Thursday, 16 February 2017

PRESS RELEASE: Governor should have put the Assembly on Suspended Animation...ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

          ENGLISH PRESS RELEAE CAN BE FOUND IN ATTACHMENT
தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருவதால்

ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

  • எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு எதிரானது

      பத்திரிக்கை செய்தி (16-02-2017) – சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் MLA அல்லாத ஒருவர் முதல்வராக வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் 06/02/2017 அன்று வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை 17/02/2017 விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை காத்திருந்து, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காததற்கு தமிழக மக்கள் சார்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் மேதகு ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் 124 MLAக்களை கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். கூவத்தூரில் இருந்து தப்பி வந்த சில MLAக்கள் கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் இது குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல முதலமைச்சர் O.பன்னீர்செல்வம் அவர்களே அவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக புகார் கொடுத்துள்ளார். மாநில முதலமைச்சரை மிரட்டி கையெழுத்து போட வைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதலமைச்சர் சொல்லும் புகாரை ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில் சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்ட திரு. ஆச்சார்யா அவர்களையே கடுமையாக மிரட்டிவர்கள் தான் இவர்கள்.

எனவே தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண சூழலில் யாரையும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அவர்கள் இன்று 16 பிப்ரவரி, திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 1 வாரமாக அடைத்துவைக்கப்பட்டு, இப்பொழுது மக்களின் உண்மை கருத்தறியாமல் ஒரு ஆட்சி பதவியேற்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அடைத்து வைக்கப்பட்டுள்ள MLAக்கள் சுதந்திரமாக அவர்கள் தொகுதியில் மக்கள் பணி செய்ய ஆரம்பித்து 1 மாதத்திற்கு பிறகு யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதே சரியான முடிவாக இருந்திருக்கும்.

எந்தக் காரணங்களுக்காக முதலமைச்சராக பதவியேற்க யாரையும் இதுவரை அழைக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தாரோ, அந்தக் காரணங்கள் இன்று(எடப்பாடி பழனிச்சாமியை அழைத்ததன் மூலம்) அர்த்தமற்றதாகிவிட்டது. கண்முன்னே நடந்த ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் கண்டுகொள்ளாமல் விட்ட தோடு, அதற்கு மறைமுகமாகத் துணை போனது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எங்களைப் போன்ற பொது நல அமைப்புகளுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.


சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80270, 87545-80274

16-02-2017

No comments:

Post a Comment