Saturday, 30 September 2017

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு தமிழகத்திற்கு 4000 கோடி தர மறுப்பு!!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (30-09-2017)

தொடர்புக்கு : 87545 80270

 

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு தமிழகத்திற்கு 4000 கோடி தர மறுப்பு!!

 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழக  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய 4000 கோடியை மத்திய அரசு தர மறுப்பு. அக்டோபர் 2 அன்று நடைபெற உள்ள கட்டாய கிராம சபையை முறையாக தமிழகம் முழுவதும் நடத்த கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

 

மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசிற்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத  காரணத்தால் மத்திய அரசு இத்தொகையை தர மறுக்கின்றது. பலமுறை தில்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த நிதியை பெற எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

 

கோவைக்கு 60 கோடி, சென்னைக்கு 200 கோடி இழப்பு

இந்நிதியின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய 60 கோடி கிடைக்காததினால் 500 துப்பரவு பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் தவிக்கின்றது. கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன் தேர்தலை எதிர்நோக்கி பல இடங்களில் அளவிற்கு மீறி பணம் செலவழிக்கப்பட்டதால் தற்பொழுது ஊழியர்களின் சம்பளத்திற்கே திண்டாட வேண்டியுள்ள நிலை நிலவுகிறது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சிக்கு 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர மத்திய தணிக்கை குழு சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கபடாத காரணத்தால் 2000 கோடி (17 வருடங்களுக்கு) வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில்  இல்லாததினாலும், தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்வது மட்டுமே தங்களுடைய தலையாய பணி என்றிருக்கும் மாநில அரசிற்கும் இப்பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலை இருப்பது போல் தெரியவில்லை.

 

 

டெங்கு உயிரிழப்பு  

 

அதிகார பகிர்வின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் 29 துறைகளை கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனம் (Article 243G) அனுமதி அளித்திருக்கிறது. சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல்  பரவி வரும் இந்த வேளையில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறது. தேர்தல் நடந்து உள்ளாட்சி பொறுப்பாளர்கள் இருந்திருந்தால் அடுத்த தேர்தலுக்கு அஞ்சி ஓரளவிற்காவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது நியமிக்கபப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களுக்கு  கிராம மக்களோடு எந்த பிணைப்பும் இல்லாததால் எவ்வித துரித நடவடிக்கை எடுக்காமல் 30க்கும் அதிகமான உயிர்களை டெங்குவிற்கு பலி கொடுத்துருக்கிறது தமிழகம்.

 

உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் பின்னடைவு ஏற்படும் என்பதால் தேர்தலை நடத்த விடாமல் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்து திமுக  முட்டுக்கட்டை போட்டது. தற்பொழுது அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளால் தேர்தலை சந்திக்க பயந்து பலமுறை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தேர்தலை நடத்த ஒத்துழைக்காமல் அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாவும் இல்லாமல் இரட்டை இலை சின்னமும் இல்லாமல் தேர்தலை சந்தித்தால்  கடும் வாக்கு சரிவை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த விருப்பம் இல்லாமல் இருக்கிறது அதிமுக அரசு. இரட்டை இலை சின்னம் வரும் வரை தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் வருத்தத்துக்குரிய நிதர்சமான உண்மை. இரண்டு திராவிட கட்சிகளின் சுயநல அரசியலினால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பதை அறியாமல் செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

 

2005இல் குஜராத் மாநில பஞ்சாயத்து அமைப்புகள் vs குஜராத் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நடந்த வழக்கில், தேர்தலை எக்காரணத்திற்காகவும் (delimitation பிரச்னை உட்பட) தள்ளிவைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 73வது அரசியல் சாசன திருத்தத்தின் படி கட்டாயமாக 5 வருடத்திற்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். சட்டத்திற்கும் கட்டுப்படாமல், மக்கள் பிரச்னைகளில் அக்கறை இல்லாமல், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு அஞ்சாமல் இருக்கும் மாநில அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டிக்கிறது 

  

வருடத்திற்கு 4 முறை கட்டாயமாக கிராம சபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராம சபைகள் நடைபெற்று வருகிறது. இந்திய ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாகவும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் (Representative democracy) இருந்து பங்கேற்பு ஜனநாயகமாக (Participative democracy) மாற்ற கிராம சபைகள் அவசியம். கடைக்கோடி மக்களை அதிகாரப்படுத்துதல் கிராம சபையின் முக்கியமான சிறப்பு.

 

ஆனால் பெரும்பான்மையான கிராம சபைகள் பெயரளவிற்கே நடைபெறுகிறது. தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராம சபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்து கொள்ள விட்டாலும்   பொய் கையெழுத்து போட்டு கிராம சபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட புகார்களை பல கிராம சபைகளில் இருந்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளாட்சி அமைப்புகள் சம்மந்தப்பட்ட வரவு-செலவு கணக்குகள் மற்றும் தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

 

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கிராம சபைகளை வலிமைப்படுத்துவதற்காக பயிற்சி பட்டறைகள், கருத்தரங்கம், மாதிரி கிராம சபை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. முறையாக கிராம சபைகளை நடத்த இயக்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2 கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக ஈரோடு,நெல்லை,சேலம் ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிராம சபைகளை சரியாக நடத்த அனைத்து ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கிராம சபைகளை விதிகளுக்குட்பட்டு நடத்தாத அரசு அதிகாரிகள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவும் தமிழக அரசிற்கு  சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

 

இரட்டை இலை சின்ன விவகாரத்தால் தமிழக மக்களுக்கு 3ஆம் அரசாங்கம் (3rd tier government) இல்லாமல் இருக்கிறது. இரட்டை இலை சின்ன விவகாரத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, இரட்டை இலை வழக்கின் மேல் மத்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் வேளையில் (4 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருக்கிறது), இந்த 4000 கோடி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மிக அவசியம். தகுந்த அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து இந்த தொகையை பெற வேண்டும். செய்யுமா தமிழக அரசு?

 

 

சிவ இளங்கோ, தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு  : 87545 80270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment