Satta Panchayat Iyakkam - PRESS RELEASE
( 25-03-2017)
"Transparency needed in school teacher appointments
- Policy for appointment to those who cleared TET exam in previous years should be announced - Appointment for candidates those cleared TET-2012 should be given priority - Nearly 500 eligible candidates were denied jobs as rules changed midway in TET Exam"
- DETAILED PRESS RELEASE IN ENGLISH - IN ATTACHMENT
ஆசிரியர் பணி நியமனங்களில்
வெளிப்படைத்தன்மை வேண்டும்....
முந்தைய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு(TET) எழுதியவர்களிலிருந்து பணிநியமனம் செய்யப்படுவது குறித்தான தெளிவான கொள்கை முடிவை அரசு அறிவிக்க வேண்டும் – 2012ல் TET தேர்வெழுதி தகுதிபெற்று காத்திருக்கும் 500 தேர்வர்களுக்கு முன்னுரிமை தந்து பணிநியமனம் செய்யப்படவேண்டும்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்…
பத்திரிகை செய்தி – 25-03-2017
2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (பிற்சேர்க்கை) வெற்றி பெற்றும், இது நாள் வரையில் பணியமர்த்தப்படாமல் இருக்கும் 500 தேர்வர்களுக்கு(இடை நிலை ஆசிரியர்கள்) முன்னுரிமை தந்து உடனடியாக பணியாணை வழங்க தமிழக அரசை சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது.
ஆசிரியர்கள் நியமனத்தில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கும் நடைமுறை முன்னர் தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வந்தது. "கல்வி உரிமை சட்டம்" இயற்றப்பட்ட பின்னர், ஆசிரியர் தகுதி தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 2012 ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தே தரவரிசை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 2013 ம் ஆண்டு முதல் மதிப்பு முறையை (வெயிட்டேஜ்) அமல்படுத்தி அதனடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட வேண்டுமென தமிழக அரசு ஆணையிட்டது. அவ்வாணையின்படி ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு மதிப்பும், DTEd or DEEd உள்ளிட்ட தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு 25 விழுக்காடு மதிப்பும் மற்றும் பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு 15 விழுக்காடு மதிப்பும் என புதிய மதிப்பு முறையில் கணக்கிடப்பட்டு தரவரிசை தயாரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாளினை எழுதிய தேர்வர்கள்(இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக), தங்களின் DTEd / DEEd தேர்வுகளை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், அவர்களின் கல்வி நிறைவு சான்றிதழ்கள் 2013 ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிறகே, அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்ததற்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2012 ம் ஆண்டு பணி நியமனம் பெற்றவர்களை காட்டிலும், தகுதியானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருந்தும், தேர்வெழுதிய பின்னர் விதிமுறைகள் இடையில் மாற்றப்பட்டதால் இவர்களுக்கு இன்னமும் பணிநியமனம் வழங்கப்படவில்லை.
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதிய தேர்வர்களோடு சேர்த்து, புதிய மதிப்பீடு முறையில் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டதே இவர்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணம். தேர்வெழுதிய போது நடைமுறையில் இல்லாத விதிகள், பின்னர் இடையில் பின்பற்றப்பட்டது என்பது நியாயமற்ற செயலாகும். இந்தப் பிரச்சனைகளுக்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் உரிய விளக்கம் பெற மாவட்ட / மாநில கல்வித் துறை அலுவலகங்களை ஒவ்வொரு முறை அணுகியபோதும் அவமதிக்கப்பட்டும் அலட்சியப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்து விவரங்கள் அறிவிக்கப்படவுமில்லை, நேரில் விசாரித்த போது உரிய பதிலும் தரப்படவில்லை. இதன் காரணமாக 2012 ம் ஆண்டு பிற்சேர்க்கை தேர்வெழுதிய தேர்வர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர். அதுமட்டுமில்லாது தேர்ச்சியடைந்த தேர்வர்களின் தகுதிச் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு அதாவது 2019 ம் ஆண்டு வரை மட்டுமே செல்லத்தக்கது என்பதனால் மேலும் கவலையடைந்துள்ளனர்.
கூடுதலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வினை வரும் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தவுள்ள நிலையில் அத்தேர்வில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
2012 ம் ஆண்டு தேர்வெழுதி தேர்ச்சியடைந்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் தேர்வர்களை உடனடியாக பணியிலமர்த்தும் திட்டத்தினை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிடாமலிருப்பது எதேச்சதிகாரமானது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2012 ம் ஆண்டு தேர்வெழுதி தேர்ச்சியடைந்து வேலை கிடைக்காமல் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு நியமனங்களில், 2012 தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் பின்னர் தேர்வெழுதி தகுதி பெற்ற தேர்வர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். தகுதியின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விஷயத்தில் அரசு, உரிய கவனம் செலுத்தாவிடில் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டி நீதி கேட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழக அரசானது ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படையான கொள்கை முடிவை அறிவிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 87545-80270
No comments:
Post a Comment