Wednesday, 8 August 2018

”தொடர் தோல்வியால் வீழ்ந்தாலும், விடாமுயற்சியால் வென்றிடலாம்” - கலைஞர், இன்றைய தலைமுறைக்கு விட்டுச்செல்லும் பாடம்..

"தொடர் தோல்வியால் வீழ்ந்தாலும், விடாமுயற்சியால் வென்றிடலாம்"   - கலைஞர், இன்றைய தலைமுறைக்கு விட்டுச்செல்லும் பாடம்.. 

- பத்திரிகை செய்தி (08-08-2018)

"தொடர் தோல்வியால் வீழ்ந்தாலும், விடாமுயற்சியால் வென்றிடலாம்" என்பதைத் தன் வாழ்க்கையை வழிநடத்தும் தாரக மந்திரங்களில் ஒன்றாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞருக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

அண்ணா மறைந்தபோது, அவரின் இதயத்தை இரவல் கேட்டார் கலைஞர்.

கலைஞர் மரணித்திருக்கிற இவ்வேளையில் "மரணம்" குறித்து 29-06-1976ல் முரசொலியில் கலைஞர் எழுதிய வார்த்தைகளை அவருக்கான அஞ்சலிக்காக இரவல் வாங்கிக் கொள்கிறோம்.

" உடன்பிறப்பே,..... சாவு என்பது ஏழை-பணக்காரன், சாதாரண மனிதன்-சாம்ராஜ்யவாதி, தொண்டன் -தலைவன் என்றெல்லாம் வேறுபாடு காட்டாமல் தழுவிக்கொள்ளக்கூடிய ஒரு சக்தி. அதனை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், மருத்துவ முறைகளால் தள்ளிப்போட முயற்சிக்கலாமே தவிர எந்த ஒரு மனிதாகட்டும் அல்லது மகானாகட்டும் அதனை அறவே தவிர்த்து வெற்றி கண்டிட இயலாது.

"பிறவாதிருக்க வரம் தரல் வேண்டும் - பிறந்துவிட்டால் இறவாதிருக்க மருந்துண்டு கான்.." எனக்கூறிய பட்டினத்தாருங்கூட,

"..முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு" என்றுதான் வாழ்வின் நிலையாமை குறித்து பாடியிருக்கிறார்.

புகழுடலைக் காத்திட முடியுமே தவிர, பூத உடலைக் காத்திட இயலாது என்பது இயற்கையின் நியதி.

பிறப்பவன் இறப்பது உறுதி எனினும் அந்த இடைக்காலத்தில் மக்களுக்கான தொண்டினை அறிவியல் வாயிலாகவும், அரசியல் வாயிலாகவும், இலக்கிய வாயிலாகவும், சமுதாயப் பணி வாயிலாகவும் கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி அவற்றின் வாயிலாகவும் ஆற்றிட வேண்டும்.குழந்தையின் கையில் இருக்கிற பண்டத்தை, ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் கருடன் ஒரே பாய்ச்சலில் பறித்துக்கொண்டு போய்விடுவதைப் போல, சாவு-உயிரைப் பறித்துக்கொண்டு போய்விடும்.

என்றோ ஒருநாள் சாகத்தானே போகிறோம் என்று சோர்வுற்று மனிதன் வீழ்ந்துவிடக்கூடாது !!"

அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைவரும் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு முக்கியப் பாடத்தை கடைசி வரிகளில் விட்டுச் சென்ற கலைஞருக்கு இயக்கத்தின் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.


செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

No comments:

Post a Comment