Friday 26 October 2018

Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED" BY Tamilnadu Government" !! உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! - சட்ட பஞ்சாயத்து இயக்க பத்திரிகை செய்தி(26-10-2018)


Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED BY Tamilnadu Government" !!  
              உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் 
             அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்  -  பத்திரிகைச் செய்தி( 26-10-2018), 87545-80274, 87545-80270

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) காரணம்..!!  உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பிற்கு ஆளான தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திலும் அசிங்கப்பட்டு தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தாமல் இருக்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !!   திங்கட்கிழமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அவசரச் சட்டம் இயற்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவதில் காட்டிய "வேகத்தை","சட்ட நுணுக்கத்தை" விரைவாக தேர்தல் நடத்தப்படுவதில் காட்டவேண்டும்.  - சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு, கோரிக்கை

மீண்டுமொருமுறை தமிழக அரசின் தலையில் கொட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. லோக் ஆயுக்தா ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைக் கேள்விகேட்ட உச்சநீதிமன்றம், இன்று   உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று கேள்வி கேட்டு 4 வாரத்திற்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு, இதற்குச் சொல்லிவரும் காரணம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியிலான வார்டு மறுவரையறைகள் முடிக்கப்படவேண்டும் என்பதே. இது பச்சைப் பொய். உடனடியாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக கண்டுபிடித்த காரணம்.  பழங்குடியினருக்கு உரிய தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறி திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இக்காரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம்,1994ல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர கோலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது சட்டவிதிவீறல் என்ற அடிப்படையில் 04-10-2016 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்துசெய்தது. 
கூடவே, குறைபாடுகளைச் சரிசெய்து டிசம்பர் 31,2016க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியது. 

அதேசமயத்தில்,  2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும், அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடைவிதிக்கவேண்டும் என்று கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "..எந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்" என்பதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கு தடை விதிக்க முடியாது" என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதாவது, 2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிறகு எந்த அடிப்படையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுவரையறைகள் முடிந்தபின்புதான் 
தேர்தலை நடத்துவோம் என்று அதிமுக அரசு  தொடர்ந்து சொல்கிறது...?
 
"பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்" வழியை தமிழக அரசு பின்பற்றியது என்றால் மிகையில்லை. ஆம், டிசம்பர் 31,2016க்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களின் உத்தரவைப் பின்பற்றப்படவில்லை, உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படவேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 04-09-2017 அன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது(இத் தீர்ப்பில்தான் நவம்பர்17,2017க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்திமுடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது) . 04-09-2017அதாவது திங்கட்கிழமையன்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஒரு நாள் முன்னர், அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-2017) அவசர,அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை(Ordinance) பிறப்பித்தது தமிழக அரசு (TAMIL NADU ORDINANCE No. 4 OF 2017). 

அந்த அவசரச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டது? 
5 சட்டங்கள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டிருந்தது (1. Chennai City Municipal Corporation Act, 1919,  2. The Madurai City Municipal Corporation Act, 1971, 3. The Coimbatore City Municipal Corporation Act, 1981, 4.Tamil Nadu District Municipalities Act, 1920  5. Tamil Nadu Panchayats Act, 1994). 

எதற்காக இந்த 5 சட்டங்கள் திருத்தப்பட்டன ?  
தமிழக அரசு, 2011 மக்கள்தொகை அடிப்படையில்  வார்டு வரையறைகள் முடித்தபின்புதான் தேர்தல் நடத்தமுடியும் என்று தொடர்ந்து "பொய்" சொல்லிவந்தது. ஆனால், இப்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சிச் சட்டங்கள் தமிழக அரசின் வாதத்திற்கு எதிராக இருந்தது. தன்னுடைய பொய்வாதத்திற்கு உதவாத சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டால், திங்கட்கிழமையன்று(04-09-17) நீதிமன்றத்தில் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது தமிழக அரசு. ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-17) அவசர அவசரமாக, 5 சட்டங்களைத் திருத்தி அவசரச் சட்டம் இயற்றியது. எடுத்துக்காட்டாக, 12524 கிராமப் பஞ்சாயத்துகள் தொடர்பான திருத்தத்தின் வரிகள் இப்படி இருந்தது.   "...."In the Tamil Nadu Panchayats Act, 1994, sections 28-A, 28-AA and 28-AAA shall be omitted." . அதாவது, பிரிவு 28-A,28-AA,28-AAA ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டது. இந்தப்பிரிவுகளின்படி வார்டு வரையறைகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் படியே தேர்தல் நடத்தலாம் என்பதுதான்..!!  

ஆக, இப்போது இருக்கும் சட்டத்தின்படி, எந்த மாற்றமும் வார்டுகளில் செய்யவேண்டியதில்லை. ஆனால், தமிழக அரசிற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் விருப்பமில்லை. இரட்டை இலை  சின்னம் கிடைத்தபின்னும், ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுக தோற்றது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக அரசால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த "பொய்யை" நியாயப்படுத்த ஒரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 04-09-2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அவர்கள் முன்பு நடைபெற்ற வாதத்தில் "...தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளதால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. உடனடியாகத் தேர்தலை நடத்த முடியாது" என்று மாநிலத் தேர்தல் ஆணையம் வாதிட்டது. (ஆனாலும், இவ்வாதங்களை ஏற்காமல், நவம்பர்17,2017க்குள் தேர்தலை நடத்துங்கள் என்று இந்திரா பேனர்ஜி அவர்கள் உத்தரவிட்டார் என்பது வேறு விவகாரம்). இது "பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலை"தானே ?

அதிமுக அரசின் அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சிச் சட்டத்தைத் திருத்திவிட்டு, நீதிமன்றத்தில் வந்து "... உள்ளாட்சிச் சட்டதிருத்தத்தின்படி, 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் முடிவுற்ற பின்னர்தான் தேர்தல் நடத்தமுடியும்" என்று "சட்ட நுணுக்கம் !?" பேசுகிறது அதிமுக அரசு. 

சரி... விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட என்ன செய்யவேண்டும் ?

1. 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் மாற்றும் பணி விரைவாக முடிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

2.  2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து முடிப்பதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தமிழக அரசு கருதினால், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் அடிப்படையிலேயே உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் (  03-09-2017 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டால்,  இப்போதுள்ள வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த சட்டசிக்கல் எதுவும் வராது )

லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல்கொடுத்த வந்தபோதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் அச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.  அதேபோல், உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியும் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் இயற்றப்படுவதையும், சட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும்தான் செய்யும் என்றால், மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்  "தமிழகத்தில் ஆட்சி எதற்கு..? அரசு எதற்கு...?" 

"மாநில சுயாட்சி"க்காகக் உரத்துக் குரல்கொடுத்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, "கிராம சுயாட்சி"யைத் துச்சமென மதிப்பது கொடுமையிலும் கொடுமை.

உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று மீண்டுமொருமுறை தமிழக அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274, 87545-80270

No comments:

Post a Comment