Sunday, 31 May 2020

Press Release_ஊராட்சிகளின் சுதந்தரத்தில் தலையிட வேண்டாம்!


PRESS RELEASE

 

ஊராட்சிகளின் சுதந்தரத்தில் தலையிட வேண்டாம்!

 

தற்போது ஊரடங்கு காலத்தில், மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்வதற்கும்கொரோனா பெரும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பல மாநிலங்கள் தங்கள் உள்ளாட்சி அரசுகளின் பங்கேற்பை அதிகப்படுத்தியுள்ளன.

 

ஒடிசா அரசு, மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கியுள்ளது. பலகாலமாக பஞ்சாயத்துகளை வலுப்படுத்தி வரும் கேரள அரசாங்கம், தற்சமயம் ஊராட்சிகளுக்கு கூடுதலாகப் பல பொறுப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கேரளா மற்றும் ஒடிசாவின் இந்த நடவடிக்கைகளை பல உலக நாடுகள் போற்றிவரும் இந்தச் சூழலில்தான், தமிழகத்தில் கடந்த 21.05.2020 அன்று, ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அவசர குறிப்பாணை, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், கிராம ஊராட்சியின் முதல் வங்கி கணக்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், குடிநீர் மற்றும் இதர பராமரிப்புகளுக்குத் தவிர, வேறு பணிகளுக்கு செலவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த குறிப்பாணை, 100% சட்டத்துக்குப் புறம்பான ஒன்றாகவும், மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாகத்தின் மீது திணிக்கிற செயலாகவுமே உள்ளது. காரணம், ஊரக வளர்ச்சித் துறையின் அரசாணை எண் 203, நாள் 20.12.2007 ன் படி, பொது நிதி கணக்கிலிருந்து, ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 2 லட்சம் வரை, தானே முடிவெடுத்து செலவு செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட தொகையை செலவு செய்வதாக இருந்தால்தான், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை, அரசாணையை கருத்தில் கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளது.

 

மக்களுக்குப் பக்கத்தில் இருந்து செயல்பட்டு வரும் உள்ளாட்சிகளை  வலுப்படுத்த வேண்டிய இந்நேரத்தில், அதற்கு எதிராக அதன் கைகளைக் கட்டிப் போடுகிற, மாவட்டத்தின் அதிகாரத்தை திணிக்கிற ஒரு செயல்பாடு நடந்திருக்கிறது.

 

ஊராட்சி நிர்வாகம் பல வங்கி கணக்குகளை தனது செலவினங்களுக்காக நிர்வகித்து வருகிறது. அதன் முதல் வங்கி கணக்கு மிக முக்கியமானது. தனது சொந்த நிதியை, சொந்த வருவாயை, வரி வருவாய் போன்ற பிற வருவாய்களை முதல் வங்கி கணக்கில் தான் அது சேமித்து செலவு செய்து வருகிறது. தன்னாட்சி கூட, இந்தப் பேரிடர் காலத்தில், ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்கு முதல் வங்கி கணக்கை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அறிவுரைகளையும் காணொளிகளும் வழங்கியிருந்தது. அந்த வகையில் முதல் வங்கிக் கணக்கு என்பது ஊராட்சி நிர்வாகம் சொந்த முடிவு எடுத்து செயல்படுவதற்கான ஒரு முக்கிய வங்கிக் கணக்காகும்.  

 

முதல் வங்கி கணக்கில் இருந்து மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு உரிய பற்று சீட்டுகள் இருக்கின்றனவா என தணிக்கை செய்வது வேறு; ஊராட்சி இந்த பணிகளுக்கு தான் தனது முதல் வங்கிக் கணக்கில் இருந்து செலவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது வேறு.

 

தமிழகத்தில் உள்ள பல முன்மாதிரி ஊராட்சிகள், சுதந்தரமாகச் செயல்பட்டு, ஊருக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்ததால்தான், அவை, இன்று மக்களின் அபிமானத்தைப் பெற்ற சிறந்த ஊராட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றனஊராட்சி செலவினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் என்ன சொல்வாரோ என எதிர்பார்த்திருந்தால் எந்த வளர்ச்சியும் வராது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பொது நிதி கணக்கின்(முதல் வங்கி கணக்கு) வரவு செலவுகளை ஒப்புதல் வழங்க வேண்டிய அதிகாரம் சம்பந்தப்பட்ட கிராம சபைகளுக்கு உள்ளது.

 

எனவே 2007 ஆம் ஆண்டின் அரசாணை எண் 203 யை கருத்தில் கொள்ளாமலும், ஊராட்சியின் அதிகாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வெளியிடப்பட்டுள்ள இந்த குறிப்பாணையை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்பப் பெற வேண்டும் என தன்னாட்சி கோருகிறது. மாநில அளவில் ஊரக வளர்ச்சி இயக்ககமும், இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென தன்னாட்சி கோருகிறது.


Video: 


https://youtu.be/3qRAm1ptG6o



க.சரவணன்                                                         

தலைவர்                                                        

97512 37734               

 

எஸ்.நந்தகுமார்

பொதுச் செயலாளர்  

90032 32058 


நாள்: 31.05.2020                                                                                                                                                                           

Sunday, 24 May 2020

Art of Living chapter in New York has received recognition by the New York administration

Dear Editor,

In the guidance of Gurudev Sri Sri Ravi Shankar, the Art of Living has been working to provide Stress and Material relief all over India and Abroad, In these hard times of global pandemic, Our Art of Living chapter in New York has received recognition by the New York administration for the work done there.

Here is the Press Release and photos for the same.

--
Thank You.
With Warm Regards
Srinivasan
Tamilnadu Media Co Ordinator
Art of Living
Mobile: +91 9444111587
Mail: tn@artoflivingabc.org 

Friday, 22 May 2020

PRESS RELEASE_பட்டியலினத்தைச் சார்ந்த கிராம ஊராட்சிப் பெண் தலைவர்களை பாதுகாத்திடுக!

தன்னாட்சி

69, அங்கப்ப நாயக்கன் தெருசென்னை 600 001

மின்னஞ்சல் : thannatchi@gmail.com  

 

 

                                                                                                                                                                                     

                                                                                                                                    21.05.2020

PRESS RELEASE

 

பட்டியலினத்தைச் சார்ந்த கிராம ஊராட்சிப் பெண் தலைவர்கள் 

சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகாமல் பாதுகாப்புடனும், சுதந்தரமாகவும் செயல்படுவதை உறுதி செய்க!

 

      மக்களுக்குப் பக்கத்திலிருந்து பணியாற்றி, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனுக்குடன் செயல்படவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் உள்ளாட்சி அரசாங்கங்கள். இவற்றில், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் பணி மிக முக்கியமானது. தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 9,622 கிராம ஊராட்சித் தலைவர்களும், 76,695 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் பட்டியல் பிரிவினரும், பெண்களும் உள்ளார்கள்.

 

      நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே, உள்ளாட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளில் பட்டியல் பிரிவினர் மற்றும் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தது. தங்கள் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு பட்டியல் பிரிவினருக்கும், மொத்த பதவி இடங்களில் 50% மகளிருக்கும் ஒதுக்கப்பட்டது, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், குறிப்பாகக் கிராமப்புற சமூக பொருளாதாரத்தினை  மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

 

      ஆனால், பல ஆண்டுகளாகவே உள்ளாட்சியில் பெண் பிரதிநிதிகளும், பட்டியலினப் பிரதிநிகளும் தங்கள் பணிகளைச் செய்வதற்குப் பல தடைகள் ஏற்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் சுதந்தரமாகவும், கண்ணியத்தோடும் இயங்குவதற்குத் தடையாக, திட்டமிட்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு தரப்பினர் இருக்கவே செய்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலினத் தலைவர்களை மக்கள் நலப் பணிகளைச் செய்யவிடாத கொடுமைகள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. குறிப்பாக, பட்டியலின பெண் தலைவர்களுக்கு எதிராக சில சமூக விரோதிகளால் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்களும், வன்ம பேச்சுக்களும் உள்ளாட்சிக்கான அதிகாரப்பரவலின் நோக்கத்தையே தகர்த்தெறியும் செயல்களாகவே உள்ளன.

 

      கடந்த சில வாரங்களில், தமிழகத்தில் பட்டியலின பெண் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளை உங்கள் பார்வைக்குப் பட்டியலிடுகிறோம்.

 

நிகழ்வு 1: 

 

      சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவரான அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்த திருமதி எஸ். அம்சவள்ளி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட காணொளியில், தான் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே ஊராட்சியைச் சேர்ந்த 5வது வார்டு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருமான திரு.மோகன் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமீபத்தில் திருமதி. எஸ். அம்சவள்ளியின் கணவர் திரு.கே.சதீஷ்குமார் அதே ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் பகுதிக்குக் குடிநீர் இணைப்பு கொடுக்க சென்ற போதும், திரு. மோகன் தனது ஆதரவாளர்கள் சுமார் பத்து பேருடன் வந்து, சதீஷ்குமாரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, பல அலுவலர்கள் அங்கு இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் இழிவாகத் திட்டியதோடு அவரை தாக்கவும் முயன்றதாக செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக, தாரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 22.04.2020 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகாரும் பதியப்பட்டுள்ளது.

 

நிகழ்வு 2:

 

      திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவரான அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்த மெர்சி என்கிற திருமதி வீ. லட்சுமி அவர்களை ஊராட்சி மன்றத்தில் அவருக்கான நாற்காலியில் உட்கார விடாமல், துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் அவரை தரையில் உட்கார வைத்து வேலை பார்க்க வைத்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் கடந்த 16.04.2020 அன்று செய்தி வெளியாகி உள்ளது

 

நிகழ்வு 3:

 

      திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவரான குறவர் சமூகத்தைச் சார்ந்த திருமதி. ர. செல்வி அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்குச் சீருடை வழங்கும் பணியில் இருந்த போது, அதே ஊராட்சியின் 6 வது வார்டு உறுப்பினர் திரு. குப்புசாமி என்பவர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் இழிவாகத் திட்டி, அவரை தாக்கவும் முயன்றதாகச் செய்திகள் வெளியாயின. இது சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் கடந்த 07.05.2020 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகாரும் பதியப்பட்டுள்ளது

 

      மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளும், பட்டியலினப் பெண்கள் கிராம ஊராட்சி தலைவர்களாக உள்ள ஊராட்சியில் நடந்திருப்பதை நாம் எதேச்சையானதாகக் கருத முடியாது. தமிழகத்தில், முதல் முறையாக உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டப் பெண் தலைவர்கள்தான் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

      எனவே, தமிழக அரசும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் (ஊராட்சிகளின் ஆய்வாளர்கள் என்ற முறையில்) உடனடியாக இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட பட்டியலினப் பெண் ஊராட்சித் தலைவர்கள், சுதந்தரமாகச் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகாமல் பாதுகாப்புடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தன்னாட்சி கேட்டுக்கொள்கிறது. அதேபோல், தமிழகம் முழுக்கவுள்ள பட்டியலினத் தலைவர்கள், சுதந்தரமாகச் செயல்படுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் தன்னாட்சி கோருகிறது.



க.சரவணன்                                                                                                                                           தலைவர்                                                                                                                                   

97512 37734               


எஸ்.நந்தகுமார்           

பொதுச் செயலாளர்   

90032 32058