Sunday 4 December 2022

Press Release - பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா - 05.12.2022

பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், 
இணைந்து நடத்தும்
பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா

இடம்: ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17.
நாள் : 05.12.2022, நேரம்: காலை 9.30 மணி

உலகப் பொதுமறையாம் திருக்குறளை முற்றிலும் மனப்பாடம் செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில் அறம் வளர்க்க திருக்குறளைப் போன்ற ஓர் ஒப்புயர்வற்ற நூல் இல்லை.

இதை மனதில் கொண்டு தமிழக அரசு, பள்ளி மாணவர்கள் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும் 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி, பரிசுத் தொகையையும் உயர்த்துவதாக அறிவித்தது.

அந்த அறிவிப்பின் நீட்சியாக திருக்குறளை மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அறம் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம் , சர்வீஸ் சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் சேர்ந்து உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தைத் தொடங்கியது.

"உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" என்ற தன்னார்வ அமைப்பு மூலம் திருக்குறளை உலகெங்கும் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக கொண்டுசெல்லவும்,  1330 திருக்குறளையும் முற்றோதல் செய்து ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் ரூபாய் 10,000 மற்றும் அரசின் சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாகவும், ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  இலவசமாக பயிற்சியளிக்க திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் கவனகம் சார்ந்த பயிற்சியில் அனுபவம் உள்ள, திருக்குறள் முற்றோதல் முடித்த  பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. 

இம்முயற்சியில் அமெரிக்காவின் மேரிலாந்தில் தமிழ்ச்சேவை புரிந்துவரும் ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர் மருத்துவர். ஜானகிராமன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் "உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்" என்ற அமைப்பு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2000 திருக்குறள்  நூல்கள் வீதம் சென்னையையும் சேர்த்து ஆண்டுக்கு 80000 (எண்பதாயிரம்) திருக்குறள் நூல்கள்  வீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விலையில்லாமல்  வழங்க முன்வந்துள்ளது.  திருக்குறள் முனுசாமியார் உரையுடன் கூடிய இந்நூலை உலகத் தமிழ் வளர்ச்சி மன்ற வழிகாட்டுதலுடன் வானதி பதிப்பகம் அச்சிட்டு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்திடம் வழங்குகிறது. 

முற்றோதல் முடித்த மாணவர்கள் திருக்குறள் பொருள் உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வழிவகை செய்தலும்  இத்திட்டத்தில் அடங்கும். 

"நிற்க அதற்குத் தக" என்ற குறிக்கோளைத் தாங்கி உருவாகியுள்ள "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" , ஒரு தன்னார்வ அமைப்பாக, இதுவரை திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை இணையத்தில் பட்டியலிட்டு அவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதலை, உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துவருகிறது. 

இந்த பின்புலத்தில் திருக்குறள் நூல்களை இவ்வாண்டு முதல் மாவட்டமாக சென்னைக்கு வழங்கி மாண்புமிகு கல்வியமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள் 05-12-2022 (திங்கள்கிழமை) அன்று தொடங்கிவைக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், முதன்மைக் கல்வி அலுவலர், தலைமையையாசிரியர்கள், மாணவர்கள், திருக்குறள் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். 

அரசுப்பள்ளி, கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் மிக முக்கியத் தொடக்கமாக அமையவிருக்கும் இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடங்கங்களின் வழியே மக்களுக்கு கொண்டுசேர்க்க அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி..

ஒருங்கிணைப்பாளர்கள் - உலகத்  திருக்குறள் முற்றோதல் இயக்கம் 

ச.பார்த்தசாரதி, 
வலைத்தமிழ் 

சி.இராஜேந்திரன், IRS (ஓய்வு), 
ஒருங்கினைப்பாளர் வள்ளுவர் குரல் குடும்பம், 

திரு.ரவி சொக்கலிங்கம், 
ஒருங்கிணைப்பாளர், சர்வீஸ் 2 சொசைட்டி.

E-Mail : Kural.mutrothal@gmail.com | Website:  https://thirukkural.valaitamil.com
தொடர்புக்கு: 7305571897

Event Location Map: https://maps.app.goo.gl/9q5jQZnp4TsiyNqS9
ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை-17

 

 

 

 

No comments:

Post a Comment