நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை உடனே அறிவிக்கவேண்டும்...இல்லையேல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நகர்ப்புறத் தேர்தல்களை நடத்திய பிறகே அறிவிக்கவேண்டும்.
மாநில தேர்தல் ஆணையத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அனுப்பியுள்ள மனு...(3/12/2019)
73வது மற்றும் 74வது அரசியல் சாசன திருத்தம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டபிறகு(1992) அதன் தொடர்ச்சியாக தமிழக பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1996ம் ஆண்டில் தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் 2001,2006,2011 என ஒவ்வொரு ஐந்து ஆண்டு கால இடைவெளியிலும் தேர்தல் நடத்தப்பட்டது. 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் 04-10-2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டது. இந்த சூழலில், கடந்த 02-12-2019 அன்று தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தங்களால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டபோது தாங்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் "….நிர்வாக காரணங்களால் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் விரைவில் தேர்தல் நடத்தப்படும்" என்று தெரிவித்தீர்கள். இதுவரை நடந்த நான்கு உள்ளாட்சித் தேர்தல்களிலும்(1996,2001,2006,2011) ஊரகம்,நகர்ப்புறம் என அனைத்து இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த வழக்கத்தை மாற்றி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அட்டவணையையும் அறிவிக்க வேண்டுகிறோம்(வாய்ப்பிருந்தால் இப்போதைய தேர்தல் அட்டவணையையே திருத்தி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் இரண்டிற்கும் சேர்த்துத் தேர்தல் நடத்த வேண்டும்). ஒருவேளை, சேர்த்துத் தேர்தல் நடத்தமுடியாதபட்சத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்திமுடித்த பிறகு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை சேர்த்துவெளியிடவேண்டும். அதுவரை, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டாலும், இறுதிக் கட்டத் தேர்தல் முடிவடைந்த பின்னரே அனைத்துக் கட்ட முடிவுகளும் வெளியிடப்பட்டது என்பதை நினைவுகூர்கிறோம். ஒரு கட்டத்தின் தேர்தல் முடிவுகள் அடுத்த கட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலத்தின் வாக்காளர்கள் மத்தியில் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போடுவதற்கான எண்ணத்தை தூண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அணுகுமுறை என்பது தங்களுக்கு நன்கு தெரியும். தேர்தல் முடிவுகள் என்பது மாநிலத்தைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுள்ள சூழலில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை முன்னரே வெளியிட்டால் அது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், ஊரக உள்ளாட்சியில் அதிகம் வெற்றிபெற்ற கட்சிக்கே வாக்களிக்கும் எண்ணப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது தேர்தல் முறையின் அடிப்படையான "சமதள வாய்ப்பு"(Level Playing Field) என்ற கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது. மேலும், இதுபோன்று பிரித்துத் தேர்தல் நடத்தும் முறையானது எதிர்காலத்தில்வரும் மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மேலும், 10வது,12வது வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நெருங்கிவருகிறது என்பதையும் கருத்தில் கொண்டு உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கக்கோருகிறோம். அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்திவைக்கக் கோருகிறோம்
No comments:
Post a Comment