மிரட்டிய வர்தா… மீண்டெழுந்த சென்னை
மழைநீர் வடிகாலின் அவசரத் தேவை
சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிகை செய்தி
14/12/2016
சென்னையை மிரட்டிய வர்தா புயல் ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு, நம்பிக்கை விதை ஒன்றை விதைத்தும் சென்றுள்ளது. ஆம், சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மீட்புப்பணியில் தாமதம் என்று தூங்கிவழிந்த தமிழக அரசு வர்தா புயல் நேரத்தில் விழித்துக்கொண்டது என்றே கூறலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில் உடனுக்குடன் செயல்பட்டு நிவாரண முகாம்களை முன்கூட்டியே அமைத்து பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பகுதியிலுள்ள மக்களை அம்முகாம்களில் தங்கவைத்தது, சாலையில் விழுந்த மரங்களை முடிந்த அளவு விரைவாக அகற்றியது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகக் கையாண்டது. சென்ற ஆண்டு பெய்த பெருவெள்ளம் கற்பித்துவிட்டுப்போன பாடங்களில் சிலவற்றை மாநில நிர்வாகம் நினைவில்கொண்டு செயல்பட்டதால் கிடைத்த பலன்கள் எனலாம். இதே வேகத்தில் மின்சாரத்துறையும் செயல்பட்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் சரிசெய்யப்படவேண்டும் என்பது மக்களின் உடனடி எதிர்பார்ப்பு. இதுபோன்ற பேரிடர் காலங்களில் மின்சார துறையாது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இணைப்பு துண்டிக்கப்படும் காலத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சி எடுக்கவேண்டும்.
இதேபோல், அரசு அறிவித்த தெலைபேசி உதவி மைய எண்கள் முறையாகச் செயல்படவில்லை என்ற புகார் அடுத்த பேரிடரின்போது வராமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.
இவை எல்லாம் தற்காலிகப் பணிகள். புயல் அடித்த அளவிற்கு பெருமழை பெய்யவில்லை என்பதால் அரசு நிர்வாகம் இதனை ஓரளவு சமாளித்துவிட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள்ளேயே மழைநீர் வடிகால் அமைக்கப்படாத பகுதிகள் இன்னும் ஏராளம் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலத்தில்(2011ல்) சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகள் பலவற்றில் இவ்வசதி இல்லை. வடிகால் இல்லாத பகுதிகளில் பெருமழை பெய்திருந்தால் மழைநீர் வடிய வாய்ப்பில்லாமல் வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்திருக்கும். மீண்டும் ஒரு பேரழிவை சென்னை சந்தித்திருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து பகுதியிலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
செந்தில் ஆறுமுகம்
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274, 87545-80270
No comments:
Post a Comment