Thursday 25 May 2023

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

தன்னாட்சி கண்டன அறிக்கை

கடலூர் மாவட்டத்தில், கடந்த மே 1 அன்று நடந்த கிராமசபையில், மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, சின்ன நெற்குணம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, எறும்பூர் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில், மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLC India) தனது சுரங்கப் பணி விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகளின்,  ஊராட்சி செயலாளர்கள் 6 பேரை, அந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்.எல்.சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய குறிப்பிட்ட 6 ஊராட்சிகளின் ஊராட்சி செயலாளர்கள் மட்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, "அரசுக்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைத்தால் தண்டிக்கப்படுவீர்கள்" என்று ஊராட்சி செயலாளர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலன்றி வேறல்ல. கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரின் (கிராம ஊராட்சி) இந்த மக்கள் விரோதச் செயலைத் தன்னாட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு கிராம ஊராட்சி, தனது எல்லைக்குட்பட்ட பொதுப் பிரச்சனைகளில், ஊராட்சியின் சட்டப்படியான அதிகாரங்களுக்குட்பட்டு, மக்களின் முடிவின் அடிப்படையில், கிராமசபையில் தீர்மானங்களை நிறைவேற்ற உரிமை உண்டு. அப்படிப்பட்டத் தீர்மானங்களை ஆய்வுக்குட்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பளித்து, தேவைப்பட்டால் அவற்றை  நிராகரிக்கும் அதிகாரத்தை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 202, ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) வழங்கியுள்ளது.

இந்நிலையில், கிராமசபையில் ஒரு பொதுப் பிரச்னை குறித்த மக்களின் விவாதங்களை, முடிவுகளை தொடக்கத்திலேயே ஊராட்சி செயலர்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராமசபையின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்திருக்கும் மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தின் ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) அவர்களுக்கு தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.

தோழமையுடன்

வினோத் குமார்
பொதுச் செயலாளர்
தன்னாட்சி
9445700758

thannatchi.in