கப்பட்டுள்ளது)உயிர்பல்வகைமை மேலாண்மை குழுக்களை (Biodiversity Management Committee) உருவாக்குவது மற்றும் PBR தயாரிப்பது தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு பரவலான இணக்கமின்மை இருப்பதைக் கண்டறிந்துள்ளது. கட்டுரையில் வழங்கப்பட்ட RTI பதில்களின்படி, PBR எந்த BMCயிலும் தயாரிக்கப்படவில்லைஅதைத் தயாரிப்பதற்கான செயல்முறை கூட தொடங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகளின் கடிதங்களின் அடிப்படையில் - அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் BMC கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற TNBB இன் கூற்றையும் கட்டுரையின் ஆசிரியர்கள் நிராகரிக்கின்றனர்.

 


சட்டத்தை நடைமுறைப்படுத்த TNBB எடுக்கும் முன் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், PBRகளைத் தயாரிப்பதற்கு உள்ளூர் அளவில் உள்ள BMCகளுக்குஅவை பருவ காலங்களிலும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கான திறன் மேம்பாட்டை உருவாக்குவது என்பது முக்கியமான தேவையாக உள்ளது.


மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் உள்ளூர் புவியியலோடு தொடர்புடைய உயிர் வளங்கள் மற்றும் மக்கள்தொகை பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆவணமாகும். தாவரங்கள்விலங்குகள்பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகிய உயிர் வளங்களும்உள்ளூர் சமூகங்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகளும் இதில் பதியப்பட்டு அவற்றின் பலன்களை அந்த மக்கள் பெறுவதற்கும் அப்பலன்கள் மற்றவர்களால் திருடப்படாமல் இருப்பதற்குமான அடிப்படை ஆவணமாக இந்த PBR செயல்படுகிறது. இது போன்ற பல திருட்டுகள் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் PBR தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகிறது.


எனவே, PBR ஐ அவசரமாககுறுகிய காலத்தில் தயாரிப்பது என்பது நமது உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்கும் செயலாகும். மிகவும் குறுகிய காலத்தில் தன்னிச்சையாக அனுபவமற்ற மாணவர்களால் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்படும் இந்தத் தரவுகள் உயிர்பல்வகைமை சட்டத்தின் நோக்கத்தை கண்டிப்பாக நிறைவேற்றாது.


எனவே, PBR தயாரிப்பதற்கு ஒரு வலுவான நம்பகமான முறைமையை உருவாக்குமாறும் அது உள்ளூர் சமூகங்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் மாநில அளவில் ஒரு பரந்த பன்முகத்தன்மை பற்றிய புரிதலை உருவாக்கும் விதமாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறும், TNBB மற்றும் தேசிய உயிர்பல்வகைமை ஆணையத்திடம் (NBA) நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.


இது தொடர்பான எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு


1. EPW 
இல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படிஉள்ளூர் அரசாங்கங்களால் BMCகள் உருவாக்கப்படவில்லை மற்றும் முறையான PBR தயாரிக்கப்படவில்லை என்பதால், PBR புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பை TNBB மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


2. RD & PR (
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்) துறை மற்றும் MAWS (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்) துறைக்கு BMC களை சரியான முறையில் அமைப்பதற்கான அறிவிப்பை அனுப்புமாறும்அடுத்து நடக்கவிருக்கும் கிராமசபை/பகுதிசபையில் இதை ஒரு விவாதப்பொருளாக இணைத்து பிரச்சாரம் செய்து அங்கீகரிக்குமாறும் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். (இதன் மூலம் கிராமசபை/பகுதிசபைகளில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள்/இளைஞர்கள் இந்த உயிர்பல்வகைமை மேலாண்மை குழுவில் இணைய முன்வர வாய்ப்புள்ளது).


3. 
மேலும்உயிர்பல்வகைமைக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் TNBB மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள்மக்கள் பங்கேற்புடன் PBR ஐத் தயாரிக்கஉள்ளூர் அரசாங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் BMC உறுப்பினர்களுக்கு முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க வேண்டும். (PBR ஐத் தயாரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் 15வது மத்திய நிதி குழு மானிய நிதியை பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல் உள்ளது.)


இப்படிக்கு உண்மையுள்ள,

 

1. Prasanth J, Chennai Climate Action Group

2. Mukesh gauthaman, Eegaikulu

3. Yuvan Aves, Palluyir

4. Saravanan, Visai

5. Ali Basha, Zenith Learning Center

6. Akalya, Young People for Politics

7. Pritika M, Ficus

8. Anuviya, Pitchandikulam Forest

9. Prabhakaran, Poovulagin Nanbargal

10. Inbarasan, Institute of Grassroots Governance,Tiruppur.

11. Kameshwaran, Advocate

12. Joel Shelton, IRCDUC

13. S. Gopalakrishnan, Secretary, Evergreen Nature Conservation

14. Paul Pradeep CN, Trash Troopers

15. Vignesh Rajendran, XR Chennai

16. Vishnupriyan - Thannatchi - Tiruppur

17. Joy Andrew, BR Leopards

18. Roy Anto, MinMini Collective

19. Rohit, Project Living Cities

20. Vandana Viswanath, Vettiver Collective

21. Durga, Coastal Resource Center

22. Sundar, Tamilnadu seed savers network

23. Kavin castro, Advocate

24. Baskar, Jeevaka center for peace and happiness

25. Ramasubramanian, Director, Samanvaya Social Ventures

26. Vishanth, Singaravelar Padipagam

27. R.Selvam, Tamilnadu organic farmer's federation

28. Naresh, journalist and Documentary film maker

29. Raghul, secretary AIYF Udumalpet.

30. A. Azad kamil, Ongil Nature Trust, coonoor.

31. Ajay Ludra, Nilgiri Natural History Society.                     

32. Johnny John, NilgiriScapes

33. Satheesh Perumal, Makkal Padhai

34. Ananthoo, Safe Food Alliance

35. Gopi Deva, OFM

36. Seethalakshmi, TNIVK

37. Mohan kumar M, Wildlife Biologist

38. Nityanand Jayaraman, Save Chennai Beaches Campaign

Wednesday, 7 June 2023

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களைக் கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா? - தன்னாட்சியின் கண்டன அறிக்கை

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களக் 

கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா?

தன்னாட்சியின் கண்டன அறிக்கை


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்கள், 'கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு' சார்பாக புளியந்துறை ஊராட்சித் தலைவர் தோழர் நேதாஜி அவர்கள் முன்னிலையில் கடந்த மே 18, 2023 அன்று 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) தொடர்பான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளுக்கு (E-Tenders) ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராடிய கிராம ஊராட்சித் தலைவர்களை காவல்துறையினர் மிக மோசமாக நடத்தி, இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். அதைக் கண்டித்து காவல்துறைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர் காவல்துறையினர்.

 

ஏற்கனவே ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல புகார்களை ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட அளவில் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் ஊராட்சித் தலைவர்கள் நடத்தியுள்ளனர். கடைசியாகக் கூட்டமைப்பின் ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் மே 5, 2023 அன்று ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அறவழியில் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் அவர்களைச் சட்ட விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்றும் பாராமல் சட்டையைப் பிடித்தும், குண்டு கட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த கண்ணியமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறது தன்னாட்சி.  

 

ஊராட்சி அளவில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும் கிராம ஊராட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்பது விதியாகும். குறிப்பாக பட்டியல் பிரிவு மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்குப் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தான் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு இந்தியக் குடிமகன்களுக்கும் அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகும். ஆனால் மேலுள்ள எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்து கொண்ட ஒன்றிய அளவிலான அலுவலர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரின் மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. மேலும் தோழர் நேதாஜி உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி.

 

மேலும் இது போன்று ஊராட்சி அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் தலையீடுகள் இருப்பதாகக் கூறி ஊராட்சித் தலைவர்கள் போராடுவது தமிழ்நாடு முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. அரசு உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிற்குத் தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in



Tuesday, 6 June 2023

அதிகாரப்பரவலுக்கு எதிரான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்கக் கூடாது!

அதிகாரப்பரவலுக்கு எதிரான

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை

அரசு ஏற்கக் கூடாது!

 

தன்னாட்சி அறிக்கை


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கடந்த மே 15, 2023 முதல், சென்னை பனகல் மாளிகை அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டம் (மே 18, 2023 வரைநடத்தியதுஅரசு கருவூலத்திலிருந்து ஊதியம், TNPSC மூலம் பணியிடங்களை நிரப்புதல்மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றியத்துக்குள் பணியிட மாற்றம் மற்றும் அரசு பணியாளர்களுக்கான சலுகைகள் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனசமீபத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களை (பிரிவு 104 மற்றும் 106) உள்ளடக்கிய பணிவிதிகள் அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முதன்மையாக வைக்கப்பட்டது.

அதாவதுஊராட்சி செயலாளர்கள் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை என்பதையே இந்தப் போராட்டம் உணர்த்துகிறதுஅவர்களின் கோரிக்கைகள், அவர்கள் கிராம ஊராட்சியின் பணியாளர்களாக இல்லாமல் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக வேண்டும் என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளதுஇது அடிப்படையில் உள்சுயாட்சி அரசுகளின் சுயாட்சித் தன்மையை (இந்திய அரசமைப்புச் சட்டம் 243G) கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கனவே (மே 12, 2022)தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவுகள் 104 மற்றும் 106 இல் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள்ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர்களுக்கு இணை அதிகாரம் மிக்க நபர்களாக மாற்றும் என்பதையும் ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றமோ அல்லது கிராமசபையோ கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதையும் விளக்கி அந்தச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறக் கோரி தன்னாட்சி வலியுறுத்தியுள்ளது. (அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியைக் கையாளும் PFMS இல் MAKER (இணையவழியில் பணப்பரிமாற்றத்தை துவங்கும்) அதிகாரம் உள்ள ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்வதுதண்டிப்பது போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்திடம் இருப்பதை உறுதி செய்வதே எளிய மக்கள் பெரும்பாலானோர் பிரதிநிதிகளாக (50 சதவீதத்திற்கும் மேல் பெண் பிரதிநிதிகள்; 18 சதவீதத்துக்கு மேல் பட்டியல் பிரதிநிதிகள்இருக்கும் ஊராட்சி அரசுகளை வலுப்படுத்துவதாகவும் அதிகாரப்பரவலை உறுதி செய்வதாகவும் இருக்கும்.

ஏற்கனவேபல இடங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி சார்ந்த பல பணிகள் தங்களுக்கு தெரியாமல் ஒன்றிய அளவிலே முடிவு செய்யப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில்ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக அதாவது ஒன்றிய அளவிலான அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையில் முடிவெடுப்பதுஅதிகாரப்பரவலுக்கும் கிராம உள்ளாட்சி அதிகாரங்களுக்கும் எளிய மக்களுக்கும் எதிராக அமையும் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த முடிவும்ஊராட்சி செயலாளர்கிராம ஊராட்சியின் செயல் அலுவலரான கிராம ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் கட்டுப்பட்டவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தன்னாட்சி அழுத்தமாக வலியுறுத்துகிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in

Thursday, 25 May 2023

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

தன்னாட்சி கண்டன அறிக்கை

கடலூர் மாவட்டத்தில், கடந்த மே 1 அன்று நடந்த கிராமசபையில், மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, சின்ன நெற்குணம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, எறும்பூர் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில், மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLC India) தனது சுரங்கப் பணி விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகளின்,  ஊராட்சி செயலாளர்கள் 6 பேரை, அந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்.எல்.சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய குறிப்பிட்ட 6 ஊராட்சிகளின் ஊராட்சி செயலாளர்கள் மட்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, "அரசுக்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைத்தால் தண்டிக்கப்படுவீர்கள்" என்று ஊராட்சி செயலாளர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலன்றி வேறல்ல. கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரின் (கிராம ஊராட்சி) இந்த மக்கள் விரோதச் செயலைத் தன்னாட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு கிராம ஊராட்சி, தனது எல்லைக்குட்பட்ட பொதுப் பிரச்சனைகளில், ஊராட்சியின் சட்டப்படியான அதிகாரங்களுக்குட்பட்டு, மக்களின் முடிவின் அடிப்படையில், கிராமசபையில் தீர்மானங்களை நிறைவேற்ற உரிமை உண்டு. அப்படிப்பட்டத் தீர்மானங்களை ஆய்வுக்குட்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பளித்து, தேவைப்பட்டால் அவற்றை  நிராகரிக்கும் அதிகாரத்தை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 202, ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) வழங்கியுள்ளது.

இந்நிலையில், கிராமசபையில் ஒரு பொதுப் பிரச்னை குறித்த மக்களின் விவாதங்களை, முடிவுகளை தொடக்கத்திலேயே ஊராட்சி செயலர்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராமசபையின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்திருக்கும் மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தின் ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) அவர்களுக்கு தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.

தோழமையுடன்

வினோத் குமார்
பொதுச் செயலாளர்
தன்னாட்சி
9445700758

thannatchi.in