Wednesday 7 June 2023

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களைக் கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா? - தன்னாட்சியின் கண்டன அறிக்கை

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களக் 

கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா?

தன்னாட்சியின் கண்டன அறிக்கை


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்கள், 'கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு' சார்பாக புளியந்துறை ஊராட்சித் தலைவர் தோழர் நேதாஜி அவர்கள் முன்னிலையில் கடந்த மே 18, 2023 அன்று 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) தொடர்பான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளுக்கு (E-Tenders) ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராடிய கிராம ஊராட்சித் தலைவர்களை காவல்துறையினர் மிக மோசமாக நடத்தி, இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். அதைக் கண்டித்து காவல்துறைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர் காவல்துறையினர்.

 

ஏற்கனவே ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல புகார்களை ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட அளவில் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் ஊராட்சித் தலைவர்கள் நடத்தியுள்ளனர். கடைசியாகக் கூட்டமைப்பின் ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் மே 5, 2023 அன்று ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அறவழியில் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் அவர்களைச் சட்ட விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்றும் பாராமல் சட்டையைப் பிடித்தும், குண்டு கட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த கண்ணியமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறது தன்னாட்சி.  

 

ஊராட்சி அளவில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும் கிராம ஊராட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்பது விதியாகும். குறிப்பாக பட்டியல் பிரிவு மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்குப் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தான் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு இந்தியக் குடிமகன்களுக்கும் அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகும். ஆனால் மேலுள்ள எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்து கொண்ட ஒன்றிய அளவிலான அலுவலர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரின் மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. மேலும் தோழர் நேதாஜி உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி.

 

மேலும் இது போன்று ஊராட்சி அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் தலையீடுகள் இருப்பதாகக் கூறி ஊராட்சித் தலைவர்கள் போராடுவது தமிழ்நாடு முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. அரசு உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிற்குத் தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in



No comments:

Post a Comment