Monday, 28 May 2018

SPI Press Release | தமிழக சட்டமன்றத்தில் நிலைக்குழுக்களை உடனடியாக அமைக்கவேண்டும்!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (28-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

 

தமிழக சட்டமன்றத்தில் நிலைக்குழுக்களை உடனடியாக அமைக்கவேண்டும்!

நிலைக்குழுக்களை உடனே அமைக்க வேண்டும்  -  நேரடி ஒளிபரப்பு வேண்டும் - லோக் ஆயுக்தா -மதுவிலக்கு- சேவை பெறும் உரிமைச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் - மே 29 சட்டமன்றம் கூடும் நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

 

பாராளுமன்றம்  மற்றும்  மாநில சட்டமன்றங்கள் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மிக்க தமிழக சட்டமன்றம் இன்று வெறும் சம்பிரதாய சடங்காக மட்டுமே நடைபெற்று வருகிறது. 51 வருடமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிட கட்சிகள், சட்டமன்ற செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அதிக அளவில் முயற்சிகள் எடுக்கவில்லை. காலத்திற்கேற்ப சட்டமன்ற நெறிமுறைகளை மேம்படுத்தினால் மட்டுமே, சட்டமன்றம் அதன் முக்கியத்துவத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.

 

ஜனநாயகத்தின் கோயிலாக போற்றப்படவேண்டிய சட்டமன்றத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், சட்டமன்ற நடவடிக்கைகளில் பரிணாம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. சட்டமன்றம் கூடும் போதேல்லாம், சட்டமன்றத்தில் இருக்கும் குறைகளை இயக்கம் சுட்டி காட்ட தவறுவதில்லை. ஆனால் ஆளும் அதிமுக அரசு "செவிடன் காதில் சங்கு ஊதியது போல்" இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்சியை காப்பாற்றிக்கொள்வது மட்டுமே தங்களின் தலையாய கடமையாக வைத்துக்கொண்டு பெரும்பான்மையில்லாத மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மசோதாக்கள், சட்டமன்ற சீர்திருத்தங்கள், கடந்த கால தவறுகளை இயக்கம் கோடிட்டு காட்ட விரும்புகிறது. மே 29 அன்று கூடி, ஒரு மாத காலம் நடக்க இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலாவது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து தவறுகளை திருத்தி கொண்டு புரட்சிகரமான சீர்திருத்தங்களை அமல்படுத்தி தங்களுடைய சட்டமன்ற கடமையை சரிவர மேற்கொள்ளவேண்டும் என்று இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

 

பாராளுமன்றத்தில் உள்ளது போல் துறைவாரியாக நிலைகுழுக்களை அமைக்க 

வேண்டும்:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பெரும்பான்மையான சட்டங்கள், அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய நிலைக்குழுக்கள் தீர்க்கமாக ஆராய்ந்த பிறகு தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் வெளியில் எதிர்த்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து நிலைக்குழுவில் சட்டத்தை ஆராய்ந்து திருத்திய பிறகே, அந்த மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. துறைவாரியாக நிலைக்குழுக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலைக்குழுக்கள் தேர்ந்த ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. 

 

தமிழக சட்டமன்றம் 70 ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், இந்த உள்கட்டமைப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டங்கள்  எந்த விவாதமின்றி  பெயரளவிற்கு மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. சட்டங்களை விவாதித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகு மட்டுமே மசோதாக்கள்  நிறைவேற்றவேண்டும். 

 

சட்டமன்றம் 90 நாட்கள் கூடவேண்டும்:

இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் நாராயண ராவ் கமிட்டி (2000), மாநில சட்டமன்றங்கள் 90 நாட்கள் , ராஜ்ய சபை 100 நாட்கள் மற்றும் லோக் சபை 120 நாட்கள் இயங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. ஆனால் தமிழக சட்டசபை சராசரியாக வருடத்திற்கு 35 நாட்கள்  மட்டுமே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் போராட்டமே இல்லாத நாட்கள் இல்லை என்று இருக்கும் நிலையில், சட்டமன்றம் பரிந்துரைக்கப்பட்ட நாட்களை விட அதிகமாக கூட வேண்டும்.

 

2015இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 28

2016இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 35

2017இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 37

 

2004இல் வெறும் 16 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய பாராளுமன்றம் பொதுவாக காலை 11 முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது.

ஆனால் தமிழக சட்டமன்றம் காலை 10 முதல் 1 மணி வரையே இயங்குகிறது. நடக்கும் விவாதங்களிலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், "தகுந்த நடவடிக்கைகள்/முடிவுகளை அரசு எடுக்கும்" என்று கூறிவிட்டு அமர்ந்து விடுகிறார்கள். அந்த முடிவுகளை எடுப்பதற்கும் தெரிவிப்பதற்கும் தான் சட்டமன்றம் உள்ளது என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். நீட், காவேரி, கதிராமங்கலம், ஸ்டெர்லைட், முல்லைப்பெரியாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளை எதிர்கட்சியுடன் விவாதித்து தீர்க்கமான முடிவுகளையும் கொள்கைகளையும் வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொரு முறையும் MLAக்களின் சம்பளத்தை உயர்த்தும்பொழுது, மக்கள் முகம் சுழிக்காத வகையில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் அமையவேண்டும்.

 

தேவையின்றி 110வது விதியை பயன்படுத்தக்கூடாது:

போர் காலங்களில் அல்லது இக்கட்டான சூழ்நிலையில் அல்லது விவாதம் செய்ய நேரம் இல்லாத நிலையில் மட்டுமே 110வது விதியை பயன்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் ஜெயலலிதா சட்டசபையில் பேசினாலே 110வது விதியின் கீழ் பேசும் போக்கை கடைபிடித்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான போதும், சபை மாண்பை குறைக்கும் வகையில் விதிகளுக்கு எதிராக செயல்பட்டார். அவ்வழியை எக்காரணத்திற்காகவும் தற்பொழுது உள்ள அதிமுக அரசு பின்பற்ற கூடாது. தவறான முன்னதாரணத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று பிழையை அரசு செய்ய கூடாது.

 

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுகோள்:

பாராளுமன்றத்தை போல் தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சில காலங்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்தும், தமிழக அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது. 2012இல் இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொது நல வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான அரசு, அரசின் நிதி பற்றாக்குறையால் நேரடி ஒளிபரப்புக்கு ஆகும் 60 கோடியை ஏற்க முடியாது என்று தெரிவித்தது. 

ஆளும் அதிமுக அரசு தங்களுடைய  ஒற்றுமையை நிரூபிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும், எதற்கும்  உபயோகம் இல்லாத எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை 200 கோடி ரூபாயில் நடத்தி வருகிறது. எம்ஜிஆரின் 100வது பிறந்த நாளுக்காக சட்டசபை நிகழ்வுகளை  நேரடி ஒளிபரப்பு செய்ய அந்த பணத்தை ஒதுக்கி இருந்தால், தமிழகமே ஆளும் அரசை பாராட்டி இருக்கும். ஆனால் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியதால், எம்ஜிஆர் நினைவு நாளில் ஆர்கே நகர் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு மண்ணை கவ்வியது.

 

எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த பொழுது, அவரது தொலைக்காட்சி கேப்டன் டிவி மூலமாக  இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருப்பதாக கூறிய பின்னும் தமிழக அரசு அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. அரசின் ஆளுமையையும், அமைச்சர்களின் திறமைகளையும், உறுப்பினர்களின் வாதத்திறனையும் குறைவாக இருப்பதினால் அரசு அஞ்சுகிறதா? அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. இன்னும் எளிமையாக இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அல்லது தூர்தர்ஷன் பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஜனநாயகத்தின் கருவாக செயல்படும் சட்டசபையிலே வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தற்குரிய செய்தி. இனிமேலும் அற்ப காரணங்களை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த உடனடியாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

 

எதற்கும் உபயோகம் இல்லாத சட்டமன்ற இணையத்தளம்:

தமிழக சட்டமன்றத்தின் இணையத்தளமானது எந்த ஒரு தகவலையும் எளிதில் பெற முடியாத வண்ணம் மிகவும் மோசமாக உள்ளது. அதனையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும். சட்டமன்றத்தின் இணையத்தளம் மிக மோசமான நிலையில் உள்ளது. கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய  வேண்டும். உறுப்பினர்களின் வருகை பதிவு, அணைத்து மசோதாக்கள் மற்றும் சட்டமன்றம் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும். 

 

மது ஒழிப்பு, லோக் ஆயுக்தா, சேவை பெரும் உரிமை சட்டடை உடனடியாக நிறைவேற்றவேண்டும்:

படிப்படியாக மது விலக்கு கொண்டு வருவோம் என்று கூறிய அதிமுக அரசு, அரசியல் நெருக்கடி அல்லது தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே மது விலக்கு பற்றி அறிவிப்பு வெளியிடுகிறது. மது வாழ்விற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், வருடத்திற்கு 10% கடைகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். அது போல் எப்படி மது விலக்கை அமல்படுத்தப்போகிறோம் என்பதை தமிழக அரசு அறிவிக்க  வேண்டும். லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் போன்ற சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று  சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் பலமுறை கண்டித்தபிறகும், ஆளும் அரசு  8 ஆண்டுகளாக இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமல்  இருக்கிறது. நடைபெறும் தொடரிலாவது அரசு இச்சட்டங்களை  நிறைவேற்ற வேண்டும். இது போன்ற உன்னதமான சட்டங்களை நிறைவேற்றினால் ஆளும் அதிமுக அரசை வரலாறு நினைவுகூறும். 

 

சட்டமன்றத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள்:

சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் ஜெனெரேட்டர்க்கு அரசு இமாலய தொகையை (தண்ணீருக்கு 5 லட்சம், ஜெனெரேட்டர்க்கு 42 லட்சம்) செலவழித்து வருகிறது. அம்மாவின் அரசே, அம்மா குடிநீரை பயன்படுத்தாமல் தண்ணீர்க்கு பல லட்சங்கள் செலவழிப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஜெனெரேட்டரை வாங்காமல், வாடகைக்கு எடுத்து "காமன்வெல்த்" ஊழலை தமிழகத்தில் செய்து வருகிறார்கள். அரசு ஜெனெரேட்டர்க்காக வாடகை எடுக்கும் தொகை, ஜெனெரேட்டரின் கொள்முதல் விலையை விட அதிகமாக இருக்கிறது.

 

5.95 கோடி வாக்காளர்களின் பிரதிநிதியாக செயல்படும் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை 105000 உயர்த்தும் தீர்மானத்தை அரை மணி நேரத்தில் கருத்தொற்றுமையுடன் நிறைவேற்ற முடிந்த அரசுக்கு, உன்னதமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அக்கறை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த போக்கை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு தொடர்ந்தால், மீண்டும் சட்டமன்றத்தில் கால்வைக்கமுடியாத நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறோம்.

 

 

செந்தில் ஆறுமுகம், 

    பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம் 

                                                                                                                   Contact Number: 88704 72179

 

                                                                                  

 

KEY POINTS IN ENGLISH:

 

·         Tamilnadu assembly is set to convene on 29 May to transact its business. Though TN legislature has a rich heritage, the evolution of the assembly and its procedure hasnt happened in last 51 years. 

·         There is an urgent need to have quality research and scrutiny of laws through departmental standing committees which doesnt exist in TN assembly. 

·         On an average, TN assembly convenes only for 35 days per year which is very less when compared with the Justice Narayana Rao committees recommendation.

·         Late CM Jayalalitha extensively used 110 rule to announce which is anti democratic. The present government shouldnt follow the wrong example set by her.

·         To make the legislative process more transparent and meaningful, happenings of the assembly has to be live telecasted.

·         Long pending bills and announcements like Lok Ayukta, Alcohol prohibition and Right to service acts needs to be passed in the current session.

·         Generators for Tamilnadu assembly are being rented out at the price which is costlier than the original price of the generator itself.


No comments:

Post a Comment