pdf attached..
மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள
10 லட்சம்கோடி விவசாயக் கடன் – விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்குமா..?
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்தி(02-02-2017)
மத்திய பட்ஜெட்டில் வேளாண் கடனுக்கு ரூ.10லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முக்கிய அம்சம்(சென்ற ஆண்டு 9 இலட்சம் கோடி). ஆனால், நடைமுறையில் விவசாயிகளுக்கு இக்கடன் எளிதில் கிடைக்கிறதா என்றால், இல்லை; "Justice Delayed is Justice Denied" என்பார்கள். அதுபோல விவசாயத்திற்கு, உரிய காலத்தில் கடன் கிடைக்கவில்லை என்றால் அக்கடன் கிடைத்தும் பயன் இல்லை.
கூட்டுறவு, அரசு வங்கிகளில் கடன் கிடைக்காததால் கந்துவட்டிக்காரர்கள், தனியார் நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர் விவசாயிகள். பயிர் கருகியதும், கடனைக் கட்ட வழியில்லை, எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது என்ற வேதனையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அல்லது அதிர்ச்சியில் சாகிறார்கள் விவசாயிகள்.
காவிரியிலும் தண்ணீர் வரவில்லை, மழையும் பொய்த்துவிட்டது, கடன்காரர்கள் நெருக்கிறார்கள் என்று அனைத்துதரப்பிலும் நெருக்குதலுக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு "உரிய காலத்தில், உரிய அளவில்" கடன் கிடைப்பது என்பது மிகவும் முக்கியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் முழுமையாக உணர்ந்தபாடில்லை.
ஒருபக்கம், நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து விவசாயிகள் எளிதில் கடன்பெற அரசாங்கமானது நடவடிக்கை வேண்டும். மறுபுறம், விவசாயக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான முழுமையான விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். ஊடகங்கள், பொதுநல அமைப்புகள் இவ்விரண்டு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
இல்லையேல்,
"அறுவை சிகிச்சை வெற்றி; ஆனால் நோயாளி இறந்துவிட்டான்" என்ற இன்றைய அவல நிலைதான் என்றும் தொடரும்...
அரசின் கணக்குப்படி பயிர் கருகியதால் வாழவழியின்றி இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 17. ஆனால் உண்மை நிலவரம் 200ஐத் தாண்டுகிறது.
தங்கள் கொள்கைக் கோளாறுகளால் மரணித்த விவசாயிகளின் படத்தை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மாட்டிவைத்தால்தான் விவசாயிகள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா..?
செந்தில் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர், 87545-80274
No comments:
Post a Comment