Saturday 2 March 2024

வலுக்கட்டாயமான நகரமயமாக்கலைக் கண்டிக்கிறது, தன்னாட்சி!

மக்களின் விருப்பத்திற்கு மாறாகக் கிராம ஊராட்சிகளை நகரமயமாக்குவது முறையா?

வலுக்கட்டாயமான நகரமயமாக்கலைக் கண்டிக்கிறது, தன்னாட்சி!

தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை அருகாமையிலிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைத்து விடுவது அல்லது பெரிய ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக வகைமாற்றம் செய்து விடுவதென மக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகளை மேற்கொண்டு வருகிறது அரசு. கன்னியாகுமரி, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வலுக்கட்டாய மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் போராடி வருகிறார்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் சுமார் 35 கிராம ஊராட்சிகளை நகரங்களாக மாற்றுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த 35 ஊராட்சிகளில், 10 ஊராட்சிகள் நேரடியாகப் பேரூராட்சிகளாகவும், மற்ற 25 கிராம ஊராட்சிகள் அருகாமையில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைப்பதற்கும் பணிகள் நடந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களும் ஊராட்சிப் பிரதிநிதிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த ஊராட்சிப் பிரதிநிதிகளிடம் இது பற்றி கேட்டபோது இந்த நகரமயமாக்களை எதிர்த்து ஜனவரி 26 கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இப்போராட்டங்கள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது உரியத் தீர்மானங்களோடும், பொதுமக்கள் கருத்துகளோடும் தான் இணைக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கோ, ஊராட்சி மன்றத்திற்கோ, கிராமசபைக்கோ, மக்களுக்கோ முறையாகத் தகவல் ஏதும் தெரிவிக்கவே இல்லை என்றும் ஒரு அதிகாரப்பூர்வக் கடிதம் கூட வரவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள். 

இதுபோன்ற நகரமயமாக்கலால் ஊராட்சிகளில் சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்ப மக்கள் தான் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்களாக இருக்கப் போகிறார்கள் என்பது கண்கூடு. கிராம வளர்ச்சிக்கும், விவசாய முன்னேற்றத்திற்கும் பெரிய அளவில் பங்களித்து வரும் பல மத்திய/ மாநில அரசுத் திட்டங்கள், குறிப்பாக 100 நாள் வேலைத் (MGNREGA) திட்டத்தினை முற்றிலுமாக மக்கள் இழக்க நேரிடும். எளிய மக்களின் வீட்டு வரியும், குடிநீர் கட்டணமும் பல மடங்கு உயரும். விவசாயத்திற்கான விளைநிலங்கள் விற்பனை மனைகளாக மாறும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பொது மக்களின் நேரடிப் பங்களிப்பிற்கான, அதாவது கிராமசபைக்கான வாய்ப்பு இல்லாமல் போகும். மக்கள் கிராமசபையில் கூடி ஊர் வளர்ச்சிக்குத் திட்டமிட்டது எல்லாம், வெறும் கவுன்சிலரிடம் சென்று கோரிக்கைக் கடிதம் தருவதாகச் சுருங்கும். 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்த மாதவ் காட்கில் அறிக்கை, உலகின் மிகச்சிறந்த உயிர்பல்வகைமை கொண்ட இப்பகுதிகளைப் பாதுகாக்கக் கிராம ஊராட்சிகளையும், கிராமசபைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை மட்டுமில்லாமல் கடலோர வளங்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை நகரமயமாக்குவது எந்த வகையிலும் நலனைத் தரப்போவதில்லை. கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து கிராமங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டே போகிறது.  இது வெறும் எண்ணிக்கையின் வீழ்ச்சி மட்டுமல்ல. இது மனிதவள மேம்பாட்டின் வீழ்ச்சி. ஜனநாயகத் தன்மையின் வீழ்ச்சி. விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார வீழ்ச்சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் வீழ்ச்சி. இது மக்களுக்கும் மக்கள் பிரதிகளுக்குமான இடைவெளியை அதிகரித்து அதிகாரக்குவியலுக்கு வழிவகுக்கும் முயற்சி. 

எனவே, 

1. கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகர்ப்புற உள்ளாட்சிகளாக வகைமாற்றம் செய்வதையும், பிற நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைப்பதையும் தன்னாட்சி கண்டிக்கிறது. 

2. செயற்கையாக நகரங்களை அதிகப்படுத்துவதைத் தமிழ்நாடு அரசு முற்றிலுமாகத் தவிர்ப்பதோடு தொடர்புடைய கிராம ஊராட்சியின், அதன் கிராமசபையின் ஒப்புதலோடுதான் வகைமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது பிற நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி. 

3. அரசு இது போன்ற முக்கிய நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment