Friday 23 November 2018

” கஜா புயல் : அவசரம் ஆறு” - கள அறிக்கை - பத்திரிகை செய்தி-23-11-2018: GAJA CYCLONE: FIELD REPORT - PRESS RELEASE


சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 பத்திரிகை செய்தி (23-11-2018)

தொடர்புக்கு : 87545 80274


கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கக் குழுவினரின் கள அறிக்கை: ( அரசு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து )
                                       
                       
"கஜா புயல் :  அவசரம் ஆறு"

      1.      மின் இணைப்பு, மரங்கள்   

2.  முகாம்களிலிருந்து வீடு திரும்ப
3.  NGOs, தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு

4.  செல்போன் தொடர்பு
5.  வி.ஏ.ஓக்கள் கிராமத்தில் தங்கும் அரசாணை;உள்ளாட்சித் தேர்தல்

6.  நீட் தேர்வு தேதி நீட்டிப்பு



1. மின் இணைப்பு, வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்த :

 

விழுந்துகிடக்கும் இலட்சக்கணக்கான மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை நடுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்றுமடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது நல்ல அணுகுமுறை. மின்வாரிய ஊழியர்களும் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு மின்கம்பங்களைப் பதிக்கப் போராடி வருகிறார்கள். அந்தக் கடைநிலை ஊழியர்களின் பணி அளப்பரியது. ஆனால், தேவைகளோடு ஒப்பிட்டால் களத்திலுள்ள அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவே.

 

மின்கம்பம் நடுதலில், தொழில்நுட்பம் சாராத, மனித உழைப்பு(Labour work) மட்டும் தேவைப்படும் பணிகளில் ஈடுபட விருப்பம் உள்ள உள்ளூர்/வெளியூர் பொதுமக்களும் இப்பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிப்பு கொடுத்தால் ஏராளமான பணியாட்கள் கிடைப்பார்கள்( அவசரம் கருதி மின்வாரிய ஊழியர்களுக்குக் கொடுப்பதைப்போல் நல்லதொரு தினக்கூலியை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.). போதிய மரம் அறுக்கும் உபகரணங்கள் கொடுத்து, வீழ்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும் இந்தத் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் வேலை வாங்குவது, இவர்களுக்கு முறையாக தினக்கூலி கொடுப்பது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது என்றாலும், இதுபோன்ற வழியில் மேலும் பல்லாயிரக்கணக்கான தற்காலிகப் பணியாளர்களைக் களமிறக்காவிட்டால் அறுந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் சீரமைக்க மாதங்கள் பல ஆகிவிடும். இராணுவத்தின் உதவியையும் கோரிப்பெற்றால் சீரமைப்புப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும். (சென்னையில் உள்ளதுபோல் பூமிக்கடியில் மின்சார கேபிள்களை பதிக்கும் திட்டம் குறித்து பரிசீலப்பது அவசியமாகிறது. இல்லையேல், இப்போது நடப்படும் மின்கம்பங்கள் அடுத்த புயலில் சாய்ந்துவிடும்!!)


2.    முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்ப:


2.1 புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் இன்னும் ஏராளமான மக்கள் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பவே விருப்பப்படுகின்றனர். சிதிலமடைந்துள்ள வீட்டின் மேற்கூரையின் மேல் போர்த்த ஒரு பிளாஸ்டிக் தார்பாய், போர்வை,பாய்,  துணி போன்ற அடிப்படைப் பொருட்கள் கிடைத்தால் மக்கள் வீடு திரும்புவார்கள். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ( முற்றாக இடிந்துபோன குடிசை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்தோருக்கு இதுவும் சாத்தியமில்லை)

 

2.2 சில கிராமங்களில் அடிபம்புகளில் தண்ணீர் வருவதால் குடிநீர் பிரச்னையை சமாளிக்கிறார்கள். பல இடங்களில் இது சாத்தியமாக இல்லை. ஆகவே, குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள பகுதிகளில் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் மின்மோட்டரை இயக்கி, மக்களுக்கு குடிநீர் தரவேண்டும் அரசு.

 

2.3 மின்சாரம் கிடைக்க இன்னும் பல வாரங்கள் ஆகும் என்ற நிலையில், வீட்டிற்கு 1 லிட்டர் மண்ணென்ணெய் கொடுத்தால் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதற்காக, மத்திய அரசிடமிருந்து சிறப்பு உதவியைக் கோரலாம். இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் வீட்டிற்கு வீடு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. மின்சாரம் இல்லாமல் ஒருவாரம் கடந்துவிட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

 

3. NGO, தொழில் நிறுவனங்களின் உதவி-ஒருங்கிணைப்பு:

 

நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள், NGOக்கள் மற்றும் அரசாங்கத்தின் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் பொருட்களைக் கொண்டுவருவோர் தேவையுள்ள மக்களுக்கு தங்கள் பொருட்களைக் கொண்டுசேர்ப்பதற்கு முடியாமல் சிரமப்படும் சூழல் உருவாகிறது. இவ்வளவு நிவாரணப் பொருட்கள் வந்தும், உள்கிராமங்களில் "ஒரு மெழுகுவர்த்தி, தீப்பெட்டியாவது கொடுங்க" என்று மக்கள் கெஞ்சும் நிலையில் உள்ளனர்.  ஆகவே, நிவாரணப் பொருட்கள் தர முன்வரும் NGOக்கள், தொழில்நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் நிவாரணப் பணிகள் இன்னும் சிறப்பாக நடக்கும்.

 

ஒரு சில கிராமங்கள் அல்லது முகாம்களை ஒரு தொகுப்பாக்கி(Group),  ஒவ்வொரு தொகுப்பின் அவசரத் தேவைகளைத் தீர்த்துவைக்க, உதவ முன்வந்துள்ள நிறுவனங்களில் ஒன்றைப்  பொறுப்பாக்கலாம். அரசின் உதவியோடு, ஒருங்கிணைப்போடு உள்ளூர் மக்களின் உடனடித் தேவைகளைத் தீர்த்துவைக்க இந்நிறுவனங்களின் உதவியைப் பெறலாம்.

குளறுபடிகள் ஏதுமின்றி, அனைத்து கிராமங்களுக்கும், அடிப்படை உதவிகள் கிடைத்திட இந்த ஒருங்கிணைப்பு உதவியாக இருக்கும்.

 

 

4. செல்போன் தொடர்பு:


அரசின் அறிவிப்புகள் மக்களிடம் சென்று சேர, நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அவசரப் பிரச்னைகள் குறித்து தகவல் தர, பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு போன்ற பலவற்றிற்கும் செல்போன் இணைப்பு அத்தியாவசியமாகிறது. ஆகவே, செல்போன் நிறுவனங்களுக்கு நெருக்குதல் கொடுத்து ஜெனரேட்டர் மூலமாக டவர்களை இயக்கச் செய்யவோ அல்லது நடமாடும் டவர்களை அமைக்கவோ செய்யவேண்டும் அரசு.  (  பக்கத்து நகரங்களில், மெயின் ரோட்டில், பெரிய பாட்டரிகள் கொண்டு ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக செல்போன்கள் சார்ஜ் செய்து தரப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்துகொள்ள ரூ.20 கட்டணம் !! ) செல்போன் தொடர்பு வந்துவிட்டால், நிவாரணப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும்.  21ம்நூற்றாண்டில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின்  உறவினர்கள்(வெளியூர்களில் உள்ள) , தனது உறவினரின் நிலை என்ன என்று அறிந்துகொள்ள முடியாமல் பரிதவிக்கும் நிலை கொடுமையிலும், கொடுமை. குடிநீர், மின்சாரம், உணவு போன்றவை போல், செல்போன் தொடர்பும் இன்றைக்கு ஒரு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் அரசு.

5. வி.ஏ.ஓ.க்கள் கிராமத்தில் தங்க உத்தரவிட வேண்டும், தங்காதவர்கள் டிஸ்மிஸ், உள்ளாட்சித் தேர்தல்:

 

வி.ஏ.ஓ. எனும் கிராம நிர்வாக அதிகாரி, அவர் பணியாற்றும் வருவாய் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. இதற்காக தனி அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற உத்தரவும் உள்ளது.  மாநில அரசின் பிரதிநிதியாக, மக்களின் அருகிலேயே தங்கி, மக்களுக்கு அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க, அவர்களுக்கு பிரச்னை வரும்போது உதவுவதற்கு உருவாக்கப்பட்டதே வி.ஏ.ஓ.பணி. ஆனால், பணியில் சேரும் போது, கிராமத்தில் தங்குவேன் என்ற விதிமுறையில் கையெழுத்து போட்டுவிட்டு, அருகிலுள்ள நகரத்தில்தான் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் தங்குகின்றனர். இதனால், கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கஜா புயல் போன்ற பாதிப்புக் காலங்களில் வி.ஏ.ஓ.க்களின் பணி மிகவும் முக்கியமானது. மக்களுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருக்கவேண்டியது அவர்களே. ஆனால், இன்றோ "பாலத்தைக் காணவில்லை" என்று மக்கள் தேடவேண்டி உள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல கிராமங்களுக்கு இன்றுவரை பல வி.ஏ.ஓக்கள் வரவில்லை என்பது வேதனையின் உச்சம்.

 

ஆகவே, ஏற்கனவே போடப்பட்ட அரசு ஆணையை(வி.ஏ.ஓக்கள் கிராமத்தில் தங்க) கண்டிப்பாக செயல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.  இந்த அடிப்படைக் கடமையை செய்யாத வி.ஏ.ஓக்கள் முதலில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள், இறுதியில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்ற அதிரடி உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும்.


பல்வேறு அரசியல் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் பஞ்சாயத்து தலைவர், வார்டுமெம்பர் போன்ற உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை.
வி.ஏ.ஓ. ஊரில் இல்லை. 

 

6.நீட் தேர்வு விண்ணப்ப தேதியை நீட்டிக்கவேண்டும்:
( Extension of last date to apply for NEET Exam..)


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி வருகிறது( கடைசி நாள்: நவம்பர் 30). புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க உதவும் வகையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கவேண்டும். தமிழக அரசானது, மத்திய அரசிற்கு இதுகுறித்து உடனடியாகத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் ஒருவாரமே அவகாசம் உள்ளதால் அரசின் அவசர நடவடிக்கை அவசியமாகிறது.

  

வாழ்ந்த வீடு அழிந்துவிட்டது;  வாழ்வாதாரமாக இருந்த மரங்கள் வீழ்ந்துவிட்டது;  குடிநீர், துணி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் கூடக் கிடைக்கவில்லை; இழப்பீட்டை கணக்கிடுவதில் உள்ள குளறுபடிகளைத் தட்டிக்கேட்க, மக்களின் தோளோடு தோளாக "தொடர்ந்து" நிற்க யாருமில்லாமல் .  "நாதியற்றவர்களாக" நிற்கிறார்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள். அரசு விரைந்து செயல்படவேண்டிய தருணமிது,  

 

செந்தில் ஆறுமுகம்,

பொதுச்செயலாளர்,

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

No comments:

Post a Comment