பத்திரிகை செய்தி (06-09-5017)
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 3 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் (சம்பள உயர்வு கேட்டு), புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக 07-09-2017 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் முதல் கோரிக்கையாகும். தமிழ்நாடு தற்போது 4 லட்சம் கோடி கடனில் தத்தளித்து கொண்டு இருக்கும் வேளையில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமற்றது. அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர். 8 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் 1 சதவிகிதத்துக்கும் கீழ் இருக்கிற அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 41% (ஊதியம் - 47000 கோடி, பென்ஷன் - 21000 கோடி) செலவிடப்படுகிறது. . 2020ல் பெற வேண்டிய ஊதிய உயர்வை 2010லேயே தமிழக அரசு ஊழியர்கள் பெற்று விட்டனர். எனவே அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் அரசை வேண்டுகிறது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது அரசு உழியர்களின் இரண்டாவது முக்கிய கோரிக்கையாகும். புதிய பென்ஷன் திட்டத்தில் பல குளறுபடிகள் செய்து ஊழியர்களுக்கு சரியாக பென்ஷன் தராமல் இருப்பதால் புதிய பென்ஷன் திட்டம் மேல் ஒரு பயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். தெரிந்தே புதிய பென்சன் திட்டப்படி வேலையில் சேர்ந்துவிட்டு தற்போது பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருவது நியாயமா? புதிய பென்சன் திட்டத்தின் குளறுபடிகளை போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டுமென அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகிறது.
அதிக சம்பளம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறது
1. லஞ்ச- ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை யூனியன்களில் இருந்து நீக்குவோம், அரசு அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு அம்ச கோரிக்கையுடன் போராட தயாரா?
- சம்பளம் சரி.. 'கிம்பளம்' என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிய அரசு ஊழியர்களே.. என்றாவது ஊதிய உயர்வு அற்ற போராட்டத்தில் மக்கள் நலனுக்காக மட்டும் இறங்கி போராடி உள்ளீர்களா?
- ஊழலில் வளரும் நாடான இந்தியாவிற்கு உற்ற தோழனாக நிற்கும் அரசு ஊழியர்களே - ஆசிரியர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை வெளி கொண்டுவர நீங்கள் தயாரா?
- வருடந்தோரும் உங்கள் சொத்து விவரங்களை வெளியிட நீங்கள் தயாரா?
- ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்தால் கூட என்னைத்தூக்கிலிடுங்கள் என கூறிய அரசு அதிகாரி சகாயம் அவர்கள் உள்ள அதே தமிழகத்தில் தான் பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயையும் லஞ்சமாக பிடுங்கி தன்மானத்தை இழந்து பிச்சை எடுப்போரை யூனியன் என்ற பெயரில் அவர்களை காப்பாற்றுவதை நிறுத்துவீர்களா?
- அரசு செய்வது தொழிலல்ல, சேவை! என்றாவது சேவை மனப்பான்மையுடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறீர்களா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் அலுவலகம் வரும் மக்களை, மக்களாக நினைத்து உரிய மரியாதையுடன் சேவை கொடுத்திருக்கிறீர்களா?
- பல நிகழ்வுகளில் நல்லவன் போல அரசியல்வாதிகள் மீது ஊழல் முத்திரை குத்தும் நல்லவர்களே.. உங்கள் உறுதுணை இல்லாமல் ₹1 பைசா ஊழல் கூட நடக்க முடியாது. தமிழக சீரழிவிற்கு நீங்கள் ஆற்றிய இந்த பெருந்தொண்டை ஒப்புக் கொள்வீர்களா??
- தமிழ்நாடு +2 அரசு பாடத்திட்டம் 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமூக அக்கறையோடு சுயநலமில்லாமல் மக்களுக்காக என்றைக்காவது போராடி இருக்கீறிர்களா?
- மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட கூடிய அரசு சேவைகளின் மக்கள் சாசனம் (Citizen Charter) தத்தம் அலுவலகத்தில் மக்களின் பார்வைக்காக வைப்பீர்களா?
மூன்று மாதங்கள் முன்பே ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து அடையாள வேலைநிறுத்தம், போராட்டங்கள் மட்டுமே தங்களுடைய ஒரே வேலை என்பது போல் செயல்பட்டு அரசுக்கு கெடு விடுத்து கொண்டு இருக்கும் அரசு ஊழியர்களை இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது வியப்பளிக்கிறது. இந்த அரசிற்கு வேடிக்கை பார்ப்பது மற்றும் குண்டர் சட்டத்தை உபயோகிப்பதை தவிர எதுவும் தெரியாதா?
சாமானிய மக்களால் அரசு அலுவலுங்களில் சாதாரண சேவையை கூட இடைத் தரகர்கள்,லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை. கரை வேட்டிகளுக்கு ஒரு மரியாதை சாமானிய மக்களுக்கு ஒரு மரியாதை, யாரும் ஏதும் செய்து விட முடியாது என்ற அகந்தையுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு எதற்கு சம்பள உயர்வு என்று மக்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மமதையுடன் செயல்படும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை அதிமுக அரசு நமக்கு பெற்றுத்தந்துள்ளது.போராட்டங்களை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் ஊழல்-பினாமி-அதிமுகஅரசு தத்தளித்து திக்குமுக்காடி வருகிறது. ஜல்லிக்கட்டு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் என்று இந்த வருடத்தில் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த பல போராட்டங்கள் நடந்த போதும் இந்த அரசு "அணிகள் பேச்சுவார்த்தையில்" மட்டுமே கவனமாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதமும் நீட்-அனிதா போராட்டங்கள், வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று "அமோகமாக" துவங்கி உள்ளது.
அரசாங்கம் வேலை கொடுக்கும் அட்சய பாத்திரமும் அல்ல, மக்கள் வரிப்பணம் முழுவதும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் சம்பளத்திற்காக மட்டும் அல்ல.
முதலில் விரைவான வெளிப்படையான இலஞ்ச – ஊழலற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களே முன் வாருங்கள். உங்கள் கோரிக்கைக்கு மக்கள் தானகவே ஆதரவளிக்க முன் வருவார்கள்.
சிவ இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80270
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Member : member.sattapanchayat.org | Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com
No comments:
Post a Comment