Friday, 6 January 2017

PRESS RELEASE on JALLIKATTU.. மிருகவதைச் சட்டப்பிரிவு 22, 28ல் திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும்..

PRESS RELEASE on JALLIKATTU by Satta Panchayat Iyakkam.

 மிருகவதைச் சட்டப்பிரிவு 22, 28ல் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

பத்திரிகை செய்தி

07.01.2017

87545-80270, 87545-80274
 

கடந்த 2014 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு, தடை நீக்கம் செய்யக்கோரி தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசும் பிஜேபியின் தமிழக தலைவர்களும் சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் முந்தைய ஆட்சியாளர்களைக் குற்றம்சாட்டி காலம் கடத்தி வருகின்றனர்.

 

2006-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளின் தவறான சட்ட அணுகுமுறையால் தடைபட்டு கிடக்கின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் 2006ல் தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டாலும், இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI – Animal Welfare Board of india) தொடுத்த மேல்முறையீட்டால் 2007ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால அனுமதி கிடைத்தது. இந்த சூழ்நிலையில், 2011ம் ஆண்டில்(11.07.2011) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால்(காங்கிரஸ் ஆட்சியில்) காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது. ஏற்கனவே 2009ல் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின்படி" (Tamilnadu Regulation of Jallikattu act 2009)  ஜல்லிக்கட்டுக்கான சட்டப்பூர்வ  வடிவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் , இந்த சட்டத்தை தடைசெய்யக் கோரி பீட்டா (PETA – People for the Ethical Treatment of Animals) எனும் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

 

இந்திய விலங்குகள் நலவாரியம்(AWBI) மற்றும் பீட்டா(PETA) ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்திருந்த  ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த வழக்குகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மாட்டு வண்டிகள் போட்டிக்கான வழக்குகளுக்கும் ஒரு சேர  07.05.2014ல் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தது. கூடவே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம்2009 என்பது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் என்றாலும், அது  மிருகவதை தடை சட்டம் (Prevention of Cruelty to Animals) 1960-ஐ மீறும் வகையில் உள்ளதால், அதனையும் ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த சட்ட சிக்கல் காரணமாக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடத்தப்படவில்லை.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு(2016) ஜனவரி 8-ல்,  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டது. இதனை எதிர்த்து மீண்டும் AWBI மற்றும் பிற விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்காலத் தடை பெற்றது.

 

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரும் சீராய்வு மனுவையும் கடந்த நவம்பர் மாதம் (2016) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடை இன்னும் நீடிக்கிறது.    எனவே, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தர இருக்கும் தீர்ப்பை ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
 

கடந்த ஆண்டு, 'மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆணையானது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்படலாம்' என்ற அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியின் எச்சரிக்கையையும் மீறி கடைசி தருணத்தில் தவறான முறையில் அவசர ஆணையை வெளியிட்டதால்தான் நீதிமன்றத்தில் அவ்வாணை தடையை சந்தித்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் முன்னரே பொங்கல் பண்டிகையும் நெருங்கிவிட்டது என்ற நிலையில் தமிழ் மக்களின் உணர்வு தொடர்பான இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது.

 

நீதிமன்றக் கதவுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு  , இதுவரை  'மிருகவதை தடைச் சட்டத்தில்' ((Prevention of Cruelty to Animals, 1960)  உரிய திருத்தம் கொண்டுவராததற்கு தன் கட்சியினரைத்தான் தமிழக பாஜகவினர் குற்றம் சொல்ல வேண்டும். பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நாடாளுமன்ற அவைகளில் இதற்கு எந்த முன்முயற்சியும் எடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி காலம் கடத்திவரும் பாஜகவினரை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டிக்கிறது.


காளைகளைக் கொடுமைப்படுத்துதல் என்று சொல்லப்படும் நிகழ்வுகள் ஏதுமின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகுக்கப்பட்டுள்ள பிற விதிமுறைளைப் பின்பற்றி இது நடத்தப்படவேண்டும் என்பதிலும் இருவேறு கருத்திற்கு இடமில்லை. சில விதிமுறைகள் மீறப்படுகிறது என்பதற்காக ஜல்லிக்கட்டையே தடை செய்வது நியாயமில்லை. சாலைகள் போடப்படுவதில், பாலங்கள் கட்டப்படுவதில் முறைகேடுகள், ஊழல் நடப்பது தொடர் செயலாகத்தான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்காக, சாலைகள்-பாலங்கள் கட்டுவதற்கு ஒட்டுமொத்த தடைவிதித்து விடுவோமா என்ன..?  முறைகேடுகள் இன்றி விதிமுறைகளின்படி சாலைகள்-பாலங்கள் கட்டப்படவேண்டும் என்று கோருவதுதானே நியாயமாக இருக்கும். இந்த அணுகுமுறைதான் ஜல்லிக்கட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே இயக்கத்தின் நிலைப்பாடு.


உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இனியும் நீதிமன்றங்களை கைக்காட்டாமல்  'மிருகவதைச் தடைச் சட்டம் 1960'  பிரிவு 22 (Restriction on exhibition of performing animals) மற்றும் 28-களில் (Saving as respects manner of killing prescribed by religion) உரிய திருத்தங்களை அவசரச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது. இப்படிப்பட்டதொரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டால்தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான தடை எந்தச் சிக்கலுமின்றி உடைபடும்.

 

தமிழக கட்சிகளும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிராமல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு பிரதமர் மோடியை இந்த அவசர சட்டத்தை கொண்டுவர நிர்பந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தமிழக இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இப்பிரச்சனையின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய  மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

 

                                                                                                                           

                                                                                                  சிவ.இளங்கோ,                  
                                                       தலைவர்

                                                         சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                                           87545-80270, 87545-80274

No comments:

Post a Comment