Sunday 13 August 2023

ஜனவரி 26, 2023 கிராமசபை பற்றிய ஆய்வறிக்கை

தமிழ்நாட்டில் கிராமசபைகள் பெயரளவிற்குத் தான் நடைபெறுகிறதா?


தன்னாட்சி மற்றும் IGG அமைப்புகள் இணைந்து ஜனவரி 26, 2023 அன்று இணையவழியில்  நடத்தப்பட்ட ஆய்வறிக்கை குறித்த


பத்திரிக்கை செய்தி


அரசமைப்புச் சட்டத்தில் நம் நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்களிப்பை நேரடியாக உறுதி செய்யும் ஒரு முக்கியமான தளம் 'கிராமசபை' ஆகும். தேர்தல் காலத்தில் வாக்கு செலுத்துவது மட்டும் ஜனநாயகக் கடமையின்றி மக்கள் பங்கேற்புத் தளமான கிராமசபையிலும் பங்கேற்பது ஒவ்வொரு குடிமாக்களின் ஜனநாயகக் கடமையாகும். கிராமசபை என்பது தமிழ்நாட்டில் 1996 முதல் சட்டப்படி இருக்கிறது எனினும் கடந்த சில வருடங்களாகப் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டப் பரவலான விழிப்புணர்வு காரணமாக பல இடங்களில் அது முறையாக நடைபெற்று வருகிறது எனலாம். கடந்த ஆட்சியில் ஊரடங்கு முடிவுற்ற பிறகும் கரோனாவை காரணம் காட்டி கிராமசபை நடத்தப்படாமல் இருந்தது. தற்போதைய ஆட்சியில் வருடத்திற்கு 4 முறை நடந்து வந்த கிராமசபை 6 முறையாக மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால் உண்மையில் அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிராமசபை முறையாக நடைபெறுகிறதா? கிராமசபை விவாதப் பொருள்கள் அனைத்தும் முறையாக மக்களால் விவாதிக்கப்படுகிறதா? விவாதப் பொருட்கள் தாண்டி மக்கள் முன்மொழியும் இதர பொருள்கள் விவாதிக்கப்படுகிறதா இல்லையா? கிராமசபையின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? அதில் மக்கள் எவ்வாறு ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்? என்பதெல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதற்கு பதில் காணும் விதமாக கடந்த ஜனவரி 26, 2023 அன்று நடந்த கிராமசபையை Institute of Grassroots Governance மற்றும் தன்னாட்சி கூட்டாக சேர்ந்து இணையவழி மூலமாக ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் மொத்தம் 16 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களிலிருந்து அதாவது 142 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 210 கிராம ஊராட்சிகளிலிருந்து சுமார் 258 கிராமசபை உறுப்பினர்கள் (மக்கள்) கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் சாதாரண மக்கள் முதற்கொண்டு ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம தன்னார்வலர்கள் என அனைவரும் அடக்கம். இந்த இணையவழி ஆய்வின் முடிவுகளிலிருந்து கிராமசபை ஜனவரி 26, 2023 அன்று எவ்வாறு நடைபெற்றது என்பதுடன் பொதுவாக கிராமசபை தமிழ்நாட்டில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முடியும்.

ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் கீழ்வருமாறு.. 

முக்கிய கண்டறிதல்கள்:

  1. இந்தியாவில் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமசபை தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

  2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் படி தமிழ்நாட்டில் எந்த ஊராட்சிகளிலும் கிராமசபை விவாதப் பொருட்கள் (அஜெண்டா) அந்த ஊராட்சி மன்றத்தால் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான் விவாதப் பொருட்களை முடிவு செய்து அனுப்பி வைக்கிறது.

  3. அவ்வாறு அனுப்பப்பட்ட விவாதப் பொருள்கள் அனைத்துமே பெரும்பாலான ஊராட்சிகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படவில்லை.

  4. சுமார் 18 விவாதப் பொருட்கள் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜனவரி 26, 2023 கிராமசபை, பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றுள்ளது.

  5. வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் பற்றாளர்களில் பெரும்பாலானோர் கிராமசபையின் விதிமுறைகளான சுழற்சி முறையில் கிராமசபை நடப்பதை உறுதி செய்வது, வருகைப்பதிவேட்டை சரிபார்த்து குறைவெண்வரம்பை உறுதி செய்வது, தீர்மானங்கள் எழுதப்பட்டு அதில் கையொப்பம் வாங்குவது போன்றவைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதில்லை.

  6. பெரும்பாலான ஊராட்சிகளில் கிராமசபையின் முக்கிய கடமைகளான வரவு செலவு அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கைகள் போன்றவை முறையாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவில்லை. 

  7. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், கிராம வறுமை குறைப்புத் திட்டம் போன்ற சில முக்கிய திட்டங்கள் பற்றி பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

  8. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி கிராம ஊராட்சிகளால் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) பெரும்பாலான ஊராட்சிகளில் தயாரிக்கப்படவில்லை.

  9. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்/நிதி உதவிகள் போன்றவையோடு, மக்கள் நிலை ஆய்வு (PIP) அறிக்கை மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் போன்றவை பெரும்பாலான ஊராட்சிகளில் முறையாக விவாதிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை.

  10. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் பெரும்பாலான ஊராட்சிகளின் கிராமசபையில் விவாதிக்கப்படவில்லை.

  11. மக்கள் முன்மொழியும் அடிப்படை தேவைகள் பிரச்சனைகள் குறித்து பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

பரிந்துரைகள்:

  1. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோடு கிராம ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பற்றாளர்கள் போன்ற அனைத்து அலுவலர்களுக்கும் மற்றும் கிராமசபை உறுப்பினர்களான வாக்காளர்களுக்கும் கிராமசபை பற்றிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  2. பல காலமாக விவாதப் பொருட்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் அனுப்பப்பட்டு வரும் நிலை மாறி சட்டப்படி அந்தந்த கிராம ஊராட்சிகளே தங்கள் விவாதப் பொருட்களை தயாரிக்குமாறு அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தாங்களே விவாதப் பொருட்களை தயாரிக்க முன் வரும் கிராம ஊராட்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

  3. கிராமசபை ஒப்புதல் தேவைப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவாதப் பொருட்களில் சேர்க்குமாறு தொடர்புடைய கிராம ஊராட்சிகளுக்கு அலுவல் ரீதியான கடிதங்கள் அனுப்புவது என்பது நடைமுறையாக்கப்பட வேண்டும். 

  4. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதில் கிராமசபையின் பங்கு ஆகியவை பற்றி பொதுமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  5. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) முறையாக மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  6. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி இந்நிதி (CFC) செலவு செய்யப்படுகின்றதா என்பது மீளாய்வு செய்யப்பட்டு அவை முறையான சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  7. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதிகளும் முறையான சமூகத்தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சமூக தணிக்கை குழு முறையாக செயல்படுகிறதா என்பதும் அக்குழுவின் அறிக்கை கிராமசபையில் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றதா என்பதும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

  8. மக்கள் நிலை ஆய்வறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் கிராமசபையில் வைக்கப்பட்டு முறையான விவாதத்துடன் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும்.

  9. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறை கடிதத்தின் படி அனைத்து கிராமசபைகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் விவாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  10. விவாதப் பொருட்கள் தவிர மக்கள் முன்மொழியும் இதர பொருட்கள் பற்றி கண்டிப்பாக கிராமசபையில் விவாதிக்கபடுவது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.


தோழமையுடன்,
வினோத் குமார்
பொது செயலாளர்
தன்னாட்சி
9445700758