Monday, 5 December 2016

முதல்வர் ஜெயலலிதா விட்டுச்செல்லும் செய்தி...

06.12.2016

"அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு" என்று பெண்ணடிமைத்தனம் ஊறிப்போன சமுதாயத்தில், ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா அவர்கள் அரசியல் ரீதியில் பெற்றிருக்கும் வெற்றியானது அளப்பரியது. 

துணிச்சலும், திறமையும் ஜெயலலிதா என்ற நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையில்லை. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஏதுமில்லாமல் 234 தொகுதியிலும் தனித்துப்போட்டியிட எடுத்த முடிவானது அவரின் துணிச்சல் மிகுந்த முடிவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. 

உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, மகளிர் காவல் நிலையங்கள், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச்செய்தது, லாட்டரிச் சீட்டு ஒழிப்பு போன்றவை ஜெயலலிதா அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் சில. 

விமர்சனங்கள் இல்லாத அரசியல் தலைவரே இல்லை என்பது போல கொள்கை ரீதியிலும், அவரின் ஜனநாயகத்தன்மை மீதும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுகுறித்து பேசுவதற்கான தருணம் இதுவல்ல. 

தோல்விகளின் போது துவண்டுவிடாமல் மன உறுதியோடு எதிர்த்து நின்று போராடினால் வெற்றி சாத்தியமாகும் என்பதே தமிழக மக்களுக்கு, குறிப்பாக தமிழக பெண்களுக்கு அவர் விட்டுச்செல்லும் செய்தியாகும்.

தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் மறைவால் வாடும் பொதுமக்களுக்கும், அஇஅதிமுகவின் தொண்டர்களுக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

சிவ இளங்கோ
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545-80270

No comments:

Post a Comment