Thursday, 13 July 2017

PRESS RELEASE_ கிராம​​சபைகளை வலுப்படுத்தத் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம்

  PRESS RELEASE

கிராம​​சபைகளை வலுப்படுத்தத் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம்

ஜூலை 15​  முதல் ஆகஸ்டு 15 வரை

பல சமூக அமைப்புகள் பங்கெடுக்கின்றன


வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் நடக்கவுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல... சுமார் 12,524 கிராம சபைக்கூட்டங்கள். கோடிக்கணக்கான மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கிராம சபை கூட்டங்கள் எப்படி நடக்கப்போகின்றன? வெறும் சம்பிரதாயமாக நடக்கப்போகின்றனவா? அல்லது மாற்றங்களை ஏற்படுத்தும் களங்களாக அமையப் போகின்றனவா? அது நம் கையில் தான் இருக்கிறது.

 

நோக்கம்

 

ஒவ்வொரு கிராமமும் தனக்கான முன்னேற்றங்களைக் கிராமசபைகள் மூலம் அடைய முடியும் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவே இந்தச் சுற்றுப்பயணம். நீர் நிலைகள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, அரசு திட்டங்களை தணிக்கை செய்வது, தங்கள் ஊருக்குச் செலவிடப்பட்ட வரவு - செலவுகளை ஆய்வு செய்தல் என தங்கள் கிராமத்தின் நிர்வாகத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வாய்ப்பளிப்பது கிராமசபை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்தச் சுற்றுப்பயணம்.

 

உள்ளாட்சி தேர்தல்

   

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 தேதியிலிருந்து காலியாக இருக்கிறது லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவியிடங்கள். மக்கள் பிரதிநிதிகள் இல்லாததாலும்  பல ஊராட்சிகளுக்கு ஒரு சிறப்பு அலுவலர் என்ற நிலை இருப்பதாலும் அடிப்படை வசதிகள் பெறுவதில் கூடப் பல சிக்கல்களை நித்தமும் அனுபவித்து வருகின்றனர் மக்கள். "அடிப்படை வசதிகள் வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை" என்ற செய்தியை தற்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்தச் சூழ்நிலையில்தான் கிராம உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையாக இருக்கும் கிராமசபைகளில் மக்கள் அதிக அளவில் பங்கெடுத்துக்கொண்டு, தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய வலுசேர்க்க வேண்டும்.

 

முக்கிய தீர்மானங்கள்

பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளைத் தூர்வாரவும், தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை மூட  நிர்பந்திக்கவும், புதிய மதுக்கடைகள் திறக்கக் கூடாது என வலியுறுத்தவும், அரசு நலத்திட்டங்களைத் தணிக்கை செய்யவும், மிக முக்கியமாக தங்கள் பகுதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.                                           

 

தீர்மானம் நிறைவேற்றியதோடு இருந்துவிடாமல், அதனைச் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும், தங்களைப்போன்ற ஊடகங்களுக்கும் கொண்டுசேர்க்கவேண்டிய பணியும் மக்களுக்கு இருப்பதைத் தெறிப்படுத்துவோம். 

 

மேலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை பற்றியும் இச்சுற்றுப்பயணத்தில் விளக்குகிறோம். உதாரணமாக, கடந்த மே 1 அன்று கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சாம்பட்டி கிராம சபையில் டாஸ்மாக் கடைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.  

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, கிராமசபைக்கு அதிகாரம் வழங்கியுள்ள நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும். கிராமத்தைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்திற்காகவும் மக்கள் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். கிராமசபை கூட்டத்தில், அதிகாரிகளிலோ பஞ்சாயத்து தலைவரோ மக்கள் முன்வைக்கும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்பதை நம் மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

   

மேலும், பல கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதே மக்களுக்குத் தெரிவதில்லை. முறையான அறிவிப்பு இல்லாததால்தான் இந்த நிலை. கிராமசபை கூட்டங்களுக்கு உரிய அறிவிப்பு கொடுப்பதோடு, அவை முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும்  கோரிக்கை வைக்கவுள்ளோம். இக்கோரிக்கையின் மாதிரியைப் பல கிராமங்களில் நாம் சந்திக்கும் சமூக அமைப்புகளுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கி, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தங்கள் கிராம மக்கள் சார்பாக இக்கோரிக்கையை  வைக்கும்படி கேட்டுக்கொள்வோம்.

 

பயண துவக்கம்


முன்மாதிரி கிராம பஞ்சாயத்தாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில், ஜூலை 15 அன்று துவங்கும் இப்பயணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறது. பொதுமக்களையும், சமூக பணியாற்றி வரும் அமைப்புகளையும், தன்னார்வலர்களையும் சந்திக்கிறோம். கிராமசபை பற்றிய காணொளி காட்சிகள், கிராமசபை பற்றிய அடிப்படைத் தகவல்கள் கொண்ட கையேடு, துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்குகிறோம். இத்தகவல்களை எடுத்துச்செல்லவும், கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற பிறகும் இந்தச் சமூக அமைப்புகள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவுமே இந்தத் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம்.

 

வரும் காலங்களில் தமிழக கிராமசபைகள் நம் ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் உறுதியான தூண்களாக அமையும் என்ற  திடமான  நம்பிக்கையோடு இப்பயணத்தைத் துவங்குகிறோம். கிராமசபைகளை வலுப்படுத்தும் இம்முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருக்கிறது. உங்கள் ஊடகத்தில் கிராமசபை விழிப்புணர்வு பயணம் பற்றிய செய்திகளை மாவட்ட அளவிலும் தொடர்ச்சியாக பதிவுசெய்து, கிராம மக்கள் பயன்பெறவும் கிராமசபைகள் வலுப்பெறவும் உதவிட வேண்டுகிறோம்.

 

தங்கள் உண்மையுள்ள

 

நந்தகுமார்

ஒருங்கிணைப்பாளர், உள்ளாட்சி உங்களாட்சி  9003232058


No comments:

Post a Comment