Friday, 24 June 2016

PRESS RELEASE: "No More New TASMAC Shops" Satta Panchayat demands Policy Announcement : ”புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது” என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது" என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

                - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சிகளின் முதற்கட்டமாக டாஸ்மாக் விற்பனை 2 மணிநேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தது வரவேற்புக்குரியது. பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய மதுக்கடைகள், பள்ளி-கல்லூரி-வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், சந்தை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகள், அதிகம் பேர் குடிக்கும் மதுக்கடைகள்(அதிக வருமானம் உள்ள கடைகள்) போன்ற கடைகளைப் பட்டியலிட்டு மூடியிருந்தால் இம்முயற்சி மிகுந்த பலனைத் தந்திருக்கும்.

2013ல் நடைபெற்ற நிகழ்வோடு பொருத்திப்பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது. 2013ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், 2015ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்தான பட்டியலை வாங்கிப் பார்த்தபோது மொத்த எண்ணிக்கை குறையவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது, மூடப்பட்ட கடைகளில் மிகப்பெரும்பாலான கடைகள்  அருகிலோ வேறு இடத்திலோ திறக்கப்பட்டது தெரியவந்தது. 
இதுபோன்ற நடைமுறையில் மூடப்பட்ட 500 மதுக்கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆகவே, தமிழக அரசு "..இனிமேல் புதிதாகவோ, மூடப்பட்ட மதுக்கடைகளை இடமாற்றம் செய்தோ டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு/டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கவேண்டும்" 

அதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பார்களை மூடுதல், மறுவாழ்வு மையங்கள் துவங்குதல் போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கேரளா அரசானது ஆண்டுக்கு 10% மதுக்கடைகளை மூடி 10 ஆண்டுகள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம் என்று தெளிவான காலவரையறை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், தமிழக அரசும் பூரண மதுவிலக்கை நோக்கிய தனது திட்டம் என்ன என்பதை(காலவரையறையோடு) அறிவிக்கவேண்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274

No comments:

Post a Comment