Friday 24 July 2020

15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி

*15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி குறித்து அறிந்து கொள்வோம்!*
24.07.2020, தன்னாட்சி

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். மத்திய தொகுப்பு நிதியிலிருந்து, ஒன்றிய அரசின் பணிகளுக்காகவும், மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களின் பணிகளுக்காகவும், நிதியைப் பகிர்ந்தளிப்பது பற்றிய பரிந்துரைகளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் மத்திய நிதிக்குழு (Central Finance Commission) வழங்கிவருகிறது.

கடந்த காலத்தில், ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் மட்டுமே நிதிப் பகிர்வு நடந்துவந்த நிலையில், 1995 ஆம் ஆண்டு தொடங்கி, பத்தாவது மத்திய நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், உள்ளாட்சி அரசாங்கங்களுக்கும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. நம் நாட்டின் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்ட இந்த நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, நாமெல்லாம் செலுத்துகிற வரிகளால் கிடைக்கும் ஒட்டுமொத்த நிதியை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் பிரித்துக் கொள்கின்றன.

அந்த வகையில், தற்போது 2020 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான நிதி பகிர்வு பற்றிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட 15வது மத்திய நிதிக்குழு, 2020 - 21 நிதியாண்டுக்கான பரிந்துரைகளை மட்டும் தற்போது வழங்கியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த நிதியாண்டு (2020-21) முதல் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்கப்படும்.

*உள்ளாட்சிகளுக்கான 15வது நிதிக்குழு பரிந்துரைகள்*

நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. கிராமப்புற உள்ளாட்சிகளில். கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்று நிலை ஊராட்சிகளுக்கும் இந்நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நிதியாண்டில் தமிழக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியானது சுமார் 3607 கோடி ரூபாய்.
*அடிப்படை மானியம் (Basic Grant) மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானியம் (Tied Grant)*

இந்தத் தொகை சரிபாதியாகப் பிரிக்கப்பட்டு அடிப்படை மானியம் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானியமாக வழங்கப்படுகிறது. அடிப்படை மானியத்தை உள்ளாட்சிகள் தங்களின் வளர்ச்சிக்காக தாங்களே திட்டமிட்டுச் செலவு செய்து கொள்ளலாம். ஆனால் இந்நிதியினை ஊழியர்களுக்கான சம்பளம் அல்லது நிர்வாகச் செலவுகளுக்கு (Salary or Establishment Expenditure) பயன்படுத்தக்கூடாது.

அடிப்படை நிதியினை (Basic Grant), மக்கள் கிராமசபையில் தீர்மானிக்கிற பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதியை,
*சுகாதாரம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கான பணிகள்
*குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி
ஆகிய பணிகளுக்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். இந்த இரு இனங்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதியில் 50% ஒதுக்கிப் பயன்படுத்த வேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒரு இனத்திற்கான பணி ஏற்கனவே முழுவதும் பூர்த்தியாகி இருந்தால், அடுத்த இனத்திற்கான பணிகளை எடுத்துச் செய்யலாம் என்பது தெளிவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பணிகளுக்கான நிதியை மேற்கண்ட பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். அடிப்படை மானிய நிதியைப் போன்று செலவிட முடியாது.

குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதி, ஏற்கனவே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் குடிநீர் திட்டங்களான தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் அபியான் ஆகியவற்றோடு இணைத்துச் செலவிடப்பட வேண்டும். குறிப்பாக இந்த மானிய நிதியில் புதிய ஆதாரங்களை உருவாக்குவதோடு, ஏற்கனவே உள்ள நீர்வழங்கல் மற்றும் சுகாதாரம் சார்ந்த கட்டமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

*தமிழக அரசின் அரசாணை*
மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை (அரசாணை நிலை எண்: 116 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்: 25.06.2020), கிராம ஊராட்சிகளுக்கு இந்த நிதியாண்டில் (2020-21) வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகையான ரூ. 1803.5 கோடியை முறையே மாவட்ட ஊராட்சிகள் (5%) ஊராட்சி ஒன்றியங்கள் (15%) மற்றும் கிராம ஊராட்சிகள் (80%) என பிரித்து வழங்குகின்றது. நாம் இங்கே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த நிதி அனைத்தும் அடிப்படை மானிய நிதியாகும். குறிப்பிட்டப் பணிகளுக்கான நிதி அல்ல.

மத்திய நிதி அமைச்சகம் 17.06.2020 அன்று இந்த நிதி ஆண்டுக்கான (2020-21), தமிழகத்தின் மூன்றடுக்கு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய மொத்த மானிய நிதியில் முதல் தவணையாக 901.75 கோடியை விடுவித்துள்ளது. இதில்,
* 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 721.4 கோடி
* 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 135.2625 கோடி
* 36 மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.45.0875 கோடி
வழங்கப்பட வேண்டும். இந்த நிதியனைத்தும் அடிப்படை மானிய நிதி. மத்திய அரசு இந்த நிதியை விடுவித்த நாளிலிருந்து (அதாவது 17.06.2020), 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டு இருக்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படாமல் இருந்தால், மாநில அரசு வரையறுக்கப்பட்ட வட்டியையும் ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும்.

*அடிப்படை மானிய நிதி, அடிப்படை உரிமை!*

மேற்குறிப்பிட்டுள்ள நிதிப் பகிர்வு சம்பந்தமான விவரங்களை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்டப் பெருந்தலைவர் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோர் விரிவாக இது பற்றி அறிந்து கொண்டு நம் மக்களுக்கான நிதி முறையாகச் செலவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அடிப்படை மானிய நிதியை, மத்திய நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் செலவு செய்வதற்கு முழு சுதந்தரமும், அதிகாரமும் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு உண்டு. முறையான தீர்மானங்களை இயற்றி கிராமசபை ஒப்புதலைப் பெற்று பணிகளைச் செய்யலாம். இதில் ஒப்பந்ததாரர்கள் தலையிடவோ, துறை ரீதியான தலையீட்டினையோ ஊராட்சி தலைவர்களோ, வார்டு உறுப்பினர்களோ கிராம மக்களோ அனுமதிக்கவே கூடாது. இது ஊராட்சி மக்களுக்கான நிதி. அடிப்படை மானியம் என்பது ஊராட்சியின் அடிப்படை உரிமை. அதை விட்டுக் கொடுத்து விடக்கூடாது.

தேவையற்ற தலையீடு இல்லாமல் ஊராட்சிகளின் சுதந்தரத்தைப் பறி கொடுக்காமல், மேற்குறிப்பிட்டுள்ள மத்தியநிதிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் தமிழக அரசாணையின் தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, இந்த அடிப்படை மானிய நிதியை அதன் நோக்கங்களை அடைவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவோம்.

உள்ளாட்சியில் நல்லாட்சிக்கானப் பணியில் உங்களுடன், 'தன்னாட்சி' எப்போதும் இணைந்திருக்கும்.

மிக்க அன்புடன்,
க.சரவணன்
தலைவர்
97512 37734

எஸ்.நந்தகுமார்
பொதுச் செயலாளர்
90032 32058

தன்னாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.
thannatchi@gmail.com / 94457 00758

No comments:

Post a Comment