PRESS RELEASE
நடைபெறாமல் உள்ள கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் விரைவாக நடைபெற கிராம மக்கள் என்ன செய்ய முடியும்?
ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிர்வாகம், வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற விஷயங்களில் முடிவெடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு கிராம சபை. பஞ்சாயத்தின் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அதன் பெருமைமிகு அங்கத்தினர். தற்போது கிராமசபை பற்றிப் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் காலம் கடந்து போகிறது. பஞ்சாயத்துக்கான தேர்தல் மேலும் காலம் கடத்தப்படாமல் விரைவாக நடத்தப்படுவதற்குக் கிராம சபையே மக்கள் கையில் இருக்கும் வாய்ப்பு. "விரைவாக எங்கள் கிராம பஞ்சாயத்துக்குத் தேர்தல் நடத்திட வேண்டும்" எனக் கேட்பதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பு கிராம சபை.
தங்கள் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலை விரைவாக நடத்தக்கோரி ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மக்களும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை மூன்று நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிட வேண்டும். அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால் அது அந்தப் பஞ்சாயத்து மக்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அக்கோரிக்கை ஏற்புடையதாக இருக்காது. மாறாக எங்கள் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற மக்களின் தீர்மானம் 100% ஏற்புடைய தீர்மானமாக இருக்கும்.
ஒருவகையில், முறையான ஒரு கிராம சபை தீர்மானம் வாக்கு சீட்டுக்கு இணையானது என்று கூட சொல்லலாம். கிராம மக்களுக்கு கிராம சபை பற்றியும், அவர்கள் வருகின்ற ஜனவரி 26 அன்று நடக்க இருக்கின்ற கிராம சபையில் பங்கெடுத்து மேற்குறிப்பிட்ட தீர்மானம் நிறைவேற்றி பயன்பெற உதவுங்கள். நன்றி.
தங்கள் உண்மையுள்ள
உள்ளாட்சி உங்களாட்சி,
69, அங்கப்ப நாயக்கன் தெரு,
சென்னை - 01
போன் : 9710230036
No comments:
Post a Comment