87545-80274, 87545-80270
குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.. மூடப்பட்ட மதுக்கடைகளைத் மீண்டும் திறக்கக்கூடாது... பூரண மதுவிலக்கு எப்போது அமலாகும்..?
- உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் தமிழக அரசு
பத்திரிகைச் செய்தி ( 12-04-2017)
உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31, 2017 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் விளைவாக தமிழகத்தில் 3321 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின. ஆனால், இந்தக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் உடனடியாகத் திறக்கும் பணிகள் தமிழக அரசால், டாஸ்மாக் நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனால், பாதிக்கப்படும் மக்கள் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் பகுதிகளில் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படிப்பட்டதொரு போராட்டத்தில்(திருப்பூர் சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில்) ஈடுபட்ட பெண் ஒருவரை திருப்பூர் ADSP பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்து, கடுமையாகத் திட்டிய காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேற்று( 11-02-2017 ) வெளியாகியது. இதுகுறித்த புகைப்படங்கள் இன்று(12-02-2017) நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
அந்தப் பெண்ணின் கன்னத்தில் விழுந்த அடியானது, ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி. மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம்தான் ஜனநாயகம். மக்களின் தேவைகள், உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துவதுதான் ஆட்சியாளர்களுக்கு அழகு. டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் கூட கண்டிப்பாக கடைகளைத் திறப்போம் என்று தமிழக மக்கள் மீது "சாராயத் திணிப்பு" செய்யும் தமிழக அரசின் செயல் கேவலமானது, கண்டனத்துக்குரியது. இந்த சர்வாதிகாரப்போக்கு ஆபத்தானது. இது தொடருவதை அனுமதிக்க முடியாது, கூடாது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த தீர்ப்பில் (ஆகஸ்ட்7,2014 குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது என்பது அரசியல் சாசனம் குடிமக்களுக்குக் கொடுத்த உரிமையைப் (Article 21) பறிப்பதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியான, கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு டாஸ்மாக் கடைகள் தடையாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அந்த வழக்கில் குடியிருப்புப் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை 2 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டது. ( உத்தரவு இணைப்பில்)
மேற்குறிப்பிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பின்பற்றவில்லை என்பது ஒருபக்கம். மறுபக்கத்தில், அதிமுக அரசானது தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம், பார்களை மூடுவோம், மறுவாழ்வு மையங்களை திறப்போம் என்று அறிவித்தது. ஆனால், "படிப்படியாக" மதுக்கடைகள் மூடுவதற்கு எத்தனை படிகள் உள்ளன, எந்த ஆண்டில் எவ்வளவு கடைகள் மூடப்படும் என்பது குறித்து எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் வருகிறதோ, ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறதோ, அப்போது அந்த அதிருப்தியை சமாளிக்க, திசைதிருப்ப சில நூறு கடைகள் மூடப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
இதுவரை 1000 கடைகள் மூடப்பட்டதாக சொல்லும் தமிழக அரசு, தற்போது தமிழகத்திலுள்ள மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எங்களின் சந்தேகம் என்னவென்றால், 1000 கடைகளை மூடிவிட்டு மீண்டும் வேறு ஒரு இடத்தில் 1000 கடைகளையோ அல்லது அதற்கும் மேற்பட்ட கடைகளையோ தமிழக அரசு திறந்திருக்க வாய்ப்புண்டு. 2013ல் தேசிய நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்ட போது இதேதான் நடந்தது.
மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஒன்றும் பழமோ,நிழலோ தரும் மரமல்ல; வெட்டப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் வேறு இடத்தில் நட்டுவைக்க. அது விஷக்கடைகள். மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் விஷக்கடைகள். அப்படிப்பட்ட கடைகள் மீண்டும் வேறு இடத்தில் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. பூரண மதுவிலக்கை நோக்கிய அரசின் கொள்கை முடிவில் இது அடுத்த "படியாக" இருந்துவிட்டுப்போகட்டும்.
விவசாயிகள் பிரச்னை, வறட்சியைக் கையாண்ட விதம், டாஸ்மாக் பிரச்னை, காவல்துறை கொண்டு போராட்டங்களை ஒடுக்கும் முறை, ஓட்டுக்குப்பணம் தந்த விவகாரம் இவையெல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இந்த ஆளுங்கட்சிக்கு "ஆளும்" தகுதி, திறமை, தார்மீக உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆளுங்கட்சியின் போக்கு இப்படியே தொடருமானால் விரைவில் மக்கள் புரட்சி வெடிக்கும்; அப்போது இந்த ஆட்சியாளர்கள் கண்டிப்பாக தூக்கியெறியப்படுவார்கள்.
இதனைப் புரிந்துகொண்டு, இனிமேலாவது தமிழக அரசானது பூரண மதுவிலக்கை விரைவாக அமல்படுத்த முன்வர வேண்டும். மூடப்படும் மதுக்கடைகளை எந்த இடத்திலும் திறக்கமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். மறுவாழ்வு மையங்களை உடனே துவங்க வேண்டும். செய்யுமா தமிழக அரசு..?
குறிப்பு: குடியிருப்புப் பகுதிக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் முக்கியப்பகுதி இணைப்பில்...
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274, 87545-80270
No comments:
Post a Comment