Monday 23 January 2023

நூறு நாள் வேலை திட்டம் - தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்தக் கூடாது!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினைச் (MGNREGA-2005) சீரமைக்கிறோம் என்ற பெயரில், தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்தக் கூடாது!

தன்னாட்சி அறிக்கை / 21.01.2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005 இன் செயல் திறனை ஆய்வு செய்யவும் அதனை மறுக்கட்டமைக்க பரிந்துரைகளைக் கோரியும், ஒன்றிய அரசு, ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் செயலாளர் மற்றும் பிரதமரின் ஆலோசகரான திரு. அமர்ஜீத் சின்ஹா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவை, கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அமைத்தது. 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய அக்குழு, கடந்த நவம்பர் மாதம் முதல் முறை கூடியது.

இந்நிலையில், இச்சட்டத்தின் மூலம் வறுமை அதிகம் உள்ள பீகார் போன்ற மாநிலங்களில், ஒரு உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த போதுமான பணிகளை உருவாக்க இயலாத சூழலில், பொருளாதார ரீதியாக சிறந்து விளங்கும் கேரளா போன்ற மாநிலங்களோ சொத்து உருவாக்கத்திற்காக இத்திட்டத்தை பயன்படுத்துகின்றன என்றும் பீகாருக்கு MGNREGA அதிகம் தேவைப்பட்டாலும், திட்டத்தின் தற்போதைய கட்டமைப்பின் காரணமாக, கேரளாவிற்கான நிதியை ஒன்றிய அரசால் மறுக்க முடியாது என்றும் பொருள்படும் வகையில் சின்ஹா குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாக, கடந்த நவம்பர் 26, 2022 'தி ஹிந்து' நாளிதழ்ச் செய்தி கூறுகிறது. மேலும் அச்செய்தியில், இச்சட்டம் வறுமையை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று வளர்ச்சித் துறையை அறிந்த ஒரு மூத்த அலுவலர் கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், டிசம்பர் 4, 2022 அன்று வெளியிட்டச் செய்தியொன்றின் படி, பிரதமர் மோடி அவர்கள், கிராமப்புறங்களில் MGNREGA திட்டத்தை ஏழைகள் பயன்பெறுமாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும் ஏழை மாநிலங்கள் முன்னேறும் வகையில் இந்தத் திட்டம் இருப்பதற்குப் பதிலாக, வசதி வாய்ப்புகள் பெற்ற மாநிலங்களையே மேலும் மேம்படுத்துவதாக உள்ளது என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்றும் பெயர் சொல்ல விரும்பாத இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

எனில் திரு. அமர்ஜீத் சின்ஹா தலைமையிலான குழு, இத்திட்டத்திற்காக  ஒதுக்கப்பட்ட நிதியளவைக் குறைக்க, குறிப்பாக சிறப்பாகச் செயல்படும் தென்னிந்திய மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கவும் குறிப்பிட்ட பகுதிகளில்/ மாவட்டங்களில் மட்டும் திட்டத்தைச் செயல்படுத்தவும் குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயன்பெறும் வகையிலும் திட்டத்தினை மாற்றியமைக்கப்  பரிந்துரைக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஏற்கனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில், ரூபாய் 1,06,000 மற்றும் ரூபாய் 1,11,000 கோடிகளாக இருந்த திட்டச் செலவுக் கணக்கு, இந்த நிதியாண்டு ரூபாய் 73,000 கோடியாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் முதல் பக்கத்திலேயே கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பு உள்ளதே தவிர, எந்த இடத்திலும் வறுமையை ஒழிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. அப்படியே வறுமையை ஒழிக்க MGNREGS பயன்படுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட, தென்னிந்திய மாநிலங்களில் வறுமையை ஒழித்து பொதுச் சொத்துகளை உருவாக்க முடிவதற்கான அதே வாய்ப்புகள் தான் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளன. எனவே உரிய வழிகாட்டுதல்களுடன் இத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்தினால் அனைத்து மாநிலங்களிலும் வறுமையை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதே உண்மை.

தவிர, இச்சட்டத்தின்படி, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பாகத் தொழிலாளர் நிதி மதிப்பீடு (Labor budget) தயாரித்து நிதியைப் பெறுவதில் ஒன்றிய அரசின் பங்கை விட, மாநிலங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கே மிக அதிகம். ஒவ்வொரு கிராம ஊராட்சியும் அதன் தொழிலாளர் நிதி மதிப்பீட்டில் கோரியுள்ள நிதியினை, அந்தக் கிராம சபை ஒப்புதல் அளித்து இருந்தால், அதை மறுக்காமல் வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதைச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. சின்ஹா குழு உறுப்பினர் குறிப்பிட்டுள்ளவாறு பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராம ஊராட்சிகளும் மாநில அரசும் ஒன்றிணைந்து முறையாகத் தங்கள் தொழிலாளர் நிதி மதிப்பீட்டினைத் தயாரித்து வழங்கினால் அவர்கள் கேட்கும் நிதி சட்டப்படி கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் அவர்கள் செய்ய நினைக்கும் பணிகளை பெற முடியும் என்பதே உண்மை. 'தேவையின் அடிப்படையில் வேலை' (demand based work) என்று இயங்கும் இத்திட்டத்தில் அவர்கள் குறிப்பிடும் பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான வேலையைக் கோராததால் அவர்களுக்கு குறைந்த அளவு நிதியும் அதே வேளையில் கேரளா போன்ற மாநிலங்கள் அவர்களுக்குத் தேவையான வேலையைக் கோருவதால் அவர்களுக்கு அதிக அளவு நிதியும் ஒதுக்கப்படும் நிலையில், தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் அதிக நிதியைப் பெறுகிறது என்ற வகையில் கருத்துருவாக்கம் செய்யப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே,

1.     சின்ஹா தலைமையிலான குழு, ஒருவேளை தென்னிந்திய மாநிலங்களின் MGNREGS பணிகளை / நிதியைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைத்தால், அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.

 

2.     அதேபோல், வறுமையுள்ள மாநிலங்களாக ஒன்றிய அரசு கருதும் மாநிலங்களின் கிராம ஊராட்சிகளுக்கு MGNREGA சட்டம் மற்றும் திட்டம் தொடர்பான முறையான வழிகாட்டுதல்களும் பயிற்சியும் கிடைக்கப் பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

என்று தன்னாட்சி கோருகிறது.

References:

 

The Hindu News:

https://www.thehindu.com/news/national/government-forms-panel-to-look-into-mgnregas-efficacy/article66183754.ece

 

Hindustan Times News:

https://www.hindustantimes.com/india-news/modifavours-nregs-recast-to-help-poorest-101670090279959.html

 

நன்றியுடன்

 

இரா. வினோத் குமார்

பொதுச் செயலாளர்

9445700758 / 7200297276