Monday 5 December 2022

PRESS RELEASE, 05-12-2022

PRESS RELEASE


பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா, தி.நகர், சென்னை, ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.12.2022) காலை 9:30 மணிக்கு நடைபெற்றது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை முற்றிலும் மனப்பாடம் செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில் அறம் வளர்க்க திருக்குறளைப் போன்ற ஓர் ஒப்புயர்வற்ற நூல் இல்லை.

இதை மனதில் கொண்டு தமிழக அரசு, பள்ளி மாணவர்கள் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும் 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி, பரிசுத் தொகையையும் உயர்த்துவதாக அறிவித்தது.

அந்த அறிவிப்பின் நீட்சியாக திருக்குறளை மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அறம் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம் , சர்வீஸ்2சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் சேர்ந்து உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தைத் தொடங்கியது.

"உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" என்ற தன்னார்வ அமைப்பு மூலம் திருக்குறளை உலகெங்கும் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக கொண்டுசெல்லவும்,  1330 திருக்குறளையும் முற்றோதல் செய்து ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் ரூபாய் 10,000 மற்றும் அரசின் சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாகவும், ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  இலவசமாக பயிற்சியளிக்க திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் கவனகம் சார்ந்த பயிற்சியில் அனுபவம் உள்ள, திருக்குறள் முற்றோதல் முடித்த  பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

இம்முயற்சியில் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்பு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2000 திருக்குறள்  நூல்கள் வீதம் சென்னையையும் சேர்த்து ஆண்டுக்கு 80000 (எண்பதாயிரம்) திருக்குறள் நூல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விலையில்லாமல்  வழங்க முன்வந்துள்ளது.  திருக்குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய இந்நூலை உலகத் தமிழ் வளர்ச்சி மன்ற வழிகாட்டுதலுடன் வானதி பதிப்பகம் அச்சிட்டு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்திடம் வழங்குகிறது.

முற்றோதல் முடித்த மாணவர்கள் திருக்குறள் பொருள் உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வழிவகை செய்தலும்  இத்திட்டத்தில் அடங்கும்.

"நிற்க அதற்குத் தக" என்ற குறிக்கோளைத் தாங்கி உருவாகியுள்ள "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்", ஒரு தன்னார்வ அமைப்பாக, இதுவரை திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை இணையத்தில் பட்டியலிட்டு அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதலை, உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துவருகிறது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திரு. சா.மார்ஸ் வரவேற்புரை வழங்கினார். கல்வியாளர் திரு.ராஜராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த பின்புலத்தில் திருக்குறள் நூல்களை இவ்வாண்டு, முதல் மாவட்டமாக சென்னைக்கு வழங்கி மாண்புமிகு கல்வியமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள் 05-12-2022 (திங்கள்கிழமை) அன்று தொடங்கிவைத்து  சிறப்புரையாற்றினார்

அமைச்சர் உரையில்

திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் முன்னெடுப்பில் வழங்கப்படும் 80000 திருக்குறள் நூல்களை தொடங்கிவைத்து, முற்றோதல் பயிற்சி ஆசிரியர்களை  வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் முக்கியமானவர்கள் மாணவர்கள், அவர்களையும் ஆசிரியர் பெருமக்களையும் பாராட்டுகிறேன்.  
இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பார்த்தசாரதி
,                                                             திரு.ராஜேந்திரன் IRS(ஓய்வு)  மற்றும் திரு. ரவி சொக்கலிங்கம் ஆகியோரை  வாழ்த்துகிறேன்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச்  சார்ந்த இலக்கியா அருமையாக திருக்குறள் சொல்லுவது  இரு தினங்களுக்கு முன்பு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மையாக வந்துள்ளதை  நினைவுபடுத்துகிறது.

முதலமைச்சர் குறிப்பிட்டதைப்போல தமிழரசன், தமிழரசி என்று தமிழ் உணர்வுடன் பெயர் வைக்கிறார்கள் என்றால் நம் தமிழ் மக்கள் மொழியின்மீது கொண்டுள்ள பற்றின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

முத்தமிழ் அறிஞர்  கலைஞர் செய்த திருக்குறள் தொடர்பான செயல்பாடுகளை குறிப்பிட்ட அமைச்சர் சட்டசபையில் திருவள்ளுவர் படம் வைத்ததையும், கன்னியாகுமரியில் சிலை நிறுவியதையும், கலைஞரின் திருக்குறள் உரையையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.  

இந்நிகழ்ச்சியில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. .பார்த்தசாரதி, திரு. சி.இராஜேந்திரன் IRS (ஓய்வு) மற்றும் திரு. இரவி சொக்கலிங்கம் ஆகிய மூவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் திரு.செந்தூர்பாரி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியில் தமிழக அளவில் ஈடுபட்டுள்ள மண்டலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் மாவட்டப் பயிற்சியாளர்கள்  ஆகியோருக்கு கல்வியமைச்சர் பொன்னாடை போர்த்தி பட்டயம் வழங்கி சிறப்பு செய்தார்.

1.     திருக்குறள் துயர் திரு. .கோபி சிங் , தஞ்சாவூர்

2.     திருக்குறள் நினைவாற்றலர் திரு. .தமிழ் மகிழ்நன், திருக்கழுக்குன்றம்

3.     திருக்குறள் திரு. .காமராசு, திருவண்ணாமலை

4.     திரு. .கோ.பழனி, சென்னை

5.     தமிழ்த்திரு. தமிழ்க்குழவி , நாகர்கோவில்

6.     திருமிகு. வசந்தி ராஜராஜன், சென்னை பெருநகரப் பயிற்சியாளர்

7.     திருமிகு. சங்கீதா கண்ணன், அரியலூர் மாவட்டப் பயிற்சியாளர்

8.     திருமிகு. பி.கற்பகவல்லி, செங்கல்பட்டு மாவட்டப் பயிற்சியாளர்

புகைப்படங்கள் - காணொளிகள்:

https://drive.google.com/drive/folders/1IFq9oMBEvxGPh1rVKoo4Tc8RWp2HWUsi?usp=sharing

 

              


 

நன்றி..

ஒருங்கிணைப்பாளர்கள் - உலகத்  திருக்குறள் முற்றோதல் இயக்கம்

.பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்,

சி.இராஜேந்திரன், IRS (ஓய்வு), ஒருங்கினைப்பாளர் வள்ளுவர் குரல் குடும்பம்,

திரு.ரவி சொக்கலிங்கம், ஒருங்கிணைப்பாளர், சர்வீஸ் 2 சொசைட்டி.

E-Mail : Kural.mutrothal@gmail.com | Website:  https://thirukkural.valaitamil.com

தொடர்புக்கு: 7305571897

 

No comments:

Post a Comment