Thursday, 31 August 2017

பத்திரிகை செய்தி (30/08/2017) அரசின் ஓட்டுனர் உரிமம் உத்தரவு

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (30/08/2017)

அரசின் ஓட்டுனர் உரிமம் உத்தரவு

மக்களுக்கு கற்காலம்!

காவல்துறை - RTO க்கு பொற்காலம்!!

தமிழகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் .தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவால் பொதுமக்கள் – தொழில் முறை வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். மாற்று வழி முறைகளுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு நடைமுறைபடுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

தமிழக அரசு வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது ஓட்டுநர் உரிமத்தின் அசலினை வருகின்ற செப்டம்பர் 1, 2017 முதல் வாகனம் ஓட்டும் பொழுது கையில் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் கடந்த ஆகஸ்ட் 22, 2017 ம் தேதி செய்தி வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை பெருமாநகர காவல்துறை, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை என கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி செய்தி வெளியிட்டனர்.

அடிப்படை ஆராய்ச்சி கூட அல்லாத செயல் :

அசல் உரிமத்தை வாகனம் ஓட்டும் பொழுது கையில் வைத்திருக்க வேண்டுமென கொடுத்த உத்தரவின் பின்புலம் இன்னும் குழப்பமாகவே உள்ளது. மோட்டார் வாகனசட்டம் 1988-ன் படி அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியமல்ல. தற்போது வந்துள்ள புதிய உத்தரவு இதற்கு எதிர்மறையாக உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் இது தொடர்பாக கூறும் பொழுது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டவர்களும் நகலை வைத்து வண்டி ஓட்டுகின்றனர். ஆதலால் காவல் துறையினரால் இவர்களை தடுப்பது கடினமாகிறது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நவீன உலகத்தில் இது போன்ற தவறுகளை தடுக்க இந்த மாதிரியான விதிமுறைகளை கொண்டு வருவது வியப்பிற்கும் நகைப்பிற்கும் உரியது. தொழில்நுட்ப உதவியுடன் சில வினாடிகளில் ஓட்டுனரின் வரலாற்றினை கொண்டு வரமுடியும்.ஆனால் நமது போக்குவரத்துதுறை அமைச்சர் நம்மை கற்காலத்திற்கு அழைத்து செல்ல கடுமையாக உழைக்கிறார். அமைச்சரின் இந்த புதிய விதியானது ஒரு பயனற்ற மற்றும் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒன்றாகும். ஆதார்கார்டில் அசல் என்ற ஒன்றே கிடையாது. தமிழக அரசினால் ஒரு ஓட்டுனரின் தகவல் மற்றும் அவரது உரிமத்தின் தற்போதைய நிலை குறித்து வினாடிகளில் அறிய தொழில்நுட்ப உதவிகளுடன் புதிய கருவிகளை உருவாக்க முடியும். தற்போது அபராதம் வசூலிக்கும் பொழுது POS (Point of Sale) தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதனோடு உரிமத்தின் நிலையினை அறிய பெரிய அளவிலான தொழில் நுட்பம் தேவையில்லை. இதனை எளிதாக செய்ய முடியும்.

தொழில்முறை வாகன ஓட்டுனர்களின் நடைமுறை சிக்கல்:

தொழில் ரீதியாக வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் தங்களது உரிமத்தை தொலைத்தால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். புதிய ஓட்டுநர் உரிமம் வாங்க குறைந்தது 20 முதல் 30 நாட்கள் ஆகின்றன. இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அரசானது தேவையான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

புதிய அசல் உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்கள்:

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறை எளிதானதல்ல. தொலைந்த ஓட்டுநர் உரிமத்தை இணைய வழியில் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. உரிமம் தொலைந்தவுடன் காவல் நிலையத்தில் புகாரளித்து CSR மற்றும் FIR பெறவேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்து தொலைந்த அசல் உரிமம் கிடைக்கவில்லையென்றால் காவல் துறை கண்டுபிடிக்க இயலவில்லை என (Missing Certificate) சான்றிதழ் தரவேண்டும். இந்த சான்றிதழை காவல் துறையிடமிருந்து பெறுவதே மிக கடினமானது மற்றும் பல நாட்களாகும். சில இடங்களில் சில நூறுகளை செலவழிக்கும் சூழலில் மக்கள் தள்ளப்படுகின்றனர். பிறகு இந்த சான்றிதழுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை அணுகிமேலும் 20 அல்லது 30 நாட்களும் பணமும் செலவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையினை இணைய வழியில் எளிதாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

வண்டியின் அசல் பதிவு சான்றிதழும் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையினையும் அரசு அறிவிக்கிறது. இது நடைமுறை சாத்தியமல்ல. வண்டியின் முக்கிய சான்றிதழ்களை கையிலோ வண்டியிலோ வைத்திருப்பது சாத்தியமல்ல. ஒரு வேளை வண்டி தொலைந்தால் அசல் பதிவு சான்றிதழ்களும் இல்லாமல் அதன் உரிமையாளர் மிகவும் இன்னலுக்கு ஆளாவார். இது போன்ற பிரச்சனைகளை தடுக்க அரசு என்ன வழிகளை கையில் எடுத்துள்ளது? ஒரு வேளை வண்டி கடனில் பெறப்பட்டால் வண்டியின் உரிமம் கடன் கொடுத்தவரிடமே இருக்கும்.

இது போன்ற புதிய விதிகளால் குடிமக்கள் சந்திக்க நேரிடும் விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற மாற்றங்களை செய்ய வேண்டுமென அரசுக்கு சட்டபஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகள் :

1.   அரசு தொழிநுட்ப ரீதியாக தங்களை வளர்த்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தின் நிலையை அறிய புதிய கருவிகளை காவல் துறைக்கு வழங்க வேண்டும்.

2.   அசல் உரிமம் கட்டாயம் என கொண்டு வரப்படும் விதிமுறையினால் வரும் புதிய நடைமுறை சிக்கலை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

3.   ஒரு வேளை உரிமம் தொலைந்தால் கிடைக்கும் வரை அல்லது புதிய உரிமம் பெரும் வரை அந்த ஓட்டுநர் வாகனம் ஓட்ட என்ன செய்ய வேண்டுமென அரசு அறிவிக்க வேண்டும்.

4.   அசல் உரிமத்தை ஓட்டும் பொழுவைத்திருக்க கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக எளிய மற்றும் மிகவும் பயனுள்ள இணையமுறைவழிகளை அரசு பயன்படுத்த வேண்டும். மக்கள் சிரமத்திற்கு உள்ளாக கூடாது.

இந்திய பிரதமர் மின்னணு முறையில் அனைத்தினையும் மாற்ற முயற்சிகள் எடுக்கும் பொழுது நம்மை தமிழக அரசு கற்கால ஆட்சிக்கு அழைத்து செல்ல முயல்வது வருந்தத்தக்கது. இந்த விதிமுறை மக்களுக்கு கற்காலமாகவும் காவல்துறைக்கும் RTO க்கும் பொற்காலமாகவும் அமையும் என்பதால் மாற்று கருத்து இருக்க முடியாது.

சட்டமும் விதிமுறைகளும் மக்களின் வாழ்வினை எளிமை படுத்துவதற்காகவே தவிர மக்களை சிரமப்படுத்த அல்ல.

வைகை ஆற்றுநீரினை சூரியனிடமிருந்து காப்பாற்ற தெர்மக் கோல் விட்டதற்கும் இந்த புதிய போக்குவரத்து விதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக இருக்கிறது நமது அரசின் செயல்பாடு.

                                                                            சிவ. இளங்கோ
                                   சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                   87545-80270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment