தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 100 நாள் வேலைப் பணியாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை. ஆனால் தற்போதும் சம்பளம் வரும் என்ற நம்பிக்கையோடு 100 நாள் வேலையைச் செய்து வருகிறார்கள் கிராம மக்கள்.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலை, ஏரி வேலை, குட்டை வேலை என அழைக்கப்படும் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் இருக்கிறது. துவக்கத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தில் நாம் கவனிக்க வேண்டியது, இது வெறும் திட்டமல்ல மாறாக இது ஒரு சட்டம் என்பதுதான். ஆம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005 ல் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.
கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும், அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் நெடுநாளையா கோரிக்கை 2005 ல் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டுவரப்பட்டது. அன்று முதல் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு பெறுவது ஒவ்வொரு கிராமப்புற இந்தியரின் உரிமை என்றானது.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல், தமிழகத்தில் இத்திட்ட பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான கிராம மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்மில் பலர் இத்திட்டத்தின் நடைமுறைகள் குறித்த பல மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் எளிய மக்களிடம், கூலி தருவதாகச் சொல்லி வேலை வாங்கி விட்டு மாதக்கணக்கில் ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை என்பதை எப்படிப் பார்ப்பது.
இது குறித்த கட்டுரை நேற்றைய தமிழ் இந்து நாளிதழில். அதை இத்துடன் இணைத்துள்ளோம்.
கிராம மக்கள், அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட கூலியைப் பெற நீங்கள் நிச்சயம் பங்காற்றிட முடியும் என நம்புகிறேன். நன்றி.
நந்தகுமார்
உள்ளாட்சி உங்களாட்சி
9710230036
No comments:
Post a Comment