PRESS RELEASE
ஊராட்சிகளின் சுதந்தரத்தில் தலையிட வேண்டாம்!
தற்போது ஊரடங்கு காலத்தில், மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்வதற்கும், கொரோனா பெரும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், பல மாநிலங்கள் தங்கள் உள்ளாட்சி அரசுகளின் பங்கேற்பை அதிகப்படுத்தியுள்ளன.
ஒடிசா அரசு, மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கியுள்ளது. பலகாலமாக பஞ்சாயத்துகளை வலுப்படுத்தி வரும் கேரள அரசாங்கம், தற்சமயம் ஊராட்சிகளுக்கு கூடுதலாகப் பல பொறுப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளா மற்றும் ஒடிசாவின் இந்த நடவடிக்கைகளை பல உலக நாடுகள் போற்றிவரும் இந்தச் சூழலில்தான், தமிழகத்தில் கடந்த 21.05.2020 அன்று, ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அவசர குறிப்பாணை, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், கிராம ஊராட்சியின் முதல் வங்கி கணக்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், குடிநீர் மற்றும் இதர பராமரிப்புகளுக்குத் தவிர, வேறு பணிகளுக்கு செலவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த குறிப்பாணை, 100% சட்டத்துக்குப் புறம்பான ஒன்றாகவும், மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாகத்தின் மீது திணிக்கிற செயலாகவுமே உள்ளது. காரணம், ஊரக வளர்ச்சித் துறையின் அரசாணை எண் 203, நாள் 20.12.2007 ன் படி, பொது நிதி கணக்கிலிருந்து, ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 2 லட்சம் வரை, தானே முடிவெடுத்து செலவு செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட தொகையை செலவு செய்வதாக இருந்தால்தான், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை, அரசாணையை கருத்தில் கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களுக்குப் பக்கத்தில் இருந்து செயல்பட்டு வரும் உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டிய இந்நேரத்தில், அதற்கு எதிராக அதன் கைகளைக் கட்டிப் போடுகிற, மாவட்டத்தின் அதிகாரத்தை திணிக்கிற ஒரு செயல்பாடு நடந்திருக்கிறது.
ஊராட்சி நிர்வாகம் பல வங்கி கணக்குகளை தனது செலவினங்களுக்காக நிர்வகித்து வருகிறது. அதன் முதல் வங்கி கணக்கு மிக முக்கியமானது. தனது சொந்த நிதியை, சொந்த வருவாயை, வரி வருவாய் போன்ற பிற வருவாய்களை முதல் வங்கி கணக்கில் தான் அது சேமித்து செலவு செய்து வருகிறது. தன்னாட்சி கூட, இந்தப் பேரிடர் காலத்தில், ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்கு முதல் வங்கி கணக்கை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அறிவுரைகளையும் காணொளிகளும் வழங்கியிருந்தது. அந்த வகையில் முதல் வங்கிக் கணக்கு என்பது ஊராட்சி நிர்வாகம் சொந்த முடிவு எடுத்து செயல்படுவதற்கான ஒரு முக்கிய வங்கிக் கணக்காகும்.
முதல் வங்கி கணக்கில் இருந்து மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு உரிய பற்று சீட்டுகள் இருக்கின்றனவா என தணிக்கை செய்வது வேறு; ஊராட்சி இந்த பணிகளுக்கு தான் தனது முதல் வங்கிக் கணக்கில் இருந்து செலவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவது வேறு.
தமிழகத்தில் உள்ள பல முன்மாதிரி ஊராட்சிகள், சுதந்தரமாகச் செயல்பட்டு, ஊருக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்ததால்தான், அவை, இன்று மக்களின் அபிமானத்தைப் பெற்ற சிறந்த ஊராட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. ஊராட்சி செலவினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் என்ன சொல்வாரோ என எதிர்பார்த்திருந்தால் எந்த வளர்ச்சியும் வராது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பொது நிதி கணக்கின்(முதல் வங்கி கணக்கு) வரவு செலவுகளை ஒப்புதல் வழங்க வேண்டிய அதிகாரம் சம்பந்தப்பட்ட கிராம சபைகளுக்கு உள்ளது.
எனவே 2007 ஆம் ஆண்டின் அரசாணை எண் 203 யை கருத்தில் கொள்ளாமலும், ஊராட்சியின் அதிகாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வெளியிடப்பட்டுள்ள இந்த குறிப்பாணையை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்பப் பெற வேண்டும் என தன்னாட்சி கோருகிறது. மாநில அளவில் ஊரக வளர்ச்சி இயக்ககமும், இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென தன்னாட்சி கோருகிறது.
Video:
க.சரவணன்
தலைவர்
97512 37734
எஸ்.நந்தகுமார்
பொதுச் செயலாளர்
90032 32058
நாள்: 31.05.2020
No comments:
Post a Comment