24-01-2017
அனுப்புனர்:
ஆறுபாதி கல்யாணம்,
பொதுச்செயலாளர் ,
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு - காவிரி டெல்டா மாவட்டங்கள்
9443093447
To:
Ms Vasudha Misra I.A.S -Managing Director,
National Cooperative Development Corporation
New Delhi - deputed as Chairman -Inter Ministerial Team to Assess Drought in Tamilnadu &
Team Members , mdncdc@ncdc.in
வணக்கம். தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி நிலையை ஆராய வந்திருக்கும் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பார்வைக்கு எங்களுடைய மனு கீழே:
1. தமிழகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாபெரும் வறட்சி நிலையைச் சந்தித்து வருகிறது. மாநில அரசு தம்முடைய கோரிக்கையை முன்பே இந்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இம்மனுவில், தேசிய பேரிடர் காப்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடி தமிழக வறட்சி நிவாரணத்திற்கு ஒதுக்கச் சொல்லிக் கோரியுள்ளது.
இது போலவே வேளாண் பயிர்களின் அழிவு குறித்தும் மாநில அரசு டிசம்பர் 2016-ல் பயிரிடல் ஆவணங்களை கொடுத்துள்ளது. தற்போது ராபி மற்றும் சம்பா கதிர் மற்றும் எண்ணை விதைகள் விதைக்கும் பரப்பளவு 15.04 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.சென்ற வருடம் இது 21.42 ஹெக்டேர்களாக இருந்தது. இதுவே தமிழகத்தில் நிலவி வரும் கொடும் வறட்சியைப் பறைசாற்றுகிறது. இவ்வாறு பயிரிடப்பட்ட பகுதிகள் சராசரி விளைச்சலில் 30 சதவிகிதம் கூட இம்முறை தராது. இதோடு நிலத்தடி நீரளவு குறைவின் காரணமாக கரும்பு மற்றும் பிற தோட்டப் பயிர்களும் பெருமளவு தோல்வியுற்றள்ளன. தமிழகத்தில் மொத்த விளை நிலம் தற்போது 47 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே. வருவாய்த் துறையின் கிராம ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விளைநிலம் மொத்தமும் தேசிய பேரிடர் காப்பு நிதியின் கீழ் நிவாரணத்திற்கு தகுதியுள்ளவையாகக் கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு குழுவை கேட்டுக் கொள்கிறோம்.
2. வறட்சியினால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்தபடி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 250 மரணங்கள் மற்றும் தற்கொலைகள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. ஆனால் மாநில அரசு 17 தற்கொலைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் நாட்டிற்கே அவமானம். எனவே உண்மையான எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதோடு இறந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.
3. காவேரி டெல்டா பகுதிகளில் நேரடியாக நெல் விதைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் பயிர் பொய்த்துள்ளது. சம்பாவாக மாற்றப்பட்ட பயிர்களும் காவேரி நீரை நம்பி இருப்பதால் பொய்த்துள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கர்களுக்கு வேளாண்மை மின்சார பம்புசெட்டுக்களை வைத்து செய்யப்படுகின்றது. காவேரி டெல்டா பகுதியில் சராசரி விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 1800 கிலோவில் இருந்து 2100 கிலோ வரை பொதுவாக கிடைக்கும். ஆனால் தற்போது 700 கிலோவில் இருந்து 1000 கிலோ வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது. ஆக சராசரி விளைச்சலை விட 33% க்கு மேல் நஷ்டமடைவதால் தேசிய பேரிடர் காப்பு நிதி விதிகளின்படி டெல்டா பகுதியில் அனைத்து விவசாயிகள் மற்றும் நேரடி நெல் விதைத்தல் மற்றும் மாற்று விதைத்தல் பகுதிகள் அனைத்தும் உள்ளீட்டு மானியத்திற்கு தகுதியுடையவை ஆகின்றன.
4. தேசிய பேரிடர் காப்பு நிதி விதிகளின்படி விவசாய நஷ்டத்திற்கு உள்ளீட்டு மானியம் தற்போது (மானாவாரிப் பயிர்களுக்கு) ஒரு ஹெக்டேருக்கு ரூ.6800 ஆகும். இதுவே பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, மற்றும் நீண்டகாலப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 என்று விதிக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் மிகக் குறைவானது. எனவே இந்திய அரசை, குறைந்தபட்ச உள்ளீட்டு மானியத்தை ஏக்கருக்கு ரூ.30,000 என்று உயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
5. உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம், ஒரு சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். இது காவேரி டெல்டா பகுதியில் விவசாயிகள் மற்றும் உணவு பொருள் உற்பத்தியைக் காக்க மிகவும் அவசியமான நடவடிக்கையாகும்
6. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் முந்தைய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை விடச் சில வகைகளில் சிறந்ததே என்றாலும் விவசாயிகளைக் காப்பாற்ற தலை சிறந்த திட்டமாகாது. இந்த மொத்தக் காப்பீட்டுத் திட்டமும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தம்முடைய லாப நோக்கிலேயே செயல்படும். தனிப்பட்ட விவசாயி ஒவ்வொருவருக்கும் காப்பீடு (14 கோடி விவசாயிகளுக்கும்) அளிப்பதே சிறந்த தீர்வாகும்.
7. வட்டியில்லா பயிர் கடன்கள் மற்றும் அனைத்து வேளாண் கடன்களும் 4% எளிய வட்டி என்று வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படக் கோருகிறோம். அதிக வட்டியே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணம்.
8. குறைந்தபட்ச சலுகை விலை, 50% லாபம் தருமாறு அனைத்து வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் நிர்ணயம் செய்தல் வேண்டும். ஒவ்வொரு ஹெக்டேர்/மற்றும் ஏக்கர் நேரடி மானியம் (பயிரிடல் ஆவணங்களின்படி) அனைத்து விவசாயிகளுக்கும் கொடுப்பதே அவர்களை காப்பாற்றும்.
9. மத்திய அரசு, வேளாண் அமைச்சகத்தை "வேளாண்மை மற்றும் விவசாய நலன் அமைச்சகம்" என்று மாற்றியுள்ளது. வெறும் பெயர் மாற்றம் பலன் தராது. அடிப்படை மாற்றங்கள் தேவை. தனி பட்ஜெட்டின் மூலமாக வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க கோருகிறோம்.
10. தேசிய பேரிடர் காப்பு நிதிக்கு சரியானபடி நிதி ஒதுக்கீடு செய்யாததால், மத்திய அரசால் மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிதி அளிக்க முடிவதில்லை. 2016-2017 பட்ஜெட்டில் இந்நிதிக்கு வெறும் ரூ.6450 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வருடம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையோ ரூ.39,565 கோடிகள். இந்நிலையில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு எப்படி மத்திய அரசால் நிதி அளிக்க முடியும்? மத்திய அரசு இந்நிதியின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 2002-03 முதல் 2011-12 வரை பத்து வருடங்களில் ரூ.23,346 கோடிகள் செலவழித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பயிர் பொய்த்தலால் மட்டுமே ஒரு வருடத்திற்கு ரூ.40,000 கோடிகளில் இருந்து ரூ.50,000 கோடிகள் வரை நஷ்டம அடைகிறோம். எனவே மத்திய குழுவை இந்நிதிக்கு தகுந்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பத்து கோரிக்கைகளும் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எங்கள் மனுவாகும். மாண்புமிகு தமிழ்நாடு வேளாண் துறை செயலர் மற்றும் காவேரி டெல்டா பகுதி மாவட்ட கலெக்டர்கள் இம்மனுவை மத்திய குழுவிற்கு அளிக்குமாறும், தமிழக விவசாயிகளைக் காக்க தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆறுபாதி கல்யாணம்,
பொதுச்செயலாளர் ,
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு - காவிரி டெல்டா மாவட்டங்கள்
9443093447