Friday 26 July 2019

SPI PR - லஞ்சம் கேட்ட VAO கைது - 26 July 2019

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (26-07-2019)

தொடர்பு எண்கள் :  88704 72177 / 87545 88222

லஞ்சம் கேட்ட VAO கைது

வீடியோ ஆதாரத்துடன் லஞ்சஒழிப்புத்துறையிடம் பிடித்து கொடுத்தது சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

 

லஞ்சம் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட  சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் பல லஞ்ச-ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை பற்றி, லஞ்ச ஒழிப்புதுறையிடம் இயக்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இயக்கத்தின் புகாரின் அடிப்படையில், இன்று (26-07-2019) லஞ்ச ஒழிப்புத்துறை கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

திண்டுக்கல் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சுப்பிரமணி  குடும்பத்தினர்ஜூன்  மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளனர். 26 ஜூன்  2019 அன்று குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த பிறகு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக (2 இடங்கள்) 27 ஜூன் 2019 அன்று கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அணுகியுள்ளனர். ஒரு பட்டா பெயர் மாற்றத்திற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மொத்தம் 12000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்துதரமுடியும் என்று வெளிப்படையாக லஞ்சம் கேட்டுள்ளார்.

 

இதை தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறையிடம் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சுப்பிரமணி சென்று முறையிட்டபொழுது (10-7-2019), வீடியோ ஆதாரம் வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை கேட்டது. ஜூலை 12,2019அன்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டபொழுது, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று தெளிவாக கூறியதை வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்றும், பேரம் பேசி கடைசியாக 8000 ரூபாய் பெற்றுக்கொண்டு பட்டா பெயர்மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். இதை வீடியோ ஆதாராமாக லஞ்சஒழிப்புத்துறையிடம் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர்.

 

லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் (Inspector Geetha – 8300005091 & DSP Nagarajan – 9498145647) இன்று மதியம் 2 மணி (26-07-2019) அளவில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக லஞ்சஒழிப்புத்துறையை கேட்டுக்கொள்கிறோம். மேலும், இயக்க உறுப்பினர் சுப்பிரமணிக்கு உடனடியாக பட்டா பெயர் மாற்றும் செய்துதரவேண்டும் என்றும் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

அ.ஜெய் கணேஷ்

மாநில அமைப்பு செயலாளர்

தொடர்பு எண் : 88704 72177


No comments:

Post a Comment